அறிவகம் : ஒலி ஊடகம்
“குரல்
வழி (ஒலி) ஊடகத்தில்
தமிழ் - அன்றும்
இன்றும்”
-
பி.எச். அப்துல் ஹமீட் [இலங்கைத் தமிழ் வானொலி தொகுப்பு அறிவிப்பாளர்]
“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” என செவிப்புலனை மேன்மைப்படுத்திப் பாடியிருக்கிறார், அய்யன் திருவள்ளுவர்.
செவிப்புலன் இல்லாதவனே-
பிறவி ஊமையாகவும் கருதப்படுகிறான். செவிவழியாகச் செல்லும் ஒலிகளே - மனிதனது
சிந்தனைகளை வடிவமைக்கின்றன என்கிறார், அமெரிக்க BROWN பல்கலைக்கழகப் பேராசிரியர் SETH HOROWITS. அவர் எழுதிய “The Universal Sence
: How hearing shape the mind” எனும் நூலில் வலியுறுத்துவதும் இதனையே. மனிதனது பார்வைப்புலனை
விட, செவிப்புலனே மிக மிகச் சிறப்புக்குரியது எனப் பல ஆய்வுக்குறிப்புகளோடு
நிரூபிக்கிறார்.
செவிடனாக இருப்பதைவிடக் குருடனாக இருப்பதையே தான்
விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார்.
நம் பிறப்பின் ரகசியங்களைக் கூறும், மருத்துவ விஞ்ஞான
ஆய்வுகளின்படி
- கரு,
வளர்ச்சியுற்ற 13வது வாரத்திலேயே “செவி”
உருவாக ஆரம்பித்து, 20வது வாரத்தில்
முழு வளர்ச்சியைப் பெற்றுவிடுகிறது. ஆனால் கண்களோ, 26வது வாரத்தில் தான் ஆரம்பமாகிறது. தாயின் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் நுண்ணிய ஒலிகள் அனைத்தையும் கேட்கும் ஆற்றலை, சிசு கர்ப்பத்துக்குள்ளேயே பெற்று விடுகிறது. அது மட்டுமா!
வெளிஉலகில் தாய் பேசும் குரலையும், இசை ஒலிகளையும் கூட,
கர்ப்பத்துக்குள்ளிருந்து சிசுவால் கேட்க முடிகிறது என
ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய இந்த ஆய்வுகள் கூறும் உண்மைகளை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே,
அய்யன் வள்ளுவன் கூறியது விந்தைதான். குழந்தை,
ஒரு மொழியை எவ்வாறு பேச ஆரம்பிக்கிறது? தன் செவிவழியாக,
நம் பேச்சொலிகளைக் கேட்டு, முகபாவங்களையும் உடலசைவுகளையும், கண்ணால் பார்த்து, தான் உள்வாங்கிய பேச்சொலிகளைப் பிரதிபலிக்க முயன்றுப் பேச ஆரம்பிக்கிறது. அக்குழந்தைக்கு செவிப்புலன் இல்லாதிருந்தால், பார்வையில் கண்டவற்றால் பயனில்லை. காரணம், ஒலி என்றால் என்னவென்று அக்குழந்தைக்குப் புரியாது.
இவ்வாறு குழந்தை முதன் முதலில் பேசும் மொழியே, அதற்குத் தாய் மொழியுமாகிறது. தமிழ்ப் பெற்றோர், குழந்தையிடம் வேற்று மொழியில் பேசி, அதனைக் கிரகித்துக்
குழந்தை பேசுமானால்
- அதுவே அக் குழந்தைக்குத் தாய்மொழியாகிறது. காரணம்?
சிந்திக்கும் மொழியும் அதுவாகிவிடுவதே.
என்ன..?
