Wednesday 5 August 2009

சரம் - 15 யாதும் ஊரே!




சரம் - 15

யாதும் ஊரே!






நீண்ட பகலைக் கொண்ட கோடை விடுமுறையை வெளியில் இரசிப்பதில் ஐரோப்பியர் ஈடிணையற்றவர். புகலிடத்தரிப்பின் நீட்சி இன்று நம்மவர்களுக்கும் விடுமுறையை வெளியில் இரசிப்பதில் 'ஊரோடு ஒத்துப் போவதாகி' மகிழ்வானதாகிவிட்டது. ஐரோப்பாவை இரசிக்கவேண்டுமாயின் வாகனத்தில் சுற்றிவரவேண்டும். இங்குள்ள கிராமங்களூடாகப் பயணிக்க வேண்டும் என்பது எமது குடும்பத்தின் ஏகோபித்த விருப்பம். இங்குள்ள நகரங்களும் கிராமங்களும் இணைக்கப்பட்டள்ள திட்டமிட்ட சாலைக் கட்டுமானத்தின் பிரமாண்டமான செயலாக்கம் மனிதனின் சாதனைதான். இங்கெல்லாம் தூரத்தின் அளவீடாக மகிழூர்தியின் பயண நேரமாகவே இருக்கும் அறிவிப்பைப் பரவலாகவே காணலாம்.

பாரீசு போன்ற பெருநகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கெல்லாம் இன்னுமொரு நகரத்தைப் பார்க்கும் ஆர்வம் பொதுவாக வருவதில்லை. பரபரப்பில்லாத, வாகன இரைச்சல் குறைந்த, மக்கட்தொகை குறைவான, தமக்கான தொன்ம பண்பாட்டு அடையாளங்களைக் காவும் வித்தியாசமான சூழலாக அமையும் கிராமப்புறப் பயணங்களில் அதீத விருப்பத்தைத் தருகிறது.


எனது நண்பன் கபிலன் செர்மனி மேற்கே 'நீர் கொட்டும் மண்ணின்' (Sauerland) கிராமமான எஸ்லோகே(Eslohe) கிராமத்தில் குடியேறியதால் இது எம் குடும்பத்திற்கும் கைகூடியது. நாடோடிகள் சினிமாவில் 'நண்பனின் நண்பன் நண்பனே' ஆகிய மாதிரி நண்பனின் பிள்ளைகளுக்கும் எனது பிள்ளைகளுக்குமான நட்பு மலர்ந்துவிட்டிருந்தது. இது வருடந்தோறும் கோடைவிடுமுறையைக் கழிக்கும் குடும்ப விருப்புத் தெரிவாகிப்போய் இம் முறை ஆறாவது தடவையாக இங்கு வந்துள்ளோம். இது சுற்றுவட்டார மலைக் கிராமங்களையும் 
பழக்கப்படுத்திவிட்டது.

நள்ளிரவில் தன்னந்தனியாக ஐரோப்பிய சிறு மலைகளின் வளைவுப் பாதையில் ஊசியிலை மரங்களால் சூழப்பட்ட சிறுநகரில் எனது மகிழூர்தி ஊரும்போதினிலே பெற்ற புளங்காகித உணர்வை வார்த்தையால் வடிவமைக்க முடியவில்லை. திரும்பும் இடமெல்லாம் பசுமை. ஆகா, பச்சை நிறத்தில்தான் எத்தனை வகைகள்! மின்னொளி இல்லாத மலைக் காட்டக்குள் மகிழூர்தியின் வெண்ணொளியில் கண்கள் குவிந்திருக்க 'எங்கோ பிறந்தோம், எங்கெங்கோ அலைந்தோம்!! அடேய் முகிலா! ஐரோப்பிய மலைக்கிராமத்தில்... தன்னந்தந்தனியான மகிழூர்தியில் பயணிக்கும்போது 'இது கனவா இல்லை நிசமா?' என மனம் கிளர்ச்சி கொள்ளவே செய்யும் பயணங்கள்..

