Wednesday, 21 August 2013

செவிவழிக் கதை 16 : பட்டணம் பார்க்கப் போன நாய்

கதைச் சரம் 19

செவிவழிக் கதை 16

பட்டணம் பார்க்கப் போன நாய்


ஒரு அழகிய கிராமத்தில் சில நாய்கள் சுகமே வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எசமான விசுவாசம் கொண்டவை சில. அடுத்த வீடுகளுக்க அலைபவை சில. தானுண்டு தன் கருமம் உண்டென தனியனாய்ச் சில. ஊரில் நடக்கும் நன்மை தீமைகளில் பங்குகொள்பவை, வயது முதிர்ச்சி, ஒன்றுமே அறியாத அப்பாவிகளென வேறு சில.
இவற்றுள் ஒரு நாய் கறுப்பும் வெள்ளையும் கொண்டது. கொஞ்சம் வித்தியாசம். சற்று எடுப்பு. முகத்தில் கனவின் சஞ்சாரம். இதற்கு ஒரு அசைக்க முடியாத விருப்பம். நிறையப் பார்க்க, ரசிக்க, அனுபவிக்க பட்டணம் போகவேண்டும். கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்பதாக அதன் தொனி ஊர் நாய்கள் சிலவற்றைக் கோபமுறச் செய்தன.
ஊர் நாய்களிற்; சில அனுபவம் வாய்ந்தவை. பட்டணம் பற்றியும் அங்குள்ள நிலை பற்றியும் எடுத்துச் சொல்லியும் அதன் விருப்பத்தைப் போக்கிக் கொள்ள ஆலோசனை செய்தன. இந்த ஆசை கொண்ட நாயை, கிறுக்குப் பிடித்த நாய் எனச் சில நாய்கள் கேலியுடன் ஒதுக்கின.
ஒரு மாரி முடிந்து கோடை ஆரம்பிக்கும் வேளை, பொழுதுகள் இனிமையாச் சென்றன. ஒரு நாள், தான் பட்டணம் போகப்போவதாக அந்த நாய் அறிவித்தது. கூடவே பலநாய்கள் கூடி 'அவன் ஆசைப்படியே சென்று அனுபவம் பெறட்டும்!" என்ற முடிவுடன் வழியனுப்பின.
தன் வாழ்நாளின் இலட்சியக் கனவின் நிறைவுடன் பட்டணம் வந்தது ஊர் நாய். உவ்வொன்றும் புதுமையாய் - இனிமையாய் இருந்தது. எவ்வளவு விதம்விதமான உணவுகள். வகைவகையான வர்ணம் பூசிய வீடுகளில் அல்லவா பட்டணத்தில் நாய்கள் இருக்கின்றன! அவ்வேளையிலும் ஏனோ ஊர் ஞாபகம். கிடுக வேலிகளும், ஓலைக் குடிசைகளும்....... பெருமூச்சடன் தனது ஊர் நாய்களை அனுதாபத்துடன் நினைத்தது.
பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி பெருமிதத்துடன் வலம் வந்தது; ஊர் நாய். மாலை ஆகியது. களைப்பு - வயிற்றில் நல்ல பசி. அருகில் இருந்த ஹோட்டல் குப்பைக்கள் விதவிதமான உணவு. விரைந்தது; ஊர் நாய். எங்கிருந்து முளைத்தன இவ்வளவு நாய்கள்? அவ்வளவம் பட்டணவாசிகளாம்! ஒருவர் முகத்திலும் நட்பகளில்லை. பயங்கரமான உறுமல்கள், குரைப்பு. உர் நாய் ஒரு கணம் திகைத்து நின்றது.
என்ன செய்வது? - ஊரில் பெற்ற துணிச்சல் முன்னே செல்லத் தூண்டியது. அடியெடுத்து வைத்தது. ஐயோ பாவம்!...... அவ்வளவுதான், ஊர் நாய் வேதனையில் முனகியது.
இனி வேறு வழியில்லை, தனது கிராமம் நோக்கி சோகத்துடனும், நல்ல பசியடனும் நொண்டியவாறு திரும்பியது.
இதன் நிலைகண்டு வருந்தின கிராமத்து நாய்கள். ஒரே குசலம் விசாரிப்பு, அன்பு, பாசம், உணவு எல்லாமே கிடைத்தன.
கடைசியாக ஒரு கேள்வி, « பட்டணம் எப்படி? »
« பட்டணம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் நம்மாக்கள்தான்..... » இழுத்தது ஊர் நாய்.

- அநாமிகன்
நன்றி : ஓசை 11 (காலாண்டிதழ்- 1993 தை-பங்குனி - பிரான்சு)


- இந்தக் கதையை நான் எனது ஊர் நண்பன் சிவானந்தன் மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கேட்டிருந்தேன் -
-இதுதான் சஞ்சிகை ஒன்றில் நான் எழுதிய முதலாவது செவிவழிக் கதை. நிறையவே கதை கேட்பவர்களாக வளர்ந்த தலைமுறையினர் நாம். நம்மிடம் புழங்கிய செவிவழிக் கதைகளை புலம்பெயர் வாழ்வில் பதிவிட வேண்டும் எனும் அவாவில் நான் ஓசை இதழில் எழுதிய 'பாரீஸ்" கட்டுரையுடன் சமாந்திரமாக இணைத்திருந்தேன். இங்கு அகதியாக வந்த முதல் மூன்று மாதக் காட்சி- 'நான் கண்ட பாரிசு" பதிவாக இக்கட்டுரை அமைந்திருந்தது.



- முகிலன்

பாரிசு 21.08.2013

6 comments:

  1. நல்ல கதை, நல்ல பகிர்வு.. மொத்தத்தில் மிக நல்ல முயற்சி..

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    ReplyDelete
    Replies
    1. வருகையுடனான கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஹரீஷ் நாராயண்.

      Delete
  2. இது நாயை பற்றிய கதையாக தெரியவில்லையே

    ReplyDelete
    Replies
    1. கதையாடுவதும் - கதைசொல்வதும் உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டுந்தானே! நம்ம பெரியவர்கள் எத்தனையோ கதையாடல்களாலும் - முதுமொழிகளாலும் வளரும் தலைமுறையின் வாழ்வினை நெறிப்படுத்தினார்கள்.
      இனிவருங்காலங்களில் இவையெல்லாம் கணினி மயப்படுத்தப்பட்ட தமிழ்பேசும் காணொலி அசைவோவியப் படங்களாக வேண்டும். எதிர்கால வாழ்வுக்காய் இணையத்தமிழ் புதுமெருகுடன் பவனிவர வேண்டும்.
      தளத்திற்கு வருகை தந்து கரிசனையுடன் தங்களது எண்ணத்தைப் பகிர்ந்த 'சேக்காளி' அவர்களுக்கு நேசமுடன் நன்றி பாராட்டுகிறேன்.

      Delete
  3. எங்களூரில் இதை சுருக்கமாக
    நாய்க்கு எதிரி நாய்தான் என்பதாகச் சொல்வார்கள்
    ஆழமான கருத்துடைய அருமையான கதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி! வருகை தந்து தங்களது கருத்தைப் பொறுப்புடன் பகிர்ந்தமைக்கு நேசமுடன் நன்றி தெரிவிக்கிறேன். வாழ்க! வளமுடன்!!

      Delete