Tuesday, 22 September 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)



சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (15)

- குணன்


சென்ற நினைவுத்துளியில் சொட்டிய மதவுணர்வுகளும் நடைமுறைகளுமானதான நம்மவர்களின் நடாத்தைகளைக் கொண்டதாகவிருந்தது. சுயவிமர்சனமும் சுயசிந்தனைத் தெளிவும்தான் மனதைப் பண்படுத்தும் என்பதில் அசையா ஈடுபாடுள்ளவன் நான். சென்ற தொடரின் நீட்சியாகவே இதுவும் அமைகிறது.


மயத்தை முன்னிலையாக வைத்து, கூறப்படும் பாவம், புண்ணியம், விதி, கர்மம், தானம் போன்ற விளக்கங்களும், அதற்கான சமயம் சார்ந்து (எத்தகைய அறிவுசார்நத தெளிவும் அற்று, அன்றி), கூறப்படும் விளக்கங்கள், அக்கால மக்களின் அறிவுக்கு ஏற்றவாறு நம்பக்கூடியவாறும், ஏமாற்றுத்தனமாகவும் புகுத்தப்பட்டதும், ஒரு குறிப்பிட்டவர்களால், நலன் சார்ந்து நடைமுறைப்பட்டதுமேயன்றி வேறொன்றல்ல என்பது தெளிவாகிவிட்டது! இந்துக்கள்- சைவர்கள், வைஸ்ணவர்கள், காணபத்தியம் போன்ற அறுசமயப் பிரிவுகளைக் கொண்டாலும், முரண்பட்ட தத்துவங்கள், வழிபாடுகள் எனக்கூறி, பரந்து பட்ட மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

மக்களை முடிந்தவரை, தாம் சார்ந்த சமயங்களின் கருத்தாழத்தை எடுத்துக்கூற முடியாத நிலையில், சிந்தனை வளர்ச்சியில்லாது, தம்மால் முடிந்தவரையில் மக்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்வதற்காக வேண்டி பிற்போக்கும், அவநம்பிக்கையும் வளர்க்கும் பலவகைச் செயற்பாடுகளில் மதவாதிகளும், அவர்களுக்கு துணை நிற்பவர்களும் காலங்காலமாக சாத்திரம், விதி, தோசம், கர்மம் என்றெல்லாம் பலவாறு கூறி, மத நம்பிக்கை உடையவர்களைக்கூட தன்னம்பிக்கை, முயற்சி, வாழ்க்கைப் பிடிப்பு என அனைத்திலும் சந்தேகங்கொள்ளும்படி மாற்றி விடுகிறார்கள். இதனையே, புலம்பெயர் நாடுகளிலும் பரந்து காண முடிகிறது!

புலம் பெயர்வு தொடங்கிய போதே, “வெளி நாடு செல்லும் வாய்ப்பு“ கைரேகையில் பார்த்துக்கூறிக் கேட்ட கதை பற்றிய அனுபவம் எனக்கு 30 வருடங்களுக்கு முன்பே எனது நண்பனால் கிட்டியது. கிராமங்களில் கைரேகை, மற்றும் திருமணம் போன்ற எண்ணங்களை கிளப்பும் குறவர் கூட்டம் அவ்வப்போது வலம் வருவதெல்லாம் காணமுடிந்ததும், வீடுகளில், தனித்து இருப்பவர்களை ஏமாற்றிவிட்டு கையில் அகப்பட்டவற்றை அப்பிக்கொண்ட கதைகளும் நடந்தேறிய கதைகள் தான்!

இவ்வாறு, நடந்தேறிய சிறிய –மிக மிக- சிறிய, தங்கள் வறுமை காரணமாக நடத்தைகள் பற்றிய செய்திகள் எங்குமே பரவி விடும்! ஆனால், மக்கள் கண்களில், மண்ணைத் தூவி, காயகல்பம், தாயத்து போன்றவற்றின் மூலம் குறை தீர்ப்பதாக பெருந்தொகைச் செலவில் நடந்தேறிய நிகழ்வுகள் புலப்பெயர்வில் இடம் பெற்றதும், இதன் மூலம் ஏமாறிய கதைகளும் ஏராளமாகவே 'அந்தக் குறவர்கள்' இங்கில்லாத போதிலும் நடந்துள்ளன.

