Tuesday, 11 March 2014

தோற்றவர்களும் - வென்றவர்களும்!!

குஞ்சரம் 20
தோற்றவர்களும் - வென்றவர்களும்!!

« நீ தோற்றவன்!! ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!! »


கிணிங்... கிணிங்... கிணி-கிணிங்..... தொலைபேசி மணி சிணுங்குகிறது. திரையில் தெரியும்  எண் பிறநாட்டு அழைப்பு என்பதையும் - யார் எடுத்துள்ளார் என்பதையும் உணர்த்த முகத்தை 'உம்' என்று வைத்தவாறு தொலைபேசியைக் கொண்டுவந்து போடுகிறார் துணைவி. உடற்பாவத்தால் வெளிப்படுத்தும் உன்னத மொழியாற்றல் பெண்களுக்கு இயல்பாகவே வந்ததொன்று. அவர்களது சுயமான பிரயாசத்தால் அது மெருகேறி தனித்துவக் கலையாக பரிணமித்துள்ளது. இதை நம் எல்லோரது வீடுகளிலும் பிரகாசிக்கும் உடல்மொழி விளக்காகக் காணலாம்!. இதனால்த்தான் 'விளக்குகேற்ற வந்தவள்' என பெயரிட்டார்கள் போலும்!! இந்த 'லேசர் ஒளி வீச்சு' அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் புரியும் தனித்துவ மௌன அலை வரிசைகளைக் கொண்டவை. இவற்றில் சில பொதுத் தன்மையும் கொண்டவை.

நாம் வேறொரு வீட்டுக்கு செல்லும்போது அந்த வீட்டுக்கான 'லேசர் ஒளி வீச்சு' மௌன அலையை எம்மால் பல சமயங்களில் உணரவே முடிவதில்லை. ஆனால் எம்மோடு வந்த துணையாளுக்கு இவை துல்லியமாகப் புரிந்துவிடும். இது புரியாது நாம் நடந்து கொண்டதை அவர் கேலியாகச் சுட்டும் விளக்கவுரையால் பல சமயங்களில் திக்குமுக்காடித் திணறியிருக்கிறோம்.

அன்று முகம்பார்த்து வெளிப்பட்ட இப்படியான 'லேசர் ஒளி வீச்சு' மொழியாடல் இன்று வெறும் குரல் வழித் தொடர்பாடாலாய் அமைந்த தொலைபேசியிலும் ‘வானொலி அரங்க அதிர்வாகப் பரிணாமம் அடைந்துவிட்டது. இப்போது அட்ட அவதானமில்லாது உரையாடல்களை மொழிபெயர்த்து உய்த்து உணரமுடியாது. சமயங்களில் இவ்விடையத்தில் தமது ஆற்றலால் எமக்கு உறுதுணைபுரிபவர்கள் நம் துணையாள்தான். ஆனால் இன்று வந்து விழுந்த தொலைபேசியை எடுத்துக் கொண்டு ஏதும்பேசாது தனியறைக்குள் செல்கிறேன்

"வணக்கம்!! வாழ்க! வளமுடன்!!"