மலைப்பாதை 'ப' வழைவுத் திருப்பங்கள் தாண்டிச் செல்கையில் ஆங்காங்கே வீதிக் காவல் தெய்வங்களாக சிறு கோவில்கள்(kapelle) இருப்பதையும், சில இடங்களில் இச்சிறு கோயில்களில் மெழுகுதிரி எரிவதையும், சில கோயில்கள் சிறு கம்பிக் கேற்றுகளால் மூடப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. பெரும்பான்மையான கிராமவாசிகள் கத்தோலிக்கராயிருந்தனர். கிராமங்களில் தேவாலயக் 
கோபுரங்கள் சிலுவைக் குறியுடன் நிமிர்ந்து நிற்கும், இதில் தவறாது மணிக்கூடும் இடம்பெற்றிருக்கும். செர்மனிக் கிராமங்கள் தோறும் ஏதாயினும் குறைந்தது ஒரு தொழிற்சாலையாவது இருப்பதைக் கண்டு பிரமித்தவர்களில் நானும் ஒருவன். இதனால்தான் வேலைவாய்ப்பைக் கருதி நம்மவர்களாலும் இவ்விடங்களில் குடியேற முடிந்தது. 'ஆலை இல்லா ஊருக்கு அழகு பாழ், கோயில் இல்லா ஊரில் குடியிருப்பு பாழ்!' எனவாக அமைந்த கிராமத்தவர்களின் பிரதான தொழில் மாடு, ஆடு, விவசாயப் பண்ணைகள்தான். குதிரைகளையும் பரவலாகக் காணலாம். ஆண்டுக்கொரு தடவை நடக்கும் இரு நாள் சந்தை, சுற்றுவட்டாரத்தை இணைக்கும் கோலாகாலத் திருவிழாவாக பக்கத்துக் கிராமமான றைஸ்ரே (Reiste) இல் 700 வருடப் பாரம்பரியத் தொடராக நடைபெறுகிறது (Der Reister Markt ist als Bartholomäusmarkt bereits seit dem Mittelalter belegt. Reiste besaß zu dieser Zeit ein Kirchspielgericht, welches urkundlich für den 23. August 1347 überliefert ist und 1445 durch Dietrich II, Erzbischof von Köln bestätigt wird). இது அக்டோபர் கடைசிக்கு முதல் வார இறுதியில் நடைபெறும். முதல் நாள் வளர்ப்புப் பிராணிகளின்(பறவைகள், மிருகங்கள்) கண்காட்சியும், சிறந்த மிருக வளர்ப்பாளர் தெரிவுமாகத் தொடங்கும் நிகழ்வில் புதிய வகை இராட்சச விவசாய இயந்திரங்களும்(Traktor) இடம் பெற்றிருக்கும். பழவகைகள், உடுபிடவைகள், தோற்பொருட்கள், விதம் விதமான உணவகங்கள், வீட்டு பாவனைப் பொருட்களென பல்வேறு கடைகளால் கூட்டம் அலை மோதும். இங்கு வந்த உடுபிடவைச் சந்தை பெரும்பாலும் இந்திய - பாகிஸ்தானியர்களால்தான் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டினார் நண்பர். இராட்டினம் சுற்றல், மோட்டார் ஓட்டலென பல்வேறு களியாட்டங்களுடன் இடம் பெறும் தொடர் நிகழ்வுகளால் ஊரே விழாக் கோலமிட்டிருக்கும். வாண வேடிக்கையுடன் நிகழ்வுகள் முடிவுறும். நம்மூர் கோவில் திருவிழாக்களை ஞாகமூட்டும் இந்நிகழ்வு ஊர்த் திருவிழாவாக இடம் பெறுகிறது.