இலங்கை வாழ் தமிழ்மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். அம்மொழி உலகின் வாழும் ஆதிப் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றென்பது மிகைப்படும் செயதியுமன்று! தமிழரின் கடவுட் கோட்பாடு யாதென வினவின் அதனை தமிழ்ச் சங்ககால இலக்கிய அறிவுடையவர்கள்-அதுவும், ஆராய்ந்துணர்ந்தால் மட்டுமே அதனை ஒருவாறு தெளிந்துகொள்ள முடியும். இன்று, குறிப்பாக சைவசமயம், தமிழர்களில், பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயம் என்பது தவறான கருத்தல்லவாயினும், உண்மையில், "சைவர்கள் என்பவர் யாவர்?", சைவ சமயத்தை தவறாது, பின்பற்றுபவர் யாவர்? என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

தமிழரின் கடவுட்கோட்பாட்டை ஆதிமுதலாக, அதன் தொடக்கம் பற்றி ஆராய்ந்து, தமிழர் மதம் என்ற தலைப்பில் நூல் எழுதிய, அறிஞர் மறை மலை அடிகளார், தனித் தமிழ் இயக்கத்தை தொடக்கியவருமாவார். அவர் 'மதம்' என்ற சொல் கி.பி.3ம் நூற்றாண்டிற்குப் பின்னரே அறிமுகமாகியதென்றும், அதுவும் இன்று குறிப்பிடுவதை போல, கருதப்படவில்லை என்பதையும், ஆதியில் செம்பொருளாகிய ஒளியை இயற்கை வழிபாடகத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதையும் விளக்கியுள்ளார். அத்துடன் ஆதிச் சமயமாகிய சைவ சமயமே காஸ்மீரந்தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்து, திராவிடர்களுடன் போரிட்ட வந்தேறு குடிகளாகிய ஆரியர்கள், தெற்கு நோக்கிப் பரவியதன் விளைவாக, மேலை நாட்டவர்களால் அறிமுகமாகிய, “இந்தோ-ஆரியர்கள்“ எனக் குறிப்பிடப்பட்டார்கள்.

அத்துடன், அவர்களின் கடவுள்களைப் புகுத்தியதுடன், அதற்கும் திராவிட மக்களின் கடவுளருக்கும் உறவுமுறையும் கூறி, புராணங்களைப் படைத்தார்கள். உதாரணமாக, ஸ்கந்தபுராணத்தில் கூறப்படும் சுப்பிரமணியர் வேறு என்றும் கந்தன்- கந்தகழி எனக் கூறப்படுவதும் வேறு எனச் சிறந்த தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர் சிதம்பரநாத செட்டியார் ஆராய்ச்சி செய்துள்ளார்.

மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில்,
“தெய்வ மென்பதோர் சித்தமுண்டாகி, முனிவிலாததோர் பொருளது கருதலும், ஆறு கோடி மாய சக்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின, ஆத்தமானர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பினர்……………. விரதமே பரமாக, வேதியருஞ் சரதமாகவே சாத்திரங்காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களில், அமைவதாக அரற்றி மலைந்தனர்!" (போ.தி.அகவல்)
என்று பாடிய கருத்துக்களில் அறிந்துகொண்டால், பிற சமயங்களினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய படையெடுப்பு, தமிழரின் சமயம், மொழி, பண்பாடு, இனம், நாடு என எல்லாவற்றையும், விழுங்கியதோடு அந்த ஆக்கிரமிப்பாளர்களே, நமது மீட்பாளர்கள்- வழிகாட்டிகள், என தலைகளில் தூக்கி வைத்ததுடன் எமது மூலகங்கள் எதென அறிய முடியாத அறியாமைக்குள் வீழந்துள்ளோம். இதை வெளிச்சம் போட்டு, வெற்று வேட்டுத் தனங்களில் அல்லாது மாணிக்கத் தமிழில், மனம் நைந்துருகிப் பாடிய அன்றைய நிலைக்கும், இன்றைய நிலைக்கும் என்ன தான் திருத்தம் பெற்றுள்ளோமோ? என்பது செம்பொருளுக்கே விளக்கம் காண்! மாணிக்கவாசகர் மணிமொழி வாசகத்தில், தமிழும் தமிழர் சமயமும் அடைந்த நிலை கண்டே, வரலாற்றுச் செய்தி போல பாடினார்!