"ஓ!!! வணக்.... கம்!! சரி!! சரி!!" மகிழ்வுடன் எதிர் முனையில் குரல்.
"வேறு பத்திரிகைகளில் வந்ததா?" ஆர்வத்துடன் தொடர்கிறார்.
"அதுதான் நடந்து இரண்டு மாதங்களாயிற்றே இனி எங்கு வரப்போகிறது. போதுமான அளவில் வெளிவந்துவிட்டது; இது போதும்!!" அமைதியாக நான்.
"இல்லை.... முகிலன்! இவற்றை முறைப்படி செய்யவேண்டும்; உமக்கு எப்படிச் செய்வதென்றே தெரியவில்லை. பத்திரிகை ஆளுங்கள் இப்ப முன்னர் மாதிரி இல்லை. ஏகப்பட்ட போட்டிகள். தகவல்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. எதை எப்போது தரவேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகவே இருப்பார்கள். காலம் கடந்தால் போடவே மாட்டார்கள்.  நிகழ்வு நடக்கும்போதே இதை எழுதி வைத்துவிடவேண்டும். நிகழ்வு முடிந்ததும் சரியான திருத்தங்களைச் செய்து அனுப்பிப் போடவேண்டும்..... சரியோ!!" என இழுத்தார்.
"ஆ..... சரி சரி!!" என்கிறேன். புதிய பாடமொன்றை அறிந்த திருப்தி என் குரலில் இருந்திருக்க வேண்டும்.
"உமக்கு இன்னும் கன விசயங்கள் தெரியாது!! இப்படி எத்தனையோ இருக்கு!" என்றாவாறு கட கட.... என சிரிக்கிறார்.
"ஓம்!! இப்பத்தானே அறிகிறேன்... அடுத்த தடவை கலக்கலாம்!" எனது குரலில் அசடு வழிந்திருக்க வேண்டும்.
இந்த நட்பு 33 வருட நீட்சியுடையது. மாதத்தில் நான்கு தடவையாவது தொலைபேசிவிடுவார். கோபிக்க மாட்டார். எடுத்த காரியத்தை நிறைவு செய்யும் வரையில் ஓயவும் மாட்டார். இதற்காக ஒருநாளில் நூறு தடவை தொலைபேச வேண்டி வந்தாலும் சளைக்க மாட்டார். ஆனால் அவரிடம் இருப்பது கைத்தொலைபேசி ஆகையால் எம்மால் அதிக நேரம் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் அவர்தான் எம்முடன் தொடர்பை ஏற்படுத்துவார்.
குசல விசாரிப்பாக அமைந்த உரையாடல் நீட்சி உலகம் பரவி வாழத் தலைப்பட்டுள்ள நண்பர்களது பிள்ளைகளின் திருமணத் தேவை பற்றிய அவரது அக்கறையில் வந்து குவிந்தது.
"நம்ம வாசனின் குழந்தைக்குப் பொருத்தமானவரைத் தேடவேண்டும்!"
எனக்கு இப்ப பேசிச் செய்ய முனையும் திருமணங்களில் சிறிதேனும் நம்பிக்கை இல்லை. புலம்பெயர்வு வாழ்வில் எமது எதிர்காலச் சந்ததி அடுத்தவொரு புத்தம் புதியதான  மனத்தளத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்களது ஈடுபாடோடு இயைந்ததை மேற்கொள்ள இந்தப் 'பெரியவர்களால்' முடியாது என்பது எனது தாழ்மையான முடிவு. எனது எண்ணத்தை நான் தெரிவிக்காது  சும்மா 'உம்' கொட்டினேன்.
"என்ன.... அக்கறையில்லாது இருக்கிறீர்? ஏதாவது செய்ய வேண்டும்.... அங்க அவுஸ்திரேலியாவில் இரத்தின அண்ணையின் மகளுக்கும் பார்க்க வேண்டும்!" குரலில் உரிமையான அழுத்தமிருந்தது.
"குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பின்... சாதகம் அது இது என்று பார்க்காது..... பரந்த விட்டுக் கொடுப்புகளுடன்தானே தேட முடியும்?" எனது குரலில் பௌவியம் குழைந்தது.
"என்னத்தை விட்டுக் கொடுக்கிறது?.... ஆ!! ஆஆஆ!! .... அவர்களது பாரம்பெரியமென... படிப்பென்ன.... அவர்கள் பார்க்கும் வேலையென்ன.... அவர்களது அந்தெஸ்து என்ன.... அந்தக் குழந்தைகள் எவ்வளவு நல்ல பிள்ளைகள் தெரியுமா?.... சீ... சீ... வடிவாத் தேடினால் இங்கு கிடைக்கும்." வார்த்தைகளுடன் மூச்சிரைத்தது.
அவரது ஈடுபாடும் நம்பிக்கையும் என்னை அதிர வைத்தது. "அப்ப இணையத்தளங்களில் அறிவிக்கலாமே? இலங்கை - இந்தியா - மலேசியா எனத் தேடலாமே?" நானும் மனந்திறந்து உரையாடுகிறேன்.
