Saturday 15 August 2009

சரம் - 16 பெண்ணியம் - தொலைக்காட்சித்தொடர் - இளையோர்


சரம் - 16
பெண்ணியம் - தொலைக்காட்சித்தொடர் - இளையோர்

இது ஒன்றும் கட்டுரைத் தலைப்பல்ல. வெயில் கொழுத்தும் கோடை என்றால் உடனே இங்கு இருக்கும் நம்மவர்கள் போடும் திட்டம் 'கிறில் பாட்டி' (grill party) உணவை திறந்தவெளியில் தீ மூட்டிச் சுட்டு பகிர்நது சாப்பிடுவதும் கலந்து பேசுவதும் நல்ல விருப்பமான குடும்பப் பொழுதுபோக்கு ஆகும். குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்தமானதாக இது அமைவதால் இந்தக் கோடைவிடு முறையில் செர்மனிச் சிற்றூரான சுண்டனுக்கருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நான்கு குடும்பங்கள் ஒன்றிணைந்தது.

பிள்ளைகள் பந்து விளையாடிச் சாப்பிட்டனர். பெண்கள் ஆண்களென பெரியவர்கள் இதற்கான அடுப்பில் கரியிட்டு தீ மூட்டி உணவைப் பதமாகத் தயாரித்து திறந்த வெளியில் உண்டபடி கலந்துரையாடினர்.

மலைக் கிராமத்தில் ஒரு சிறிய அருவி இவ்விடத்தில் வளைந்து செல்லும் 'சல சல' ஓசையும் பார்க்குமிடமெல்லாம் பசுமையான மரங்களுமாக மனதைக் கவரும் அருமையான இடம். பக்கத்தில் குடிமனைகளே கிடையாது. ஆனால் இவ்விடத்தில் ஓய்வெடுப்பதற்காக மகிழ் ஊர்தியில் செர்மானியர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர்.

பேச்சு பல்வேறு விடையங்கள் பற்றியும் இருந்தது. இதில் சிகாமணி அண்ணர் நகைச் சுவையாக தன் இளமைக்கால ஊர்க் கதைகளை நினைவுகூர்ந்தார். அவருடன் அவரது நண்பர் இளவயது ஊர்த்தோழன் றாபீக் குடும்பமும் கலந்துகொண்டதானது பழைய முல்லை வாலிபர் சங்கக் கதைகளை நினைவூட்டியிருந்தது. சும்மா சொல்லக் கூடாது வர்ணனையின் போதே இந்த நினைவுகளால் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார்.

இப்படியாக கழிந்த மாலையில், இறைச்சிகளை பதமாக சுட்டுக் கொண்டிருந்த பெண்கள் தங்களுக்குள் பகிடிவிட்டுதாலோ என்னவோ விழுந்துவிழுந்து சிரித்தனர். இதனால் அப்பக்கம் திரும்பிய என்னைப் பார்த்து சிகாமணி அண்ணர்,
"நான் மேடைகளில் பேசும் போது என் பிள்ளைகள் வினவிய கேள்விகளுக்கான விபரங்களைத்தான் பேசுவது வழக்கம். இதுதான் பொதுமக்களுக்குப் பிடித்ததாக தேவையானதாக அப்பிளாஸைத் தரும்" என்றார்.

"ஆ!! அப்படியா?" எனது வாய் பெரிதாகவே பிளந்திருக்க வேண்டும்.

"இதுலே... நிறையவே விசயங்களிருக்கு. பிள்ளைகளின் தொடர்பாடலும் சிந்தனைகளும்தானே நாளைய நடைமுறையாகப் போகுது."

விடயம் யதார்த்தமானதாக இருந்ததால், ஆவலுடன் அவரது முகத்தைப் பார்த்தேன்.

"அன்றொரு நாள் எனது மகன் என்னைக் கேட்டான ஒரு கேள்வி அப்படியே அசந்து போய்விட்டேன்." என்றார் முகத்தை ஆச்சரிய பாவத்தில் வைத்தவாறு. சிற்நத மேடைப் பேச்சாளருக்கேயுரிய இலாவகம் அப்படியே அனைவரையும் கவர்ந்தது.

"அப்படி என்ன கேட்டான்?" ஆர்வம் என்னைக் குடைந்தது, எல்லோரையும்தான்!

ஒரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்தி தனது மகன் போலவே நடித்துக்காட்டுகிறார். "... 'அப்பா, பெண்ணியம் பெண்ணடிமைத்தனம் என்று ஏது ஏதோ சொல்கிறீர்களே.... எனக்கென்றால் அப்படித் தெரியவில்லை! இந்த ரீவித் தொடர்களில வாற பெண்களைப் பார்த்தபிறகு, எனக்கு பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்ககூடாது என்றுதான் படுபிறது' என்றானே பாருங்கள்..... நான் என்னத்தைச் சொல்ல....." என்றார் பெருமூச்சுடன்.

இதைக் கேட்ட நானும் கூட இருந்தவர்களும் வாயடைத்துப்போனோம். இதன்பின் பெரிதாக வேறு உரையாடலில் செல்ல மனம் ஏனோ விடவில்லை.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் விரைவிக்கிடந்தாலும் வீட்டு வரவேற்பறைகளில் சென்னையிலிருந்து பிரவாகமெடுக்கும் தமிழ்த் தொலைக் காட்சிகள் கொப்பளிக்கும் தொடர்கள் தொடர்பாக நம் பெண்கள் தமக்குதாமே சுருக்குத் தடம் போடுவதாகத்தான் தெரிகிறது.



- முகிலன்
பாரீசு, ஓகஸ்ட் 2009

No comments:

Post a Comment