ஆனால், இன்றும் இனிவருங் காலத்திலும், இதுபோன்ற உண்மைகள் அறிந்து நேர்செய்யா விட்டால், அதனைப் பதிந்து வைக்கவும், ஏன் படித்து, உள்ளம் பதைக்கவும் கூட முடியாத தலைமுறையினராகத் தான், எதிர்கால வேடிக்கை மனிதனாக தமிழன் இருப்பான்? நீண்ட அரசியல், சமய, பண்பாட்டு ஒடுக்குமுறை வரலாற்றுக்கு உட்படுத்தப்பட்ட காரணங்களின் விளைவாக தங்கள் உண்மைத்தன்மைகளை முழமையாக இழந்தோ, மறந்தோ போன இனமாக, தமிழர்கள் உள்ளார்கள்!

அன்று, வடக்கிலிருந்து வந்து, தமிழ் மன்னர்களை, கைக்குள் போட்டு, சுக போக வசதிகளையும், செல்வாக்கையும் தமதாக்கி, தமிழ், தமிழர் சமயம், தமிழ் மண், ஆட்சியைக் கைப்பற்றியவை புனைவுகள் அன்றி உண்மையாகும்! சைவசமயிகளாகிய நம் முன்னோர்கள், சமண, பௌத்த, வைஸ்ணவ மதங்களுடன் சேர்ந்தவர்களாகிய நிலைக்குள் மாற்றப்படாது.

தனிமுதல் (அரு, உரு அற்ற)ஒண் பொருளாகிய, செம்பொருள் -சிவன் என்ற ஒளியை, “சேயோன்- சிவன்“ என்ற பேதமற்ற இறைவனாக போற்றி வணங்கினர்! இதனை, தொல்காப்பியம் உறுதி படுத்தியுள்ளது. பண்டைய தமிழர் வணக்கம் இயற்கை வயப்பட்டதன்றி, புராண வயப் பட்டிருக்கவில்லை மேலும், முருகன் வேறு- சிவன் வேறு என்ற கருத்து பிறர் வருகையால் புகுந்த ஒன்றாகும்! இது பற்றிக் குறிப்பிடுகையில் மறை மலையடிகள், “கி.பி.முதலாம் நூற்றாண்டின் பின் தமிழ் நாட்டிற்குள் தொகுதி தொகுதியாக, புகுந்தவர்கள், தமிழ் நாட்டில் நிலவிய சிவநெறி பற்றியும், அதனைக் கடைப்பிடித்த சிவநெறி பற்றியும் தெரிந்துகொண்டார்கள்!“ என்றவாறு அறியலாம்.

சைவசமயத்தின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழரின் கல்வி முயற்சிக்கும், ஈழத்திலும், தமிழ் நாட்டிலும், “சைவப் பாட சாலைகளை நிறுவியும், சிறுவர், முதியோர் அனைவருக்கும் சைவ, இலக்கண, வசன நடையில் நூல்களை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணயிலும், தமிழ் நாட்டில் சென்னையிலும் அச்சுயந்திரசாலைகள் நிறுவியும், தொல்காப்பியம் உட்பட சமய, சங்க, புராண, தமிழ் நிகண்டு என பலவற்றை, ஆய்ந்தறிந்து, பதிப்பித்து வெளியிட்டதுடன், பதிப்புத்துறையில் முன்னோடிகளாகிய தமிழ் தந்த யாழ்ப்பாணம், சிறுப்பிட்டிவாசியும், புதுக்கோட்டை நீதிபதியும் ஆகிய இராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, "தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்" போன்றவர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தார். "இத்தகைய ஓர் மாபெருந் தமிழ் அறிஞர் அன்றி, வேறு எவரால் தமிழரின் உயிர்த் துடிப்பெனப்படும் திருக்குறள் நூல் பிழையின்றி பதிப்பிக்க முடியும்?" என்றவாறு காலஞ்சென்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பெர்லின் நகரில் வாழும் தமிழர்களால் 1993ல் நடாத்தப்பட்ட வேளை உரையாடிய போது கூறக் கேட்டது நினைவில் வருகிறது.!