சிந்திப்பதற்கு ஒரு மொழியா? என, நீங்கள் இப்போது சிந்திக்கலாம். உண்மையில் ஒவ்வொருவரும்
சிந்திப்பதற்கு நம் உணர்விலேயே பதிந்துவிட்ட முதல் மொழிதான் பயன்படும். பின்னாளில் பன்மொழிகளில் பேசும் ஆற்றலை நாம் பெற்றாலும், அந்தந்த மொழிகளிலேயே உடனுக்குடன் சிந்தித்துப் பேசும் ஆற்றலை
வளர்த்துக்கொண்டாலும்.
அடிப்படையான நம் சொந்தவிடயங்ளை, நிச்சயம்,
குழந்தைப்பருவத்தில் நமக்குள் பதியம்போடப்பட்ட அந்தத் தாய்
மொழியில் தான் சிந்திப்போம், இல்லையா!
தாய்மொழி என்றால் என்ன என்பதைப்பற்றி, வாணியம்பாடித்
தமிழ்பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் சொன்ன ஒரு கருத்தும், இப்போது என் நினைவுக்கு வருகிறது. தாய்மொழி என்பது, தாய் பேசிய மொழியோ,
தந்தை பேசிய மொழியோ அல்ல, குழந்தை முதன்முதலில் எந்தமொழியைப் பேசியதோ- அதுவே அக்குழந்தைக்குத் தாய் மொழியாகும் என்று கூறி,
கவிதைபோன்ற ஒரு விளக்கத்தையும் தருவார். தாயின் கருவறையில் இருந்தபோதும், வெளியில் வந்த பின்னரும், தன் செவிவழியாகக் கேட்ட ஒலிகளைத் தன் குரல்வழி பிரதிபலிக்க, குழந்தை எடுத்துக்கொள்ளும் முயற்சியிலே, ஒரு மொழி பிரசவமாகிறது. எனவே அக்குழந்தையைப் பொறுத்த அளவில், பிரசவிக்கப்பட்ட அம்மொழி
குழந்தையைத் தாய் ஆக்குகிறது. அதுவே தாய்மொழி என்கிறார்
அவர்.
இத்தனை விளக்கமும் எதற்கென்றால். செவிவழியாகச்
செல்லக்கூடிய ஊடகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே.
ஒரு மொழி நிலைத்து வளர ஒலிஊடகத்தின் பங்கு மிகமுக்கியமானது. ஓலி ஊடகம் என்று சொல்லும்பொழுது, அங்கு முன்னிலை வகிப்பது, வானொலியே.
காரணம், வானொலி எனும் சாதனம், மானுடவாழ்க்கையில் தன் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்த பின்னர், எத்தனேயோ நவீன மின்னியல் சாதனங்கள் வந்துவிட்டாலும், வானொலியின் சக்தியை எந்த நவீன சாதனமும் விஞ்சியதில்லை, விஞ்சப்போவதுமில்லை.
ஏனெனில், தொலைக்காட்சி போன்ற
சாதனங்களுக்காக எமது ஐம்புலன்களையும், ஒருமுகப்படுத்த
வேண்டியிருக்கும்.
ஆனால் நமது அன்றாட அலுவல்களுக்கு இடையூறு செய்யாமல் நம்மை
வந்தடையக்கூடிய சக்தி,
வானொலிக்கு மட்டுமே உண்டு. எனவே வனொலி என்பது,
பொதுவாகப் பொழுதுபோக்குச் சாதனங்களில் ஒன்றெனக்
கருதப்பட்டாலும்,
வானொலி ஆற்றிய, ஆற்றவேண்டிய பணி மகத்தானது.
ஆரம்பகாலத்தில்,
ஒரு நாட்டின் நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்புப் பாலமாக விளங்கியது வானொலியே. அன்று
- கல்வி - தகவல் - பொழுதுபோக்கு,
என்றிருந்த, வானொலியின் செயற்பாடுகள், இன்று-தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரையில், கல்வி காணாமல்போய், தகவல்,
மற்றும் பொழுதுபோக்கு என்றாகி, தற்போது தகவலும் தொலைந்துபோய், மொழியும் சிதைவடைந்து, பெரும்பாலும் பொழுதுபோக்கும் வர்த்தக நோக்கமுமே மேலோங்கி வருவது, கவலையைத் தருகிறது.