ஐரோப்பாவில் குடியேறினாலும் விருந்தோம்பலைத் தொடரும் பண்பாட்டில் செர்மனித் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். எனக்கு முன்பின் அறிமுகமல்லாத பல தமிழர்கள் நேசமுடன் கைகுலுக்கி தமது வீடுகளுக்கு அழைத்து விருந்தோம்பி மகிழ்ந்து எமக்கும் மானுட இரசிப்பைத் தந்தார்கள். செர்மனியில் தமிழர்கள் பரவலாகி, பல்வேறு கிராமங்களில் வாழ்வதானது வித்தியாசமான அனுபவங்களைப் பெறவும் நேசமுடனான சந்திப்புகளைச் செய்வும் தூண்டுகிறதெனலாம். இவ்வகையில் அறிமுகமாகி நண்பரானவர் சுகந்தன். இவரது குடும்பம் ஐரோப்பிய வாழ்வில் கலந்தது. இவரது துணைவியார் செர்மானியர். இவர்களுக்கு மூன்று பையன்கள். இச்சிறு கிராமத்தில் வீடொன்றை வாங்கி சுமார் 6 வருடங்களில் தனது கடும் உழைப்பின் கைவண்ணத்தால் மிளிரச் செய்தார். இது அண்டை அயலாரின் அன்பான கவனயீர்ப்பைப் பெற வழிவகை செய்தது. இந்த வீடு புனரமைப்பு நடவடிக்கை இவருக்கு அயல் வீட்டு முதியவருடன் நெருங்கிய நட்பைப் பெற்றுத் தந்தது. இவருக்கும் தனது நிலவறையைத் திருத்துவதற்கு அவரது ஆலோசனைகள் பல தடவை தேவைப்பட்டிருந்தன. இந்த நட்புறவால் பல்வேறு வரலாற்று அனுபவங்களை பகிர்ந்திருந்தார் அந்த முதியவர். அந்த இனிய மாலைச் சந்திப்பில் இதனை மனந்திறந்து சொன்னார் சுகந்தன்.
- அந்தக் காலத்தில் நிலவறையில்தான் பனிக்காலத்திற்கான எல்லாவற்றையும் வைத்திருப்பார்கள். நிலவறை இதற்காக பல அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இவ்வறைகளில் கரி - விறகுவைக்குமிடம், ஆடு - கோழி - பன்றி பாதுகாக்குமிடம், இறைச்சி அடிக்குமிடம், மரக்கறி வைக்குமிடம், உடுபிடவைக்கான இடம் என்பவை அடங்கும். 
- குளியல் தொட்டியில் நீர் நிரப்பப்பட்டதும் முதலில் குடும்பத் தலைவர் குளிப்பார், பின் பிள்ளைகள் குளித்தபின் கடைசியாகத்தான் குடும்பப் பெண் குளிப்பது வழக்கம். இதே வகையில்தான் சாப்பாடும் அமையும். சில வேளைகளில் பெண்கள் சாப்பிட பாண் மட்டுமே மிஞ்சுவதுமுண்டு.
 
- வாரத்தில் வெள்ளிக் கிழமையில்தான் மீன் சாப்பாடு இருக்கும். இறைச்சி அடிக்கப்படும் போதுதான் இறைச்சிச் சாப்பாடு இந்நாளில் சுற்றத்தாருக்கும் கொடுத்து உண்ணப்படும். அடிக்கப்பட்ட விலங்கின் எல்லா உறுப்புகளும் தகுந்த முறையில் உணவாக்கப்படும், எலும்பைத் தவிர எந்தக் கழிவும் வீசப்படாது.
 
- அரிசி வகைகள் பற்றி அப்போதெல்லாம் பெரிதாகத் தெரியாது. எல்லாமே உருளைக்கிழங்கும், மாவினாலான ரொட்டியுமான உணவுதான். சீன உணவுவகைகளின் அறிமுகத்தாலேயே அரிசி அறிமுகமாகியது.

இன்று சாலைகளில் சர் சர் என வழுக்கிச் செல்லும் வாகனங்களின் மிதப்பிலும், கட்டிடங்களின் மிளிர்விலும் நாம் காணும் இவ்வூர்களெல்லாம் மானுடர்களின் தடம் பதியப்பட்ட ஊர்கள்தான்.
'யாதும் ஊரே!'


நேரில் அறியப்பட்ட பதிவு
- முகிலன் (தகவல்: சுகந்தன்)
செர்மனி 05.08.2009

No comments:

Post a Comment