தமிழறிஞர், திருவாரூர் கலியாணசுந்தரமுதலியார் (திரு.வி.க.) தமிழ் நாடு ஈன்ற சிறந்த சைவ- தமிழ்- அறிஞர், தொழிற்சங்க வாதி, பத்திரிகையாளர், சிறந்த மேடைப் பேச்சாளர், திருக்குறள் மீதும், அதன் ஆசிரியர் மீதும் தாழாத பக்தியுடையவர், சிறந்த உரை -பதிப்பாசிரியர். இவரின் தமிழறிவைக் கேட்டு, மயங்கிய ஜேர்மனிய தமிழ் அறிஞர் டாக்டர் பெய்த்தான் என்பவர், இவரை பேர்லின் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் போராசிரியராக பதவி ஏற்று தமிழ்ச் சுவை பொழியக் கேட்டிருந்தும் மறுத்துவிட்டார் என்பதை அறியவருத்தமாகவே இருந்தது!இவர் தமிழ்ப் பதிப்புத்துறை பற்றிக் குறிப்பிடுகையில், “தமிழ்ப் பதிப்புகத்துறைக்கு கால்கோள் நாட்டியவர் நல்லூர் ஆறுமுக நாவலர், தூண்கள் எழுப்பியவர் தமிழ் தந்த இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, கூரை இட்டு நிறைவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள்" எனக் குறிப்பிட்டதிலிருந்தே இம் மூவரும் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியனவாகுமென்பதை அறுதியிடலாம்.

இவர்கள் மூவரும், முன்னோடிகளாக, தமிழ், சைவம், பதிப்பு ஆகிய முத்துறைகளிலும் முத்திரை பதித்த பெரியார்கள்! ஆயினும் தனித்து நின்று, தமிழ் கற்கும் பொருட்டும், சைவநெறி புகட்டும் பொருட்டும், அன்றைய ஆட்சியாளரின் உதவியின்றி, தாமே பாடசாலைகளை நடாத்தித் தொண்டு புரிந்தவரை 1968ல், தமிழ் நாட்டில், அண்ணா தலைமையில் இடம் பெற்ற தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்ட இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில், 'ஆறுமுகநாவலருக்கு தகுந்த பெருமை செய்யாது விட்டதன் மூலம், தமிழ் நாடு தன்னையும், தமிழையும் சிறுமை செய்தார்களா?' என ஈழத்தில் குமுறல் எழத்தவறவேயில்லை!

000000000
பின் இணைப்பு:

1. மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)
புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் த்ஹனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சாதிசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டு கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு மறைமலை அடிகளார் தலமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்று கூடி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவாக, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவர் பிறந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழர் “ஆண்டுக் கணக்கு” தொடங்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
(நன்றி: விக்கி பீடியா)

2. செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901)
யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்த அப்பெரியார், செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

தாமோதரம் பிள்ளை, தமது இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' எனும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தக் கவர்ந்தார். 1868 ஆம் ஆண்டு, தமது முப்பத்தாறாம் வயதில், தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையைப் பதிப்பித்தபோது, நல்லூர் ஆறுமுக நாவலரின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டார், தாமோதரம்பிள்ளை. அதனைத் தொடர்ந்து 'வீரசோழியம்', 'திருத்தணிகைப் புராணம்', 'இறையனார் அகப்பொருள்', 'தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை ஆகிய பழமையான நூல்களச் செம்மையாகப் பதிப்பித்து, புலமை கொண்ட சான்றோரின் புகழ்க் கைக்கொண்டார் தாமோதரம்பிள்ளை.

