Monday, 19 August 2013

இறுதி வணக்கம் : ‘பெரியார்தாசன்’

நினைவுச் சரம் 1
இறுதி வணக்கம் : ‘பெரியார்தாசன்’
(21.08.1949 - 19.08.2013)

நான் சற்றுமே எதிர் பார்க்காததொரு செய்தி. பிறப்பும் - இறப்பும் மானிட வாழ்வின் நியதிதான்! ஆனாலும் மனவெளியில் நினைவு சுமத்தல் என்பது பெரும் பார வண்டியை இழுப்பதுதானே! கட்புலனால் புலப்படாத இவ்வண்டி இழுப்பை கூட இருப்பவர்களாலும் உணர முடியாது. "என்ன! அப்படியே இருந்திட்டீங்க..... எழும்பி வேலையைப் பாருங்க!" குரல்கள் செவிப்பறையை பட்டுச் செல்கின்றன.


பெரியார்தாசன் காலமானார்

'அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (33) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர். அதே போல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்தார்' எனவாகச் செய்தி அச்சாகி வெளியாகிவிட்டது.


2013 'மே'யில் பாரீசு வந்திருந்த வேளையில் நானும் நல்லையாவும் அவர் தங்கியிருந்த விடுதியில் அந்த நடுச் சாம வேளையில் அவரைச் சந்தித்திருந்தபோதுதான் 'இறுதி' சந்திப்பாகும் எனக் கனவுகூடக் கண்டதில்லை. ஆனாலும் அவர் கேட்டதை வாங்கிப் பருகி மனம்விட்டுப் பேசி மகிழ்ந்த அந்தப்போது நினைவோடையில்.... கூடவும் இவருடன் நெருங்கிய தோழமை நட்பைப் பேணிய பெரியபாலா சின்னபாலா சுந்தர் நல்லையா கபிலன்....... என நீளும் பட்டியலும் நினைவுகளுமாக அசையாது இருக்கிறேன்.
000 000

எண்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான தோழமை நண்பராய் எம்முடன் கலந்து வாழ்ந்த பெரியார்தாசன் விடைபெற்றுவிட்டார் என்ற செய்தியைத் தாங்கிவாறே இன்றைய காலை விடிந்தது. ஈழம் தொடர்பாக வெறும் உணர்ச்சிகரமான வெற்றுப் புரிதலைக் கொண்டுள்ள இந்தியத் தமிழ் அரசியல் அறிவாளிகள் மத்தியில் தெளிவான  வரலாற்று இயங்கியல் புரிதலையுடைய சிலருள் முக்கியமானவர் பெரியார்தாசன். ஈழப்போராட்டம் தொடர்பாகவும் 'ஈழவர்' என்ற கருத்துருவுடனும் இறுக்கமான தெளிவான புரிதலுடனான ஈடுபாட்டாளர் பெரியார்தாசன்.
"பிறக்கும் போதும் அழுகின்றாய்!.....  இறக்கும் போதும் அழுகின்றாய்!" எனவாக வாழ்வை பாடல்வரிகளாய்ப் படம் பிடித்த சந்திரபாபு கூற்றின்  அடுத்த வரிகளான "ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!.................... எனும் வார்த்தைக் கோலத்தின் எதிர் நிலையாக தன்னைச் சுற்றியுள்ளோரது நிறைந்த சிரிப்பில் இலயித்தவராகி தானும் சிரிப்பவராகத்தான் எமக்கு அறிமுகமாயிருந்தார் பெரியார்தாசன். மகிழ்வுடன் இருத்தலே வாழ்வின் உன்னதத்தையும் சிறந்த கிரகித்தலையும் தரும் என்பதை சிரிப்புடன் உணர்த்தியவர்.
'ஈழம்' என்றால் என்னவென்றே தெரிந்திராது  'சிலோன்' என்றும் 'சிலோன்காரர்' என்றும் மேலோட்டமான நுனிப்புல் மேய்ந்த தமிழகத் தமிழர்கள் மத்தியில் எழுபதுகளின் கடைசியில் அறிமுகமாகி எண்பதுகளில் விரிவாகி தோழமையுடனான இணைப்பாக இறுகியது எமக்கிடையிலான உறவு. இதற்காக 'பொதுமை' 'தர்க்கீகம்' எனும் பத்திரிகைகளுடன் தொடர்பைத் தொட்டவர்கள் சுந்தர் - பெரியபாலா - சின்ன பாலா. ஈழத்தமிழர்களின் 'கதைத்தலை' - பேச்சு மொழியைக் கிரக்கிக்க முடியாத பரிதவிப்புடன் கேட்ட இந்தியத் தமிழர்களின் ஆரம்பச் செவிகளில் இவரது செவிகளும் அடங்கும் என்பது வரலாறு. அக்காலகட்டத்தில் தெளிவான புரிதலுடன் கரிசனையுடன் 'ஈழத்தின் ' நியாயத்தைப் புரிந்துகொண்டு தமது இல்லத்திலேயே இடம் கொடுத்து முன்வந்து கரம் கொடுத்த அந்தப் பரிவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

