Thursday, 8 August 2013

கைநாட்டு

குஞ்சரம் 13

வங்கிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள மனித வாழ்வு

கைநாட்டு  
ஐரோப்பிய வாழ்வில் கடனட்டை இல்லாமல் வாழ்வதென்பது முகமற்று வாழ்வதற்கு ஒப்பானது. ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என என்தந்தை கம்பரை சிறுவயதில் அறிமுகப்படுத்தியது எனது ஆழ்மனதில் பதிந்ததொன்று.

இந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது. வங்கிகளில்தான் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பமும் அறிமுகமாகும். இப்போது எல்லாத் தொடர்பாடல்களையும் இயந்திரத்தினூடாக மேற்கொள்வதான நடைமுறையும் வந்துவிட்டது. நாங்கள் புலம்பெயர்ந்த காலத்தில் இந்த இயந்திரங்களை வாஞ்சையுடன்தான் தொட்டோம். ஏனென்றால் பழக்கமில்லா மொழியால் கதைத்து சிரமப்படத்தேவையில்லை. அசட்டுச் சிரிப்பும் சிரிக்க வேண்டியதில்லை.

இயந்திரத் தொடுதாளுகை முறையில் கடனட்டைப் பாவனையிலான பண எடுப்புகளில் இனி என்னென்ன மாற்றம் நிகழலாம்?

நண்பர்களிடையே அலசல் ஆரம்பமாகியது.
- நுண்கமெராக்கள் பதிவுசெய்யலாம்
- குரல் வழியான ஒலிப்பதிவுகள் உறுதி செய்யலாம்
- தேசிய அடையாள அட்டை எண் பதியப்படலாம்
- கடனட்டையிலேயே புகைப்படம் இணைக்கப்பட்டு நுண்கமராவினால் உறுதிப்படுத்தப்படலாம்
என்றவாறாக கருத்துகள் பகிரப்பட்டன. இதில் ஈடுபடாது மௌனமாக இருந்த நண்பன் திடீரெனச் சொன்னான் ‘கடனட்டையே இராது’
‘ஆ.. ஆ... ஆ!’ எல்லோருமே வாயைப் பிளந்தனர்.
‘வங்கியின் கணனித்திரையில் கைநாட்டை வைக்க (வலது பெருவிரல்) அது முழுமையான சாதகத்தையும் தரும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு பிறந்த நாளுடனான நவீன பதிவெண்ணை(பெயருக்கான பதிவெண்) கேட்கும். எல்லாமே கையடையாளத்தில் தெரிந்துவிடும்.’ என்றான் அமைதியாக
கேட்க வியப்பாக இருப்பினும் யாராலும் மறுத்துப் பேசமுடியவில்லை.

மொழிகளையும் கடந்து, நாடுகளின் எல்லைகளையும் தகர்த்து, மின்காந்த அலைகளுக்குள் புவியைச் சுருக்கிப் பயணிக்கும் மானுடவாழ்வில், எழுத்தறியாத பாமரர் கையெழுத்தென இகழப்பட்ட கைநாட்டு  நாகரிமாக அறியவியலாக ... இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?



எழுதியவர்: முகிலன்        
Wednesday, 06 June 2007 அப்பால்தமிழ் (இணைய சஞ்சிகை)
- பாரீஸ், மே 2007
0000000

வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

01.

