Thursday 27 August 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத்துளிகள் (11)


சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (11)

-குணன்


யாழ் குடா நாடு, வரலாற்றுக்கு முற்பட்ட வரலாற்றுடைய ஓர் நிலப் பரப்பை கொண்ட, மணல் திடல் என்று குறிப்பிடுவதும், இங்குள்ள ஆதிக் குடிகள் யார்? என்ற நீண்ட கேள்விக்கு பல்வேறு புனைவுகளுடன், எத்தகைய சான்றுகளும் முன்வைக்கப்படாது, "இவர் அவர், அவ்வாறு -இவ்வாறு குறிப்பிட்டார்- பாடியுள்ளார்" என்ற வரைவுகளையும், நம்பகத்தன்மை அற்ற கூற்றுக்களையும், புராண, இதிகாசங்களையும் மட்டும் எடுத்தாண்டு, எத்தகைய ஆராய்சிகள் பெரிதுமின்றி, எழுதுவதும்- பேசுவதும் ஆய்வுகளாக ஏற்கப்படுவதில்லை. இவ்வாறான ஈழத்தமிழர் வரலாற்றில், எஞ்சியிருப்பது வரலாற்றுப் பஞ்சம் என்றால், அது மிகையல்ல!

இந்நிலைதான், இன்றைய சமகால, அரசியல், பொருளாதார, புலப்பெயர்விலும் தொடர்கதையாக உள்ளது என்பதே எனது கருத்து. உண்மைகள் பதியப்படவேண்டியதும், அவை பேசி அலசப்பட்டு பேணப்படாவிட்டால், நாளைய (குறிப்பாக புலப்பெயர்வு பற்றிய நிகழ்வுகள் யாவும் மறைந்து போய்விடலாம்!) பதிவுகளும் வாசிப்பும் என்பது வெற்றுப் புராணமாக மாறிவிடலாம்! ஒரு தனி மனித பார்வை என்றாலும் சரி, ஓர் இன மக்களின் சம கால மற்றும் கடந்த காலங்களின் பார்வைகள் என எதுவாகினும் முழுமையாக ஒளிவு மறைவு இன்றி பதியப்படுமாயின், அதன் வழி தொடரும் கருத்துக்கள் மூலம் வளர்ச்சியும், வீழ்ச்சியும் முழுமையாக அறியப்படும்! மறக்கக்கூடாத- மறையக்கூடாத, எந்த ஒரு உண்மை அனுபவத்தையும் முயன்று விருப்பு வெறுப்பு இன்றி, பதிவிட்டு காப்பதென்பது, எளிதான விடயமன்று.

இதற்கு, முதலில் வரலாற்று பிடிப்பும், எதிர்கால - தூர நோக்கும், யதார்த்த நேசிப்பும், உள்ளார்ந்த பார்வையும் நிரம்ப தேவையாகும்!எல்லாவற்றுக்கும் மேலாக நினைவுகளை முடிந்தவரை திரிபு படுத்தா நடுநிலை மிகவும் தேவையாகும்! நூலறிவு, சம-கடந்த காலங்களின் செய்தித்தேடல்கள்- சேகரித்தல், பாதுகாத்தல், கடந்த- நீண்ட காலநினைவு- மீட்டல், என விரிந்த அளவுகொண்ட- பரந்த பரப்புக்குள் செல்லும் துணிவும்- தூய பயணிப்பும் கிட்டாவிட்டால், இவ்வகைச் செயற்பாடு பயனற்ற முயற்சியாகவே முடிந்துவிடலாம்!


உலகம் பரவிய அகதித் தமிழர்கள்

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் தொடங்கிய இடப்பெயர்வின் உச்சக்கட்டம் இன்றும் முடிவுற்றாதாக தெரியவில்லை!இலங்கையிலிருந்து இடப்பெயர்வுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சம் மக்கள் என, ஐக்கிய நாடுகளின் அகதிகள் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், அதில் 95 விகிதமானவர்கள், தமிழர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது! இவ்வாறு, கடந்த மூன்று தசாப்தங்களில் புலம் பெயர்வுக்குள்ளாகிய தமிழர்கள், 70 க்கும் மேற்பட்ட உலகப் பந்தின் பல்வேறு நாடுகளிலும் கால்பதித்துள்ளார்கள். அன்று, பேர்லின் நகரில்,“கண்டாயம் கடப்பு“ கண்டு பிடித்து, செஞ்சிலுவைச் சங்கவிடுதியை முகவரியாக்கி, காலமாகிப் போனவரின் பெயருக்கு கடிதம் கொடுத்த நம்பிக்கை அடிப்படையில், வானில் பறந்து, இருப்பைத் தேட வந்த ஆரம்ப கர்த்தாக்களுக்கு, அடுத்த வரிசையில் இடம்பெற்ற, ஒரு சில நூற்றுவர்களில் அடக்கப்படவும், பலரால் நினைக்கப்படவும், ஆங்காங்கு கண்ட இடங்களில் தாமாகவே அறிமுகப்படுத்தி நினைவு கொள்ளவைக்கும் ஒருசில சந்தர்ப்பங்களில், “அந்த பழையநாட்கள் பற்றிய நினைவுகள் எத்தனை எத்தனை இனிமையானவை என்பதை, புலப்பெயர்வின் பொக்கிசம் என்று கூறினால் பிழையல்லவே!