"சிச்சீ!! உ ஊ... உதுவெல்லாம் சரிப்பட்டு வராது!... உமக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லித்தேடும்!!" அவர் எங்கு?எப்படித் தேடவேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்.
"நான் யாரிட்டைச் சொல்ல?.... இலங்கையில் பார்த்தால் என்ன? பிரான்சிலிருந்து எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் இப்படியாகத் திருமணம் நடந்திருக்கிறது." நொந்து போனவனாக இழுக்கிறேன்.
"அதெப்படி சாத்தியப்படும்? குழந்தைகள் இங்கு பிறந்து வளர்ந்ததுகள்! நல்ல இடத்தில வேலை செய்யுதுகள். அதற்குத் தகுதியான அந்தஸ்து இருக்க வேண்டும்தானே!!"
"வெளிநாட்டு மாப்பிளைக்காக அப்போது தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலில் விரதம் பிடிச்சதை மறந்தா போயிற்று. இங்கு அல்ஜீரியர்கள் இப்படியாகத் திருமணம் செய்கிறார்கள்தானே! இன்னுமேன் பாண்டிச்சேரிக்காரர்களும் தமது சொந்த பூமியிலிருந்து அடைகிறார்கள்தானே!"
"சிச்சீ!! உ ஊ... உதுவெல்லாம் சரிப்பட்டு வராது!..." என்று மறுத்தவர் எதிர் முனையில் எனது குரல் வராததைக் கவனித்ததாலோ என்னவோ தொடர்கிறார் "நீர் ஓர் அக்கறையில்லாத ஒருவர் - முயற்சிக்கத் தெரியாத ஒருவர்!!" முகத்தில் அறைந்தார்ப்போல் சொற்கள் விழுந்தன.
"என்ன சொல்கிறீர்?...." ஆச்சரியத்துடன் அசடு வழிகிறது எனது குரல்.
"நீர் முயற்சித்திருந்தால் உமது குடும்பத்தாரை இங்கு இழுத்திருக்காலாமே?"
"அதனாலென்ன... அவர்களது சொந்த மண்ணில் அவர்களது சுயத்துடன் நல்லாகவே கௌரவத்துடன் இருக்கிறார்கள்தானே!" எனது குரலில் கடுமை வெளிப்பட்டிருக்க வேண்டும்.
"சும்மா போம் முகிலன்.... அவர்களை இங்கு இழுத்து விட்டிருந்தால் இப்ப உமது அப்பரும் உயிரோடு இருந்திருப்பார். 'சாதகம்' பார்த்து நல்ல வருவாய்களுடன் சந்தோசமாக இருந்திருப்பார்கள். உம்மால் முடியவில்லை. முதலில் உம்மை.... உமது தோல்வியை ஒத்துக் கொள்ளப் பழகும்!!" திணறிப் போனவானானேன். என்னை அறியாது எனது முகம் இறுகுவதை உணர்ந்த எனது துணைவி கிட்டே வருகிறார். தனது கையால் சாந்தமாகப் பணிக்கிறார்.
"ஓம் நான்தானே... தோற்றுப் போனவன்! நீங்கள் இந்த விடையத்தில் வெற்றியடைந்தவர்கள்தானே!... அப்ப என்ன கவலை?" எனது குரல் வழியாக என்னையும் அறியாது எனது வழமையான நக்கல் மொழி இழைகிறது.
"ஓம்!! நான் எல்லோரையும் இழுத்துப்பொட்டன். என்னுடைய சகோதரன் சரியாக ஒத்துழைத்திருந்தால் இப்ப எல்லோரும் கனடாவில இருந்திருப்பம்!!"  என்றவாறு தொடர்கிறார்... "அங்க கனடாவில் குடியேறிவர்கள் தத்தமது சொந்தம் பந்தமென அனைவரையும் எடுத்துவிட்டுள்ளார்கள். இப்படியாக கிராமங்களே குடிபெயர்ந்து விட்டன தெரியுமா? இது தெரியாது எப்படி உம்மால் வாழ முடிகிறது?" அவரையறியாது பெருமூச்சு வெளிப்பட்டதை உணர முடிந்தது.
"அப்ப நீங்களெல்லோரும் வென்றவர்கள்!! மிகவும் சந்தோசம்! வாழ்த்துகள்!"
"அந்த நேரத்தில போராட்டம் அது இது என்று வாழ்ந்ததாலே பதுங்கி வாழ நேர்ந்தது. இதனால் என் அப்பாவையும் சகோதரத்தையும் ஊரில நடந்த குண்டுத் தாக்குதலில் இழக்க வேண்டியதாய்ப் போயிற்று! அவர்களுடன் சாதாரணமாய் வாழ்ந்திருந்தால் எல்லோரையும் காப்பாற்றி இருப்பேன். இதை இப்ப நினைத்தாலும் அருவருப்பாக இருக்கு!"
ஏதோ விடையத்தில் தொடங்கிய நட்பு உரையாடல் நினைவிலி மனக்கிளறல்களில் நுழைந்து தோற்றுப்போனவர் - வென்றவர்கள் என்ற எதிரெதிர் கொப்பளிப்புடன் முற்றாகிறது.
000 000 000