நமது மொழிவழி, கலாசாரப் பண்பாட்டுக்
கோலங்கள்வழி வந்த விழுமியங்களை சிறிது சிறிதாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
விழுமியங்களைக் காக்கும் பணியில் ஊடகத்தின் பங்கு என்ன? செவிவழியாகச் செல்லும் ஒலிகளே மனிதனது சிந்தனைகளை வடிவமைக்கின்றன. என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதனை நியாயப்படுத்தும் வகையில் ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், எனக்கு வந்தது.
1996ம் ஆண்டு,
நவம்பர் மாதத்தில், BENIN எனும் மேற்கு ஆபிரிக்க
நாட்டில்,
நெதர்லாந்து வானொலியால் நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை அது. அதன் தலைப்பு
- “The
Relevance of Media for adolescents (growing up in Island societies)” சுருங்கச்சொன்னால் “விடலைப்பருவத்தினரின் சிந்தனைகளை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு” எனும் கருப்பொருளில், பலவிடயங்கள் ஆராயப்பட்டன. சில வழிகாட்டுதல்களும்
அங்கு தரப்பட்டன.
உண்மைதான்!
மனித வாழ்க்கையில், பெற்றோரது வழிகாட்டல்கள், ஆசிரியர்களின் வழிகாட்டல்கள், இவற்றைத்தாண்டி சுயமாக, சிந்தித்துச் செயல்படும் சுதந்திரம், இந்த “விடலைப் பருவத்தில்தான்” ஒவ்வொருவருக்கும்
ஆரம்பமாகிறது.
இக்காலகட்டத்தில் நமது சிந்தனைகளில், செயல்களில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு- ஒன்று நமக்கு அமையும் நண்பர்களின் சகவாசம். அடுத்தது ஊடகங்களால்
ஏற்படுத்தப்படும் தாக்கம்.
இதனையே “Adolescents and the Media” என்ற நூலின் ஆசிரியர் - Victor S
Strasbuger அழுத்தமாக
குறிப்பிடுகிறார்:
“விடலைப்பருவத்தில், வன்முறை உணர்வு, சமூகவிரோத மனப்பாண்மை,
தவறான பாலுணர்வுச் சிக்கல்கள், போன்றவற்றைத் தூண்டுவதற்கான காரணிகளில் ஊடகங்களே முன்னிற்கின்றன” என்று.
Benin நாட்டில் பெற்ற
பயிற்சியின் முடிவில் நாடுதிரும்பிய பின், அவ் வழிகாட்டுதல்களை நான்
பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகத்துறையில் பயன்படுத்தமுடியாத அளவு காலம் மாறியிருந்தது. காரணம்!
வனொலி, தொலைக்காட்சி என இரண்டு
துறைகளிலும் தனியார் வரவு அப்போது ஆரம்பமாகியிருந்தது. அவ்வரவு,
ஆரோக்கியமானதோர் போட்டியைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, நூறு சதவிகிதம் வர்த்தக நோக்கமே மேலோங்கி, முழுக்க முழுக்க
பொழுதுபோக்கு என்ற நிலையில், விழுமியங்களைத்
தொலைக்கும் நிலையும்,
அந்நிய கலாசார அத்துமீறல்களும் துளிர்விட ஆரம்பித்திருந்தன.
