திரை விமர்சனச்
சரம் 1
அமைதியாக நடந்த புலம்பெயர் - ஈழத்
தமிழர்களின் முழுநீளத் திரைப்படங்களின் காட்சி மஞ்சரி
« பாரிஸ் ஈழத் தமிழ்த் திரைவிழா 2013»
திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள், செயலர்கள்
தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப்
பிரக்ஞையுடைய ஆர்வலர்களும், தனவந்தர்களும், முதலீட்டார்களும், ஊடகங்களும் கவனம்கொள்ள
வேண்டிய தருணமிது.
|
சென்ற 2013 ஆகஸ்ட் 23
- 24- 25 ஆகிய நாட்களில் தமிழர்கள் பெருமளவில்
குவியும் பாரீசு 'லாச்சப்பல்' வட்டாரத்திலமைந்த 'தங்கவயல்' திரையரங்கில் ஏழு புலம்பெயர்வு
ஈழத்தமிழர் திரைப்படங்களும் ஒரு ஈழத்தில் படமாக்கப்பட்ட திரைப்படமுமாகக் காட்சியாகின.
எவ்வித ஆர்ப்பாட்மும் இன்றி உறவு(கனடா), இனியவளே காத்திருப்பேன்(அவுஸ்திரேலியா), சில்லு(கனடா),
இருமுகம்(சுவிஸ்), சகாராப் பூக்கள்(கனடா),
STAR 67(கனடா), மாறு தடம் (சுவிஸ்) புலப்பெயர்வுப் படங்களுடன் என்னுள் என்ன
மாற்றமோ(யாழ்ப்பாணம்) என்ற யாழில் படமாக்கப்பட்ட படமும் காட்சியாகின.
நினைக்கவே ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழரின் திரைப்படமாக வெளிவந்தவை வெறுமனே எண்ணக்கூடியதாகி வரலாறாகிவிட்டது. ஆனால்
வெறும் முப்பது வருடப் புலம்பெயர்வு வாழ்வில் அடுத்துவரும் தலைமுறையினர் அடுக்கடுக்காக
தமது படைப்புகளால் மிளிருகிறார்கள். பிரான்சின் ஈழத் தமிழ்த்திரையிடல் வரலாறில் பல்வேறு
நாடுகளில் வெளிவந்த புலம்பெயர் ஈழத் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடும் நிகழ்வை நிகழ்த்தி
முன்னுதாரணமாகிவிட்டார் ‘தடம்’ முன்னெடுப்பாளர் குணா. அடுத்துவரும் காலங்களில்
10000 ஈரோக்கள் வழங்கும் போட்டிகளை நடத்தப்போவதாக இவர் அறிவித்திருப்பதென்பது இத்துறையை
வளர்த்தெடுக்கும் இவரது ஆர்வத்தைக் கட்டியமிடுகிறது.
ஆரம்பத்தில் சலிப்புற வைத்த
காட்சிரங்கம் போகப்போக தானாகவே பார்வையாளரை உள்வாங்கி அரவணைத்து கடைசியாகத் திரையிடப்பட்ட
'STAR 67' படத்தால் கௌவிக் கொண்டது.
அரங்கம் நிறைந்த கூட்டமோ,
பல்தரப்பட்ட பார்வையாளர்களோ இருக்கவில்லை. திரைக் கலைஞர்கள், திரை ஆர்வலர்கள், சமூக
ஆர்வலர்கள், படைப்பாளிகள், திரைத்துறைசார் ஈடுபாட்டு இளைஞர்கள் எனவாகவே அரங்கம் களைகட்டியிருந்தது.
ஆயினும் முடிவில் நம்பிக்கை ஒளியைப் பரவியதாகவே நிறைவுற்றது.
அறிவிக்கப்பட்ட ஏழு படங்களும்,
சிறப்புத் திரையிடலான 'மாறுதடம்' படமுமாக எட்டுத் திரைப்படங்களின் பிரதிபலிப்புப் பார்வையின்
பொதுப் பகிர்வே இக்கட்டுரை. இது கொத்தாகப் பார்க்கக் கிடைத்த ஒப்பீட்டு உணர்வால் உந்தப்பட்டே
பரிசீலனையாகிறது. இது அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடும் கூற்றாக, முதலில் குறை-
நிறைகளுடனான பரிசீலிக்கக் கூடிய எனது இரசனைத் தெரிவாக STAR 67, மாறுதடம், இருமுகம்,
உறவு ஆகியன தெரிவாகின. இதனுடன் யாழில் படமாக்கப்பட்ட என்னுள் என்ன மாற்றமோ என்ற படம் காவிவந்த ‘சொல்லாத செய்தி’க்காக சிறப்பு
விமர்சனத் தகுதியைப் பெற்றுள்ளது.