பிள்ளைவாளின் பேரார்வமும், பேருழைப்பும் - பேணுவாரற்று நீர்வாய்ப் பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, தனிப் பெரும் பழைய இலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அரிய சொத்துகளாக்கின. எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே திண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துக்களோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை உழுது கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளை, பூக்களைத் தொடுவதுபோல் மெல்ல மெல்ல அலுங்காமல் நலுங்காமல் பிரித்தெடுத்து, பிரதி செய்து, பதிப்பித்த அப்பெருந்தகை, 'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார்.

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில், வழிகாட்டியாக அமைந்தார். தொல்காப்பியத்தப் பதிப்பித்தபோது, 'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகணட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' என அப்பெருமகனார், தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எண்ணிப் பார்க்கத்தக்கது. 'தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்' என்ற அரிய நோக்கங்களால், உரிய தொண்டாற்றிய ஒரு பெரும் தமிழார்வலராய்த் திகழ்ந்தார், தாமோதரம்பிள்ளை.

ஏட்டுப் பிரதியிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். விளக்கத்தோடு அதனை வெளியிடத் தனிப்புலமை வேண்டும். திறமையும் புலமையும் கொண்டிருந்த தாமோதரனார், பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு, படைப்பாற்றலிலும் ஆர்வம் மிகக் கொண்டு, பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,
"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் - வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ - பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான் கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"
என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் "எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதபிள்ளையின் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார், தாமோதரம்பிள்ளை. அன்னையார் பெயர், பெருந்தேவி அம்மாள். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில், ஆசிரியர் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டு, 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமை பெற்றார். இளைய பருவத்தில் தாமோதரனார் கொண்ட நூல் வெளியீட்டு ஆர்வமே, தமிழ் மக்களுக்குத் தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் நூல் உருவில் பெற்றுத் தந்தது. அழிந்து மறைந்து கொண்டிருந்த ஏட்டுச் சுவடிகள் பல, அச்சு வாகனமேறி, தமிழுக்குத் தனிப் பெருமையைக் கூட்டின!

(நன்றி: தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் நூல் -
http://kanaga_sritharan.tripod.com/cythamotharampillai.htm)




3. உலகத் தமிழ் மாநாடு World Tamil Conference
உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தீவிர முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று இந்த மன்றம் வரையறுத்துக் கொண்டது. 1966-ம் ஆண்டு, ஏப். 17-ம் தேதி முதல் 23 வரை கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தனது தமிழ்ப் பயணத்தை தொடர்ந்தது இந்த மன்றம். தொடர்ந்து 1968-ல் சென்னையில் 2-வது உலகத் தமிழ் மாநாடும், 1970-ல் பாரீஸில் (பிரான்ஸ்) 3-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 3 மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன. 4-வது மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் யாழ்பாணத்திலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் (ஆப்பிரிக்கத் தீவு) 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடைபெற்றன. அவரது மறைவுக்குப் பிறகு, 5-ம் மாநாட்டை தொடர்ந்து எடுத்து நடத்த போதிய சக்தியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணம். மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
(நன்றி: மண்ணடிகாகா சமுதாய மாத இதழ்
http://markaspost.wordpress.com)


8-வது மாநாடு நிறைவு பெற்று இதுவரை 13 ஆண்டுகளைக் கடந்த பிறகு 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிவித்தல் இப்போதுதான் வெளிவந்துள்ளது. 21-ம் நூற்றாண்டாகிய தற்போது பூமிப் பந்தில் புதிய தலைமுறைகளுடன் தடம் பதித்துள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தால் இனிவருங்காலத்தில் இந்நிகழ்வு தனிநாயகம் அடிகளாரின் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்.

நினைவுத் துளிகள் சொட்டும்...

2 comments:

  1. தமிழறிஞர்கள் பற்றிய நினைவு கூறல் முக்கியமானது. பலரும் படித்து தெரிந்து விவாதிக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய பதிவு.

    ReplyDelete
  2. மாதவராஜ் அவர்களே
    தங்களது வருகைக்கும் பதிவிடலுக்கும் நன்றிகள்

    ReplyDelete