இப்பேர்ப்பட்ட வென்றவர்கள்
·         "அங்கு நடந்த போராட்டத்திற்கு ஏன் - எப்படி ஆதரவளித்தார்கள்?"
·         "ஏன் ஈழத்தில் மிச்சமாகத் தங்கிப்போனவர்கள் தொடர்பாக அக்கறை கொள்கிறார்கள்?"
·         "அப்படியாக மிகுதியானவர்களையும் இங்கு இழுத்துவிடப் போகிறார்களா?"
·         "ஈழத்தில் தமது அடையாள இழப்பிற்காகவா பதறித் துடித்தார்கள் - வெளியேறினார்கள்?"
·         "தத்தமது தனி வம்சத்தின் எதிர்காலத்தை அக்கறையிடும் இவர்கள் தமது புலப் பெயர்வால் உருவாகிய 'எதிர்காலத்  தலைமுறையினர் அடையாளம்' தொடர்பாக என்ன கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்?"
எனவாக எனக்குள் விரிந்தன சிந்தனைச் சுனாமி அலைகள்.
000 000 000


தொலைபேசியின் பரிணாமத்தினைத் தனியாக ஆய்வு செய்தாலேயே மனிதர்களது மனவெளியை இலகுவில் மதிப்பிடலாம். கிரகாம் பெல் அடைந்த தொடக்கப் புள்ளி சென்ற நூற்றண்டின் கடைசியிருந்து அதிவேகத் தொடர்பாடலைத் தந்து இன்று உள்ளங்கைகளுக்குள் உலகத்தைச் சுருக்கிவிட்டது.
எமது புலம் பெயர்வு வாழ்வினால் பிடுங்கப்பட்டுத் தவிர்த்த மானிட உணர்வுக்குப் புத்துயிர் கொடுத்த விஞ்ஞானக் கருவி 'தொலைபேசி' என்பதை வாஞ்சையுடன் பதியவேண்டும்! மடல் வழியான தொடர்புகள் படிமுறையாகச் சிறுத்துப்போக, கண்காணாத் தொலைவிலிருந்தாலும் தொடர்பு கொள்ளும் குரல் வழியான உணர்ச்சித் தொடர்பாடல் அதீத வளர்ச்சியுடன் ஆக்கிரமித்தது. புறக் கண்ணால் பார்க்காதிருந்தபோதும் குரல் வழியாக காதினுள் நுழையும் அதிர்வலைகள் மண்டையை உசுப்பி மனக் கண்ணைப் பார்க்க வைத்தது. இதனால் வார்த்தைகளால் நிரவி வந்த கடிதங்களைப் பறந்தள்ளியது. பூர்விகப் புவியிலும் - இங்குமாகவும், இங்குயெங்குமாகவும் மானிடநேசங்களை இணைக்கும் குரல் பாலமாகியது தொலைபேசி..  கடந்த நான்கு தசாப்பதமாக நீளும் புலப்பெயர்வு வாழ்வில் எப்பேர்ப்பட்ட மாற்றங்களை  இந்தத் தொலைபேசிக் கருவிகளில் கண்டிருக்கிறோம். 