அறிவாளிகளாகத் திகழும் பட்டம்பெற்றவர்கள் பெரும்பாலும் பாமரர்களின் அறிவுத் தேடல்வெளியில் பயணிப்பதில்லை. பாமரர்களை வெறும் 'மனித உயிரியாக'ச் சிறுமைப்படுத்தும் பெரும்போக்கு மிதப்பு எண்ணங் கொண்டவர்களாகவே இந்த அறிவுலக மேதாவிகள் எம்மத்தியில் நிறையவே காணக்கிடைக்கின்றனர். இவர்களில் வேறுபட்டவராய் இந்தப் பாமரர்களின் அறிவுச் சிந்தனைவெளியில் அவர்களுடன் பயணித்தவாறே தனது இனிப்பான பேச்சாற்றலால் பலரையும் மணிக்கணக்கில் கேட்க வைத்து சிந்தனையைத் தூண்டியது இவரது குரல். இந்தக் களப்பணி இவரது தனித்துவமான சாதனை என்றுதான் பதிவாகும். பல்வேறு பெயர்களில் இவரது வாழ்வுத் தடம் மாறியிருந்தாலும் இறுதி வரையிலும் அதனிலும் பின்பும் நீடித்து நிலைபெற்றது 'பெரியார்தாசன்' என்னும் சுட்டுப் பெயர் மட்டும்தான். மனித சிந்தனையைத் தூண்டும் இவரது உரைகள் காலம் தாண்டியும் இணையவலைகளில் பயணத்தைத் தொடரும்.


தொலைவில் புலம்பெயர்வின் நீட்சிப் பயணத்தில் வாழும் நான் கனத்த மனதுடன் தொலைபேசியில் அவரது வீட்டுக்குத் தொடர்பு கொள்கிறேன்.  அழுகையுடன் மகன் வளவன் துக்கத்தைப் பரிமாறிக் கொள்கிறான்.
விடைபெற்றுவிட்டாய்! - விடைகொடுக்க முடியாத தவிப்புடன் நினைவுகளைச்  சுமந்தவர்களாய் 'இறுதி வணக்கம்' செலுத்துகிறோம்.

மேலதிக இணைப்பு: பெரியார்தாசன் ஆவண இணையம் http://www.periyardasan.in/
(இது 30.05.2014 அன்று இணைக்கப்பட்டுள்ளது)
பின் இணைப்பு :

நன்றி : தமிழரங்கம் இணையவலை
-முகிலன்
பாரீசு 19.08.2013


4 comments:

  1. '90களின் கடைசியில் பாரீசு வந்திருந்தபோது எமது வீட்டில் நடந்த கலந்துரையாடலில்தான் 'பெரியார்தாசனை' முதன்முதலாகச் சந்தித்தேன்.

    அவரது சிரிப்பையூட்டும் உரையாடலால் கவரப்பட்டு எமது அயல்வீட்டு நட்புகளெல்லோரும் கூடி விழுந்துவிழுந்து சிரித்ததையும் அதோடு அவரது தர்க்கபூர்வமான கருத்துகளால் உந்தப்பட்ட சிந்தனை வளையங்களால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.