மாணவப்பருவத்தில் பொதுவாக ஏற்படக்கூடிய மன அழுத்தங்களிலிருந்து விடுபட ஒரு
வடிகாலாய் அமையக்கூடிய,
பொழுதுபோக்குச் சாதனங்கள், இனிப்பூட்டப்பட்ட மருந்து போல, விழுமியங்களைக் காக்கும்
பணியையும் ஆற்றவேண்டும் என நம்பப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நான் எனது ஒலிபரப்பு
வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தேன். இது கொஞ்சம் மனோதத்துவ
ரீதியாக,
பொறுப்புடன் ஆற்றவேண்டிய பணி என்பதை, நமக்கு வழிகாட்டியவர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். அறுபதுகளின் பிற்பகுதியில் ஒரு ஒலிபரப்பாளனாக என் பயணத்தை ஆரம்பித்தபோது, என்னுள் விதைக்கப்பட்ட விழுமியப் பண்புகளே, எனக்கோர் சிறந்த
அத்திவாரமுமாக அமைந்தது.
அவற்றில் சிலவற்றைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஒலிபரப்பாளர்கள் மொழிக்காற்றவேண்டியப பங்களிப்புகள்:
நாம் ஒரு விளம்பரத்தை வாசிக்கும் போது கூட, அதனைக் கேட்கும் வளரும்
தலைமுறை,
அம்மொழியைத் தெளிவாகவும், இலக்கண வழுவின்றியும்,
உச்சரிக்கத் கற்றுத் தரும் ஒரு ஆசிரியர் நாம் என்ற
பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும் எனச் சொல்லித் தரப்பட்டது. அதேவேளை,
பிரதேசச் சார்பு இல்லாத, குறிப்பாக வட்டார
வழக்கின் உச்சரிப்புச் சாயல்கள் இல்லாத, பொதுவான நல்ல தமிழில்
அறிவிப்புப் பணிகளைச் செய்தால்தான், பிரதேச எல்லைகள் கடந்து
மக்களைச் சென்றடையலாம் என்ற பேருண்மையும் சொல்லித் தரப்பட்டது.
சக்தி வாய்ந்த இவ்வூடகத்தின் மூலம், மறைந்து மறந்தும்போன நல்ல
தமிழ் சொற்களை,
நேயர்களுக்கு நினைவுபடுத்தி, மீண்டும் வழக்கில் கொண்டுவர முயலும் அதேவேளை, புதிய கலைச்சொற்களை அறிமுகப்படுத்தவும் முயலவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
உதாரணத்துக்கு ஒன்று :- வர்த்தக விளம்பரப்பிரதிகளை வடிவமைப்பதில் வித்தகரான, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்கள்- Ballpoint Pennக்கு
“குமிழ்முனைப் பேனா” என்றொரு சொல்லை
அறிமுகப்படுத்தினார்.
முதன்முறையாகக் கேட்பவருக்கும் அது என்ன, என்பது புரியும் வகையில் அச்சொல்லாக்கம் அமைந்திருந்ததால் நாளடைவில், பள்ளி மாணவர்க்கும் பரிச்சியமான பெயராக அது
மாறியது.
பேசும் மொழியோடு, அம்மொழிவழி வந்த கலாசாரப்
பண்பாட்டுக் கோலமுமே,
ஒரு சமூகத்தின் முகமாகும். அவ்வுண்மையை உணர்ந்து,
அத்தகைய கலாசாரப் பண்பாட்டுக் கோலங்களை அடுத்துவரும்
தலைமுறையும் பெருமையோடு பின்பற்றத் தூண்டுவதும், ஊடகத்தில் பணியாற்றுவோரது கடமையாகும்.
ஒரு வானொலியின் அலைவரிசை எட்டும் தூரம் வரை வாழும் மக்களை ஈர்க்கவேண்டுமெனில்
ஒரு ஒலிபரப்பாளன் குறுகிய வட்டத்துக்குள் சுற்றிவராமல் அவனுக்கு பரந்த பார்வை
இருக்க வேண்டியது அவசியமெனவும் எங்களுக்குச் சொல்லித்தரப்பட்டது. ஒரு கல்லூரியில்,
அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்போது பெரும்பாலும்
பரீட்சையின் பெறுபேறு,
அதனால் கிடைக்கும் சான்றிதழே பலரதும் குறிக்கோளாய்
இருக்கும்.