இப்போது இணைய வலைத் தொடர்பாடலில் அமையும் ஸ்கைப், வைப்பர், மின் அஞ்சல் அலைபேசல் எனவாகி காணொலிப் பரிவர்த்தனையும் ஆகிவிட்டது. ஆனாலும் வீட்டுத் தொலைபேசியும் கைத்தொலைபேசியும் தரும் "கிணிங் கிணிங்..." தொண தொணப்பு அழைப்பும் பல்வேறு பாட்டிசையுடன் வரும் அழைப்பும் "புறுக் புறுக்..." எனக் குறுகுறுக்கும் அதிர்வழைப்பும் எம்மைச் சும்மா இருக்கவே விடாது.
000 000 000

90களின் ஆரம்பத்தில் சற்றும் எதிர்பாராது  அமைந்த திருமணமும் இதனது நீட்சியான இரண்டாவது ஐரோப்பியப் புலப்பெயர்வும் மிகத் தெளிவான தனிவாழ்வுத் தெரிவைத் தந்திருந்தது. அது 'மௌனமாக'ப் பயணிக்கும் வாழ்வாகப் பட்டறிவு கட்டியமிட்டது.
எதிர்பாராது பிரான்சு வந்தபோது ஈடுபட்ட கலை இலக்கிய இதழ் 'ஓசை' பின்னர் சுயமாகத் தொடங்கி நடாத்திய இதழ் 'மௌனம்'. இந்த இரு சொற்களும் தரும் முரண் நகையை இன்றும் நான் புன்முறுவலுடன் மீட்பதுண்டு. இதன்பின் புத்தாயிரத்தில் நம்பிக்கையின் தொடக்கமாக  - அடுத்த கட்டத் தமிழின் எதிர்விடலாக  - தமிழின் எதிர்கால இணைய வலைப் பாதை வழியான நான்காம் பரிமாணமாகத் தெரிந்த  'அப்பால் தமிழ்' அமைந்தது. பண்பாட்டு செயற்பாடாக "நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!" என்ற விருதுவாக்கியத்தைக் கொண்ட 'சலனம்' அமைந்தது. இவற்றின் தொடர்ச்சியில் இன்று 'சிலம்புச் சங்கம்',  தொடரும் இலக்கியக் சஞ்சிகைப் பயணமாகக் 'காக்கைச் சிறகினிலே',  தனிப் பதிவாகத் தொடரும் 'தோரணம்'  இணைய வலை எனவாகவும் தொடர்கிறது. புலம்பெயர்வின் நீட்சியுடனான வாழ்வில் தமிழ் - தமிழர் - எமக்கான தனித்துவக் கலைப் பண்பாட்டுத் தொடர்ச்சி  எனக் 'காலம் அரித்திடாது மூலம் காக்கும்!' கனவுகளைச் சுமந்ததாகவே பயணிக்கிறது.

பின் இணைப்பு
1. மௌனம் முதல் இதழ் பிரகடனம் 'தோற்றுப்போனவர்கள்!'
2. புலம்பெயர்வு வாழ்வில் 'பதியமிடல்'

பிற்குறிப்பு:
தொலைபேசி:

படங்கள் நன்றி : கூகிள் இணைய வழங்கி

முகிலன்
பாரீசு 09.03.2014


1 comment:

  1. வணக்கம் சேகர் தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்!!

    ReplyDelete