    அவரது நடிப்பாற்றலை அவர் உரையாடும்போதே (சொற்களும் அதை வெளிப்படுத்தும் உடல் மொழியும்) காணுற்று இரசித்திருக்கிறேன். அவர் நடிகராக வலம் வந்த திரைப்படங்களையும் தேடிப் பார்த்திருக்கிறேன்.
    சாதாரணர்களும் புரியக்கூடியதாகச் சொல்லித்தரும் அருமையான திறந்தவெளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
    பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களின் இழப்பால் தவிப்புறும் அனைவருடன் நானும் கலந்து கொண்டு துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. எண்பதுகளில் 'பெரியார்தாசன்' ஈழத்தமிழர்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுவார். "இவங்க தலையை ஆட்டினாங்கன்னா அது நல்லதற்கா... இல்லை பிடிக்கேல்லை என்றதற்கா என்று புரிஞ்சுக்கவே முடியாதப்பா." என்றவாறு தலையாட்டியும் காட்டுவார்.
    சரி டீ கொடுத்துப்போட்டு.... "எப்பிடிங்க....?" என்று கேட்டுப் பார்த்தால் இதற்கு ஒரு பதிலைச் சொல்லுவாங்க பாருங்க "ஏண்டா கேட்டோம்?" என்றாகிவிடும்.
    "டீ நல்லாத்தான் இருக்கு ஆனா கொஞ்சம் சீனி அதிகமாகப் போட்டிருக்கலாம்..." எனவாக அந்த அவங்களுக்கேயுரிய தலையாட்டல்களுடன் சொல்லுவாங்க 'இவங்களுக்கு டீ நல்லாயிருக்கா? இல்லையா?' -புரிஞ்சுக்குவே முடியாதுப்பா!!
    இவங்க எல்லாம் நம்மாளுங்க மாதிரி "டீ சாப்பிட மாட்டாங்க." "டீ குடிக்கிறவங்ள!" என்று சொல்லிச் சிரிப்பார்.

    ReplyDelete
  3. periyaar dasan iruthiyil muslimaka maari ABDULLAH aaga allava maranithaar ithai avar anaivarum ariyum vanname islathil inainthu atharkaaga pirachaaramum seithaar eninum athai ellam yean kurippidavillai sagotharaa

    ReplyDelete
    Replies
    1. « அறிவாளிகளாகத் திகழும் பட்டம்பெற்றவர்கள் பெரும்பாலும் பாமரர்களின் அறிவுத் தேடல்வெளியில் பயணிப்பதில்லை. பாமரர்களை வெறும் 'மனித உயிரியாக'ச் சிறுமைப்படுத்தும் பெரும்போக்கு மிதப்பு எண்ணங் கொண்டவர்களாகவே இந்த அறிவுலக மேதாவிகள் எம்மத்தியில் நிறையவே காணக்கிடைக்கின்றனர். இவர்களில் வேறுபட்டவராய் இந்தப் பாமரர்களின் அறிவுச் சிந்தனைவெளியில் அவர்களுடன் பயணித்தவாறே தனது இனிப்பான பேச்சாற்றலால் பலரையும் மணிக்கணக்கில் கேட்க வைத்து சிந்தனையைத் தூண்டியது இவரது குரல். இந்தக் களப்பணி இவரது தனித்துவமான சாதனை என்றுதான் பதிவாகும். பல்வேறு பெயர்களில் இவரது வாழ்வுத் தடம் மாறியிருந்தாலும் இறுதி வரையிலும் அதனிலும் பின்பும் நீடித்து நிலைபெற்றது 'பெரியார்தாசன்' என்னும் சுட்டுப் பெயர் மட்டும்தான். மனித சிந்தனையைத் தூண்டும் இவரது உரைகள் காலம் தாண்டியும் இணையவலைகளில் பயணத்தைத் தொடரும். » என்பதாகப் பதிவு செய்திருக்கிறேன்.
      ஒருவரது மரணச்செய்தியை கண்டங்கள் கடந்த தொலைவில் அறியும்போது எழும் தனிமனித அதிர்வு அலாதியானது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் இவ்வகையான பல அதிர்வுகளால் பரிதவித்து மனம் கனத்த வாழ்வைத் தொடர்பவர்கள் நாம். மரணித்த தகவல் கேட்ட அந்த நாளில் வீட்டில் அப்படியே உறைந்தபோது என் நினைவுகளில் கிளர்ந்த எனது தனிப்பட்ட எண்ணங்களில் பகிர்வு. தவிர பெரியார்தாசன் அவர்களது வாழ்க்கைக் குறிப்பை பதிவிடும் நோக்கைக் கொண்டதில்லை.
      இப்பதிவினை வாசித்தபோது எழுந்த எண்ணத்தைப் பின்னூட்டமிட்ட இணைய நண்பர் KAYALRAJVI அவர்களுக்கு நட்புடன் எனது நன்றிகள்.

      Delete