எட்டுப் படங்களில் நான்கு
முதற் பார்வையில் பொதுத் தேர்வாகியது இத் திரையிடல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே
பதிவிட முடியும். நம் அடுத்த தலைமுறையினரால் 'நம்மால் முடியும்" என்பது இன்னுமொரு
முறை நிரூபணமாகியுள்ளது. இந்த நான்கில் பரவாலான பொது மக்களது பார்வைக்குக் கொண்டு சென்றால்
வரவேற்பைப் பெறும் படங்களாக STAR 67, மாறுதடம் தனித்துவமாக வேறுபட்டிருந்தன. ஏனைய இருமுகம்,
உறவு ஆகியன இரண்டும் தகுநல் தொகுப்பாக்கம் (Editing) செய்யப்படுமானால் மேலெழும் போட்டிக்குச்
செல்லும்.
உடல் மொழியாகப் பதிவாகும்
சட்டகக் காணொலித் திரைமொழியில் நிறையவே ஆண், பெண், இளைஞர், சிறார் எனப் பலதரப்பட்ட
நடிகர்கள் கலைஞர்களாகக் கவனத்தைப் பெற்றார்கள். ஒளிப்பதிவு தொழில்நுட்பம் இசை என திரையின்
பல்துறை தொழில்நுட்ப ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினார்கள். அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு
சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும்
உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில் கவனம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு மாறு தடம்
சிறப்பான கவனத்தைப் பெறுகிறது.
இப்படத்தின்
காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது.
இது பெரும் நேர மற்றும் பொருட் செலவைச் செய்திருக்கும் என்பதை முதற்பார்வையிலேயே புலப்படுத்துகிறது.
புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு
குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது. இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தலைமுறை
இடைவெளியில்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் பதிவிடுகிறது. இந்த வகையில் இப்படம் தனித்துவ
முத்திரையைப் பதிக்கிறது. கலைஞன் ரமணன் இவ்வரங்கிலிருந்ததால் அனைவரது பாராட்டையும்
நேரடியாகவே பெற்றுக் கொண்டார்.
STAR 67 : கமெராத் திரைமொழியால் கதை சொல்லும் இயல்பான திரைக்கதையுடன்
கனடா இளைஞர்கள் களமாடிய திரைப்படமாகி பார்வையாளர் அனைவரையும் நிமிர்ந்திருக்கச் செய்த
படமாகும். இயல்பான நடிப்பு, தொடராக இலாவகரமாக நகர்த்திச் சென்ற கதைசொல்லல். பன்முகப்
பரவலான பார்வையை அகட்டிப் பதிவிட்ட கச்சிதமான கனடாக் காட்சிகள் கொண்டாதன படம். திரைப்படம்
முடிந்த பின்பும் பார்வையாளர்களை தொடரும் கேள்விகளுடன் பயணிக்க வைத்த இயக்குநர் பாராட்டப்பட
வேண்டியவர். இது சர்தேச பார்வையாளர்களும் விரும்பிப் பார்க்கும் படமாகி தனியாகக் காட்சியளித்தது.
எம்மவர்களின் படைப்புகளாக கனடாவில் இருந்து வெளிவந்த தமிழிச்சி, 1999, A Gun and A
Ring வரிசையில் இப்படமும் கவனம் கொள்ளக்கூடியதாகப் பதிவாகிறது.
திரைத்துறையில் ஈடுபடும்
நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள், செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான
செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும், தனவந்தர்களும்,
முதலீட்டார்களும், ஊடகங்களும் கவனமெடுக்கவேண்டிய தருணமிது. ஆற்றலாளர்கள் கவனங்கொள்ளப்படாது
அலட்சியப்படுத்தப்படுமானால் புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே
அசைவுறும். உலக வாழ்வோட்டத்தில் தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.