எனது, “பேர்லின் நாட்கள்“ பற்றித் தனியாக, ஒரு நூலையே தரமுடிந்தாலும் அதனைக்கூட, “அதிகப் பிரசங்கித்தனம்“ என்றுகூட “நாமசங்கீகரணம்“ செய்யப்படலாம்! பேர்லின் நாட்களுக்கு ஒரு நீண்ட முப்பது ஆண்டுகள், முன்னாக வந்து நந்தியைப்போல, நெஞ்சில் துளிர்க்கத்தான் செய்கிறது! குப்பைகளை எல்லாம் கூட்டி கோபுரம் என்று கூறவேண்டிய தேவை யாருக்கும் ஏற்படத் தேவையில்லை. அதனால் யாதும்- யாருக்கும் பயனில்லை.

அக்கால கட்டத்தில், நண்பர் சிலரும் நானும் முன்னின்று (பிராமணர்களற்று, ஓமகுண்டம், கன்னிக்கால், கெட்டி மேளம் இன்றி, முடியற்ற தேங்காய்க்கு செயற்கையில் முடி செய்து), சங்காலத் தமிழ்த் திருமணம் போல, தமிழ் உறவுகள் சிலர் வாழ்த்த, இல்லறம் புகுந்த தமிழ் குடும்பங்களில், வந்துதித்தவர்களின் மணவினைக்கோலங்களின் பாங்கினை நினைக்கவே ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. இன்றும் அவ்வாறாக அமைந்த குடும்பங்களையும் அவர்களது வழித் தோன்றல்களையும் காணும்போது புகலிடத்தில் வாழத்தொடங்கிய அந்தநாட்கள் நினைவில் இனிமையாகத் தோன்றிச் செல்லும்.

எவன் ஒருவன் தனது தொடக்க- உண்மைகளுக்கு வெட்கப்படுவதும், மூடி மறைத்து பொய்த்திரையிட்டு, தடம் புரண்டு நிற்பதும் தொடங்கி விட்டதோ, அக்கணமே, அவன் ஒரு வேடதாரி என்பதைப் புரியமுடிகிறது! "கூட்டில் அடைபட்ட கிளிகளை சிறகுகள் வெட்டப்பட்டு இருப்பதைப் போல, வெளியே நடமாடவும், எல்லை தாண்டவும் முடியாத மக்களாக கிழக்கு ஜேர்மனியர்கள், இரண்டாவது உலக யுத்த முடிவில், பிரிக்கப்பட்டிருந்த தமது நாட்டில்(பேர்லின் உட்பட) இருந்த நாட்களில், ஆறாயிரம் மைல்களைத்தாண்டி வந்த எம்மைப் போன்றவர்கள், அதிக எண்ணிக்கையில் வந்து புகலிடங்கோரினார்கள் என்பதான உண்மை நிலையை இன்று எண்ணிப்பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது.

அக்கால கட்டத்தில் அகதிளாகக் கோரிய பல்துறையைச் சார்ந்தவர்களுக்கும், முகங்கோணாமலும், முடிந்தவரையிலும், அன்றைய தேவைகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக வழங்கின. பின்னாட்களில், நிரந்தர வதிவிடம், தொடர்ந்து வேலைவாய்ப்பு, வதிவிடம், குடும்ப இணைப்பு, குடியுரிமை என்று தனது சொந்த மக்களுக்குரிய அத்தனையும் என்று கூறமுடியாவிட்டாலும், 95 வீத உரிமைகள் பெற்று, வளமுடன் வாழ வழி கிடைத்தது!

இவ்வாறே இந்த ஈழத்தமிழர்கள், தத்தமது தனித்தனி முயற்சிகளாலோ அல்லது கூட்டு முயற்சிகளாலோ தமது சொந்த நாட்டில் இருந்த தமக்கான அரசியல் முக்கியத்துவத்துவமுடைய உரிமங்களைப் பெற்றுக்கொண்டார்களா? என்றால், அதுபற்றி அடையாளங்காட்டிட ஒருவர் தானும் கிடைக்கமாட்டார்கள். ஆயினும் அன்று, ஈழத்தமிழர்களின் நீண்ட ஒடுக்குமுறைகளைத் தொட்டுக்காட்டி, தொகுத்து வகுத்து, எடுத்துக்கூறவும் ஈழத்தமிழர்களை புலப்பெயர்வுக்குள் தள்ளிய காரணிகளையும், தேவையையும் முறையாகவும் விளக்க வைப்பதிலும், ஈழத்தமிழர்களை தாபனமயமாக வெளிப்படுத்துவதில் 'ஈழத்தமிழர் நலன்புரிக்கழகம்' பேர்லின் மாநிலத்தில் ஆற்றிய பணிகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்தது. அக்காலத்தில், அகதிகளாகக் கோரிய புகலிடத் தமிழ் விண்ணப்பதாரிகள் ஒவ்வொருவரிடமும், "உமது நாட்டில் அரசியல் காரணங்களுக்காக இங்கு புலம் பெயர்ந்தவராயின், இங்குள்ள ஈழத்தமிழர் நலன்புரிக்கழகத்தில் அங்கத்துவமுடையவராக இருக்கின்றீரா? அவ்வாறாயின் அதனை உறுதிப்படுத்தவும்!" என பேர்லின் நீதிமன்றம் கேட்ட பின்னரே பேர்லின் வாழ் புகலிடத் தமிழர்கள் கண்விழித்து "தானும் ஒருவர்தான்" என்ற பதிலுக்கு ஆதாரமாக கழகத்தை நாடத் தொடங்கினார்கள். கழகத்தில் கால்வைத்த நாள் முதல் மறுப்பில்லாது அங்கத்துவப் பணம் செலுத்தி உறுதி செய்தார்கள். இது பேர்லின் வாழ் ஈழத்தமிழர்களால் கழகத்திற்கு இயல்பாகக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதக்கூடியதாகும்!


(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

No comments:

Post a Comment