சென்ற கோடைவிடுமுறை இலண்டன் மாநகர வலமாக அமைந்தது. நீண்ட இடைவெளியின் பின்னான சந்திப்புகளும் உறவாடல்களும் சுற்றுலாக்களுமாக நாட்கள் கழிந்தன.
இலண்டன் மாநகருக்குள் வாகனத்தில் செல்வது இரவில் மட்டும் சாத்தியமாகவுள்ளதை பல நட்புகள் தெரிவிதிருந்தமை என்னை ஆச்சரியமூட்டியது.
வீதி ஒழுங்குக் கெடுபிடிகளும், கமெராக்களும் நம்மவருக்கு நிறையவே பட்டறிவைக் கொடுத்திருந்தன.
இதில் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது தானியங்கிக் கமெராக்களின் ஆளுகைதான்.
இதனால் ஓட்டுநர் அனுமதி மதிப்பின் சுட்டெண் அளவை நம்மவர்களில் பலர் அதிகமாக இழந்திருந்ததை அறிய ஆச்சரியமாக இருந்தது.
அந்த அளவை எண் 3 மட்டும் கொண்ட துடிப்பான நண்பனுடன் உரையாடியவாறு பக்கத்து இருக்கையில் சென்ற என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.
ஐரோப்பிய தேசத்தில் வாகனமில்லாது வேலைகளைத் தொடருவதென்பது இலேசானதொன்றல்ல என்பதால் அவனது தயக்கமில்லாத வாகனமோட்டும் போக்கு மேலும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
-'மச்சான் நிதானமாகப் போவன்' - சிறிய தயக்கத்துடன், என்னையும் அறியாமல்....
-'ஏன்? உங்கட பாரீசென்று நினைக்கிறீயா? இது இந்கிலீசு நாடு'-
-'இல்லையப்பா இனி இழக்க ஒன்றுமில்லையே அதுதான்!'- (அதாவது  ஓட்டுநர் மதிப்பெண்ணில் இழப்பதற்கு இதன்மேல் என்ன இருக்கு!)
-'போடா பயந்தாங்கொள்ளி! கடன் மாற்றீடாக்கினால் போயிடும்!'-
-'ஆஆ கடனா?' - ஆச்சரித்தை எனது வாய் தெளிவாகவே வெளிப்படுத்தியது.
-'ஓம் மச்சான், கடனாக அல்லது கைமாற்றாக இதை ஈடுசெய்வதுதானே இதுக்குப் போய் அலட்டிக் கொண்டு!'-
-'அதுதான் எப்படியெண்டு சொல்லன்?'-
-'இதொன்றும் வங்கிகளில் பெறும் விவகாரமில்லையப்பா. இப்ப உன்னட்ட இந்த மதிப்பெண் 12 இருக்குத்தானே, இதிலிருந்து கடனாகப் பெறுவதுதானே. அதாவது நீதான் இந்த வாகனத்தை ஓட்டினதாகப் பதிந்தால் போதும் இதுதான் கடன்'-
புத்தம்புதிய அனுபவ அறிவை பகிர்ந்த அவனைத் திரும்பி உற்றுப் பார்க்கிறேன்.

-கண்ணன் (இலண்டன்)
Monday, 25 June 2007 : அப்பால்தமிழ் (இணைய சஞ்சிகை)

02.
புதிய உறவினன் ஒருவன் கனடாவிலிருந்து பாரீசு வந்திருந்தான். முதல்வருகைக்கு எப்போதுமே தனி மவுசுதானே!
முகமறியாத உறவினைக்காண அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்கிறேன்.
கிழக்கு மாகாண வழிவந்த உறவுகளின் விருந்தோம்பல் அன்பு என்னைக் கிறங்கடிக்க செய்யும்.
வாசலிலேயே அந்த உறவு என்னை வரவேற்றது உடனடியாகவே சரளமாக உரையாடலைத் தொடங்க வைத்தது.
நல்ல துருதுருப்பான இளைஞன். இந்தியா சென்று திருமணம் செய்த வழியில் தமக்கை குடும்பத்தைப் பார்க்க பாரீசு வந்துள்ளார்.
திக்குத் திக்காகப் பிளவுற்ற குடும்பங்கள் இப்படியான  தருணங்களிலாவது சந்திக்காது விட்டால் எப்போ சந்திப்பது?
இயல்பான அவனது சுபாவ ஈர்ப்பால் பல்வேறு விடயங்கள் பற்றிப் பேச முடிந்தது.
கனடா வாழ்வை அவனது பார்வையில் கேட்க விளைந்தேன்.
அவனது இளமைத் தோற்றத்திற்கேற்பவே வார்த்தை விபரணங்களும் துடிப்பாக இருந்தன.
ஊர்ச் சங்கங்கள், கோயில்கள், இலவசப் பத்திரிகைகள், மோதல்கள், படிப்பு வாய்ப்புகள், அடுக்குத் தொடர் மாடிக் குடியிருப்புகள் எனவாகச் சுழன்று வாகனம் பற்றி வந்தடைந்தது.
- அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஏதாயினும் தவறுகள் செய்தால் பார்த்துக் கொணடிருக்க உலங்கு வானுர்தி வந்து தூக்கிச் சென்றுவிடும்!
- ஆ!! என்ன இங்கிலீசுப் படத்தில வாற காட்சி மாதிரியல்லா இருக்கு!
எனது சந்தேகத்தை அவன் அலட்சியம் செய்தவாறு தொடர்கிறான்...
- அங்கே காவல்துறை இலேசானதல்ல, நொருக்கிப் போடும். சிறைதான்!
- நம்மாக்கள் கனபேர் உள்ளே இருக்கினம்! ஆனால் சிறைத் தண்டனை நாட்களை தவணை முறையிலும் கழிக்கலாம்.
- என்னது... தவணை முறையிலா? எப்படியப்பா கனடியன் செய்கிறான்? எனது ஆச்சரியம் மடையுடைத்த வெள்ளமாகிப் புறப்பட்டதைக் கண்டு புன் முறுவல் கொண்டவனாகித் தொடர்கிறான்.
- இப்ப ஒருவருக்கு மூன்று மாதத்தண்டனை கிடைத்திருக்கு என்று வைத்துக் கொண்டால், இதனை வாரத்திற்கு இரு நாளாகத் தவணை முறையில் 45 வாரங்களில் செலுத்திவிடலாம். மற்றைய நாட்களில் வேலை செய்து வீட்டில் இருக்கலாம்.
இரவு கடந்ததும் தெரியாதவனாகி, பேச்சு மூச்சற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
‘வெள்ளைக்காரன் எங்கேயோ போயிற்றான்:’