பொதுவாக வேட்டை நாய் ஓட்டம்
என்று சொல்லுவது போல் தொடக்கத்தில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படங்கள் கடைசியில் ஓய்ந்து
தள்ளாடி நிறைவு காணுபவையாகின்றன. சில வேளையில், மாற்றமடைந்த முடிவுக்கு இயக்குநர் செல்வதாகவும்,
தெளிவான திட்டமின்மையையும் பறைசாற்றின.
இருமுகம் படம் இளைஞர்களாகப்
பரிணமிக்கும் முதிர் பதின்ம வயது புலம்பெயர்வு மாணவர் மனநிலையில் பயணிக்கும் படமாக இருந்தது.
இப்பிராயத்தினருக்கு இயல்பாகவரும் 'சாகச உணர்வுந்துதல்’ மிக இயல்பான கதையாகி பார்வையாளனை
ஈர்த்திருந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் அழகாகக் கதையை திரையில் பார்க்கவிட்டார்கள்.
ஆனால் 'தமது பிள்ளைகளை கெட்டவர்களாக நினைத்துவிடுவார்களோ?' என்ற பெருசுகளின் சிந்தனைக்கோலம்
இதனுள் உள்ளீடாக இப்படம் தேவையில்லாமல் நீட்சியுற்று பொருத்தமில்லாத செயற்கை வேடமிடல்களுடன்
நாடகமாகி முடிந்தது.
உறவு கனடாவிலிருந்து வித்தியாசமான
சவாலான பாத்திரங்கள் -கதையமைப்புடன் தயாரான படம். பாடல் ஆடல் கலை ஈடுபாட்டுக் குடும்பமொன்றின்
கதை. இதில் மகளாகவும் மருமகனாகவும் பாத்திரங்களாகி நடித்தவர்கள் பார்வையாளரின் கவனத்தைப்
பெற்றார்கள். நவீன காலச் சினிமா தொடர்பான புரிதலை மறுக்கும் நாடகத் தன்மையான பாத்திரமாக்கலில்
அதீத நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர் இப்படத்தை மிக நீண்டதொரு படமாக்கிவிட்டார். குடும்பம் என்ற
சட்டகத்தில் அடக்கபட்ட 'ஆணாதிக்க - பெண்ணடிமை' முரண்பாட்டை புலம்பெயர் நாடுச் சூழலை அறிந்த
பார்வையாளர் சலிப்புறும் நீட்சியுடன் பதிவாக்கிவிட்டார்.
அந்தக் காலங்களில், எமக்காக
சினிமா எடுத்தவர்கள் நாடகங்களிலிருந்து வந்தவர்களாகவும், தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தால்
மருண்டு போனவர்களாயும் தமது படைப்புகளை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இத் தொகுப்புப்
படங்களில் சிலர், தொலைக் காட்சித் தொடர்களால் உந்தப்பட்டவகளாகி நிதானமாக நீண்டு செல்லும்
திரைக் கதைகளை தமது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்நிகழ்வில் சுவிஸ், கனடா,
அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளில் இருந்து மட்டும் வெளியான படங்களே இடம்
பெற்றிருந்தன. பிரான்சிலிருந்து ஒருபடமேனும் இடம் பெறவில்லை. இதில் வேறு ஐரோப்பிய நாடுகளும்
அடக்கம்.
000 000
என் கவனத்தை ஈர்த்த படங்கள்
STAR 67, மாறுதடம் தொடர்பாக பின்னர் தனித்தனியாகப் பதிவிடவிருக்கிறேன்.
பார்க்க வைத்து பதிவிடத் தூண்டிய படங்கள் சலன முன்னோட்டமாக (எனது தெரிவு வரிசையில்)
1.) STAR 67
2.) Maaru thadam மாறு தடம்
3.) Irumugam - இருமுகம்
4.) Uravu உறவு
இணைப்புகள் காட்சிப் படங்கள் கூகிள் தகவல் வங்கியிலிருந்து நன்றியுடன் பெறப்பட்டது
தொடர்பான இணைப்பு:
தொடர்பான இணைப்பு:
« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »
- சலனம் முகுந்தன்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!
பாரீசு
29. 08. 2013
Tweet
No comments:
Post a Comment