ஆனால், ஒரு ஒலிபரப்பாளனுக்கோ, ஒருவிடயத்தைப் பற்றிய தகவல் எந்த நேரம் தேவைப்படும் எனக் கணித்துக் கருமமாற்ற
முடியாது.
பல்துறை சார்ந்த அறிவை, விரல் நுனியில்
வைத்திருப்பது அவசியம் என்பதால். எவ்வேளையும் தேடல் தேடல், என அறிவுத் தாகத்தோடு விளங்குபவனே சிறந்த ஒலிபரப்பாளனாகத் துலங்கமுடியும். எனவே ஊடகத்துறையில் பணியாற்றுவதென்பது, உலகத்திலேயே சிறந்த
பல்கலைக் கழகத்தில் கற்பதற்கொப்பானது.
இனி நிகழ்காலத்துக்கு வருவோம். இன்றைய காலகட்டத்தில், ஊடகத்துறையில் விழுமியங்களைப் பற்றி வலியுறுத்தும்போது, மற்றுமொரு கேள்வியும் எழலாம். தனியார்துறையைப்
பொறுத்தவரையில் ஒரு ஊடகத்தின் ஆயுள் என்பது, அது தேடக்கூடிய
வருமானத்திற்கான
- வர்த்தக நோக்கிலல்லவா தங்கியுள்ளது. ஆகவே எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது? என்று.
உண்மைதான்.
வருமானத்திற்கான - வர்த்தக நோக்கமும், சமூக அக்கறையம் கைகோர்க்க, ஒர் ஊடகத்தை நடத்திச்
செல்வதென்பது,
ஒற்றைக் கம்பியில் நடக்கும் சாகசத்தைப் போன்றதே. முன்பு இருந்த ஆரோக்கியமான சூழலில், விளம்பரதாரர்களுக்கு, தமது தயாரிப்புகளை,
மற்றும் பொருள்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்
வழிமுறைகள் பற்றிய அறிவோடு,
நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் இருந்தது. இன்றைய அவசர உலகில் அதற்கெல்லாம் நேரமேது? கண்ணுக்குத்
தெரிவதெல்லாம் நுனிப் புல்லாய் மேயக்கூடிய, சினிமா சார்ந்த
ஜனரஞ்சகமான விடயங்களே.
தம் விளம்பர முயற்சிகள் உண்மையிலேயே மக்களைச்
சென்றடைகின்றனவா?
என்பதை மீளாய்வு செய்வதற்கும், அவர்களுக்கு நேரமிருப்பதில்லை, அதற்கான வழிகாட்டல்களும்
இதயசுத்தியோடு இயங்குவதில்லை. விளம்பரதாரர்களின்
குறிக்கோளைப் புரிந்து,
விளம்பரப்படுத்தப்படும் பொருள்களின் நுகர்வோர் வட்டம் எது, அந்த நுகர்வோரின் இரசனை என்ன, அவர்கள் ஊடகங்களுக்கு
செவிமடுக்கச் செலவிடும் நேரம் எத்தகையது, இவற்றைப் புரிந்து ஒரு
நிகழ்ச்சயை வடிவமைப்பது எப்படி? என்பதனைக் கடந்தகால
உதாரணமொன்றின் மூலம் விளக்க விரும்புகிறேன்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, மீன்பிடி வலைகளைத்
தயாரிக்கும் நிறுவனமொன்று.
