கதைச் சரம் -12
செவி வழிக்கதை -10
அல்லாவுக்குப் பகிடி தெரியல்ல...!
காதர் காக்கா மீன் பிடிக்கச் சென்றால் கூடை நிரம்ப மீன் கொண்டுவருவது வழக்கம். அப்படியிருந்தும் ஒரிரு நாட்கள் மீன் பிடிபடாது போவதும் உண்டு. அல்லா மீது அசையாத பக்தி கொண்டவராகையால் எல்லாவற்றையும் அவன் மீது சொல்லி அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
இவர் தூண்டில் மீன்களை உயிருடன்தான் பிடித்து வருவதுதால் சுற்றுவட்டாரத்தில் நன்கு பிரசித்தமாகியிருந்தார். அவரது வள்ளத்தில் இதற்கென்று பெரிய பிளாஸ்டிக் அண்டா எப்போதும் இருக்கும. நீச்சலடிக்கும் மீன்களையும் , வெளியில் போட்ட மீன்களின் உயிர் மூச்சடங்கும் துள்ளலையும் பார்க்கவென்று சிறுசுகள் முதல் பெரிசுகள் வரையில் கூடிக் கும்மாளமிடுவதைக் கேட்கும்போது காதர் காக்காவிற்குக் கொஞ்சம் பெருமிதம்தான். நிமிர்ந்திருந்தவாறு பேரம் பேசுவார். இதனால் காதர் காக்காவின் வள்ளம் கரையொதுங்கும்போது இதற்கெனக் கூட்டம் காத்திருப்பது வழமையாகி இருந்தது.
அவரது மூத்த மகள் குடும்பமாகிச் சென்றுபின், தன் தாய் வீட்டுக்கு இன்று வருவதாகக் கடிதம் எழுதியிருந்ததால் காதர் குடும்பம் அதிகாலையிலேயே எழுந்து பரபரப்பாக வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. காதர் அதிகாலைத் தொழுகையுடனேயே மீன் பிடிக்கப் புறப்படடிருந்தார். தனது வள்ளத்தை தோதான இடத்தில் நிறுத்தி தூண்டிலையும் போட்டாயிற்று. சும்மா சொல்க் கூடாது ஒரே சமயத்தில் நான்கு கு}ண்டில் போடக்கூடிய ஆற்றல் உள்ளவர் காதர் காக்கா. ஆனால் இன்று சூரியன் இரண்டு பனை உயரத்துக்கு எழும்பியும் ஒரு மீன் குஞ்சுதானும் படுவதாக இலலை. காதருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!! 'அட என்னடா இது இன்றைக்குப் பார்த்து இப்படியாயிருக்கே!" என கொஞ்சம் மனம் சங்கடப்பட ஆரம்பித்தது. தூண்டில்களை இழுத்து இழுத்து தூர வீசிப் பார்த்தார். ஒன்றுமே நடக்கவில்லை.
'மனப்பதட்டத்துடன் வள்ளத்தினுள் இருக்கப்படாது' இது அவரது தாத்தா வழியாகக் கேட்டுப் பழகிய பழக்கம். தூண்டில்களை வள்ளத்துடன் இறுகக் கட்டியுள்ளதை இன்னுமொரு தடவை சரிபார்த்தார். தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு கண்களை மூடி மனமுருக அல்லாவை வேண்டினார். 'அல்லாவே! இன்று நான் பிடிக்கும் முதல் மீனை உனக்கே தருகிறேன்!" என்பதாக அவரது உருக்கமான வேண்டுதல் அமைந்தது.
என்னே ஆச்சரியம் வள்ளம் விந்தி விந்தி ஒரு பக்கம் இழுக்கப்பட்டது. 'ஆகா! நல்ல மீன் பிடிபட்டுவிட்டது. அல்லா கைவிடமாட்டார்!" மனம் குளிர கண் திறந்த காதர் காக்கா துண்டை எடுத்து தலையில் கட்டியவாறு அல்லாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார். பெரிய மீனொன்று முறையாக மாட்டியிருந்தது. காலையிலிருந்த களைப்யெல்லாம் போன சுவடே தெரியாமல் போயிற்று. பிறகு மற்றத் தூண்டில்களிலும் சில மின்கள் பிடிபட்டன. ஆனால் எல்லாமே சின்னவை.
மதியமாகிக் கொண்டிருந்தது..... 'இனி தாமதிக்கயேலாது.. திரும்பிட வேண்டியதுதான்' என்ற முடிவுடன் தூண்டில்களை மீளப் பெறத் தொடங்கினார். அப்போது அவரது மனசுக்குள் 'அட! வேண்டுதலுக்குரிய மீனாக ஒரு சின்ன மீனைக் கொடுப்பம். பெரிசு மகளுக்குத்தான்.... நல்ல பொரியலும் குளம்பம் வைக்க அந்தமாதிரி இருக்கும்!" எண்ணம் அருமையாகவே இனித்தது. திடீரெ சலக் சலக் கென்று தண்ணீருக்குள் கல்லு விழும் சத்தம் கேட்டது. வள்ளமும் ஒருக்காக் குலுங்கியது. துணுக்குற்றவாற திரும்பிப் பார்த்த காதர் காக்கா மலைத்துப் போனார். அவரது தூண்டிலில் பிடிபட்ட அந்தக் கொழுத்த மீன் துள்ளலுடன் மீளவும் கடலினுள் பாய்ந்து விடடிருந்தது.
தனது நினைப்பை உணர்ந்த காதர் காக்கா, "ஐய்யை...யே....!! நம்ம அல்லாவுக்கு பகிடியும் தெரியல்லை.... வெற்றியும் தெரியல்லை!" என்றார்.
- முகிலன்
சிறு வயதில் ஊர்ப் பாடசாலையில் கேட்ட கதை இது.
பரிஸ் -ஓகஸ்ட் 2009 Tweet
No comments:
Post a Comment