- பிரதீசன் (பாரீசு)
Monday, 25 June 2007  : அப்பால்தமிழ் (இணைய சஞ்சிகை)


2000 புத்தாயிரமாக மலர்ந்தபோது  பாரீசு நகரில் நாங்கள்.....
உலகமெங்கும்  மலர்ச்சியின் குறியீடாகிய கோலாகலமான வாணவேடிக்கைகளுடன் 'புதுப்புது மனிதக் கனவுகளின்' விரிவாகவே புத்தாயிரமும் பதிவாகியது. 

கூடவே மனிதர்களுடன் விடாது தொடர்ந்த 'அவநம்பிக்கைக் கற்பனையும்' இழுபட்டு வந்து அடங்கியும் போனது. அந்தக் காலகட்டத்தில் வதந்தியாக  2000- நடுஇரவில் தொடங்கும் வேளையில் '00.00.00' அன்று  'கணனித் திரைகள் செயலிழந்து போகும்!' என்பதாக இருந்தது அந்த வதந்தி. ஆனால் பாரீசு நகரின் மையத்திலிருந்த நவீன நூலகமான 'யோர்ச் பொம்பித்தோ' வெளி அரங்கில் வைக்கப்பட்டிருந்த புதிய விசேட நேரம் காட்டி தனது நேரத்ததைக் குறைத்துக் கொண்டுவந்து இந்த '00.00.00' காட்டும் அரியதான புத்தாயிரத் தொடக்கத்தைச் சுட்டியவாறு அழகுற நிமிர்ந்து நின்றது.

தமிழர்களின் தொன்ம நீட்சியுடன் தொடரும் நாளாகிய தமிழர் திருநாள் 2000 - 'தைப்பொங்கல்' அன்று இணையத்தில் உலாவரத் தொடங்கியது அப்பால் தமிழ். 

இயல் -இசை - நாடகம் எனவாகி 'முத்தமிழ்' எனத் தொடரும் வரலாற்றில் புதியதான தடத்தைப் பதியும் தமிழாக 'இணையத் தமிழ் - கணினித் தமிழ்' அமைவதைக் கட்டியமிட்டது அப்பால் தமிழ். இந்தப் பரிணாமத்தை முன்மொழிந்து இனி 'இயல் - இசை - நாடகம் - கணினி' என நாத்தமிழாகப் பயணிக்கும் கனவைப் பதிவிட்டது 'அப்பால் தமிழ்'. இந்தக்கூட்டுக் கனவாளர்களில் ஒருவானாக நானும் இருந்தேன்.
என்னால் 2007 இல் பதியப்பட்ட குஞ்சரம் மீளவும் நினைவுகளுடன் அசை மீட்கப்படுகிறது. 
மீளவும் மீண்டு எழுகிறது  அப்பால் தமிழ் இணையம்.


- முகிலன்
பாரீசு 08.08.2013



No comments:

Post a Comment