என்னை அணுகி “மீனவர் விரும்பிக் கேட்ட
பாடல்கள்”
என்றொரு நிகழ்ச்சியை நடத்தித்தர முடியுமா எனக் கேட்டார்கள். வழக்கமாக நாம் நடத்தும் “நீங்கள் கேட்டவை” “நேயர்கேட்டவை” நிகழ்ச்சிகளிலும் கூட
மீனவர்கள் பாடல்களை விரும்பிக் கேட்பார்களே? மீனவர்களுக்கென்றே
பிரத்தியேகமாக நடத்தும் இந்நிகழ்ச்சியில் அவர்களே கலந்துகொண்டு, அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்கொள்ளவும், பாரம்பரியப் பாடல்களைப்
பாடவும்,
கலைத் திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கலாமே? என்று நான் வேண்டுகோள் விடுக்க, அவர்களோ, இப்பாடியான ஓர் நிகழ்ச்சி, எல்லா நேயர்களையும்
கவருமா? என கேள்விக்குறி எழுப்பினார்கள். ஏன், எல்லா நேயர்களும் கேட்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் தயாரிப்போ-
மீன்பிடி வலைகள்! அவற்றைப் பயன் படுத்தப்
போவதோ- மீனவர்கள்.
நிச்சயம் அவர்கள் கேட்கும் வகையில் நிகழ்ச்சி அமையும் என
நான் உறுதியளித்த பின்னர் அரை மனதுடன் சம்மதித்து மூன்று மாதங்கள் மட்டும்
ஒப்பந்தம் செய்கொண்டார்கள்.
இலங்கையில் தமிழ்பேசும் மீனவர் வாழக்கூடிய அனைத்துக்
கரையோரப் பிரதேசங்களுக்கும் நேரில் சென்று, அவர்களுடன் ஆழக்கடல் வரை
படகில் பயணம் செய்து,
எழுச்சியுடன் அவர்கள் பாடும் பாரம்பரியப் பாடல்களை
ஒலிப்பதிவு செய்து,
அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்து, மற்றும் பல கலைத் திறமைகளையும் பதிவு செய்து வாரந்தோறும் நான் வழங்கிய
நிகழ்ச்சி,
மீனவர்களை மட்டுமன்றி பெரும்பாலான நேயர்களையும் கவர்ந்து, பெரும் வரவேற்பைப் பெற்றதால், 3 மாத ஒப்பந்தம் மூன்றரை
வருடங்களுக்குத் தொடர்ந்தது.
இதுபோலவே தென்னிந்தியாவுக்கான ஒலிபரப்பில் “கிராமத்தின் இதயம்” என்ற ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக, தமிழகக் கிராமங்கள்
அனைத்திலும் நேரில் சென்று பாரம்பரிய மக்களிசை, நாட்டுக் கூத்து போன்ற
கலைத் திறமைகளை ஒலிப்பதிவு செய்து நான் வழங்கிய நிகழ்ச்சியும் மூன்றரை ஆண்டுகள்
தொடர்ந்து ஒலிபரப்பாகியது.
கிராமத்து மக்களுக்காகவும், மீனவர்களுக்காகவும்;, மட்டுமல்ல,
மாணவர்களுக்காகவும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள்
ஒலிபரப்பாகியுள்ளன என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? நண்பர் எஸ்.
ராம்தாஸ் அவர்களது தயாரிப்பில், “நட்சத்திர அறிவுக்களஞ்சியம்” என்றொரு விளம்பரதாரர்
நிகழ்ச்சி.
கல்விப் பொதுத் தராதர(உயர் வகுப்பு) மாணவர்களுக்கான பாடத் திட்டத்தினடிப்படையில் பொது அறிவுக் கேள்விகளை
உள்ளடக்கியதாக நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், யார்தெரியுமா? சினிமா சார்ந்த ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையே தொகுத்து வழங்கிப் பிரபல்யமான நண்பர்
கே.எஸ்.ராஜா அவர்கள்.
அந்நிகழ்ச்சி அவ்வாண்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்
அனைவருக்குமோர் வரப்பிரசாதமாக அமைந்தது மட்டுமல்ல. வருட இறுதியில் வெற்றி பெற்ற பாடசாலைக்குப் பரிசாக, ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தையே கட்டிக் கொடுத்தார்கள் அந்த விளம்பரதாரர்கள். இதுவோர் அச்சரியமல்லவா?
வர்த்தக நோக்கமும்,
சமூக அக்கறையும் எவ்வாறு கைகோர்த்துச் செயலாற்ற முடியும்
என்பதை எடுத்துக்காட்டவே இவ்வுதாரணங்களை இங்கு குறிப்பிட்டேன்.
தனியார் வானொலிகள் பற்றிய வரலாறை ஆராய்ந்தால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், தனிப்பட்டவர்கள், வர்த்தக நோக்கின்றி பொழுதுபோக்கிற்றகாக, ஆரம்பித்த Ham Radio வனொலித் தொடர்புகள்
நாளடைவில் லட்சக்கணக்கில் பெருகி, பின் International
Telecomunication Union எனும் அமைப்பின் கீழ்
ஒன்றிணைக்கப்பட்டன.
அவை தங்களுக்குள், பயனுள்ள தகவல்களை, அறிவை,
அவசரச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டன, நடுக்கடலில் ஆபத்தில் தத்தளித்தவர்கள் கூட Ham Radio த் தொர்புகளால் காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் நவீன விஞ்ஞான சாதனங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில், வானொலி என்பது பெரும்பாலும் ஒரு குடிசைக் கைத்தொழில் போல் மலிந்து விட்டதால்
விளையும் பயன்கள் என்ன?.
Terrestrial-Satellite-Internet
எனப் பலவேறு தளங்களில்
பல்லாயிரம் வானொலிகள் வலம் வருகின்றன. தமிழில் எவர்
நினைத்தாலும் ஒரு வனொலியை இணையத்தளத்தில் ஆரம்பித்துவிடலாம் என்று எளிதாக
நினைப்பதற்கான காரணம் எது?
இட்டுநிரப்ப இருக்கவே இருக்கின்றன, தமிழ்த் திரையிசைப் பாடல்கள் என்ற நிலைதான் முக்கிய காரணம். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் திரையிசைப் பாடல்களை எடுத்தாள, எந்தவித கட்டுப்பாடும்,
தற்போது நடைமுறையில் இல்லை.
நான் வனொலியில் பணியாற்றிய ஆரம்பகாலத்தில் ஒரு பாடலை ஒவ்வொருமுறை
ஒலிபரப்பும்போதும் ஒரு குறிப்பிட்ட தொகை படத் தயாரிப்பு நிறுனத்தின் கணக்கில்
சேர்க்கப்பட்டு,
மாத இறுதியில் தென்னிந்திய திரைப்படச் சம்மேளணத்திற்கு
அனுப்பிவைக்கப்படும். ஏன்? இன்றுவரை சர்வதேச மட்டத்திலான மற்ற மொழிப்பாடல்களுக்கு Royalty எனும் கொடுப்பனவு உண்டு. தமிழகத்தில் இப்போது
இயங்கும் வானொலிகள் கூட இந்த வரைமுறையைப் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம்மவர்களோ!
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல்
ஒரு தொகைப் பாடல்களை இணையத்திலிருந்தே இறக்கித் தம் கணினியில் தேக்கி வைத்து
தன்னியக்கமாக தமது வனொலியில் தொர்டந்து ஒலித்துக் கொண்டிருக்குமாறு செய்து, அதற்கு வானொலி என்ற பெயரையும் சூட்டிவிடுகிறார்கள். திருட்டு DVD போல,
அதுவும் ஒருவகையில் திருட்டுப் பாட்டுப் பெட்டி என்றே அவை
கணிக்கப்படவேண்டும்.
இத்தகைய வானொலிகளில்,
விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலரே இடையிடையே தகவல்கள், செய்திகள் போன்றவற்றைத் தருகிறார்கள். இவ்வாறு வானொலி என்பது
மிக எளிமையான ஒன்றாக மாறிவிட்டதில் நன்மையும் ஏற்படாமல் இல்லை. முன்பு Terrestrial வானொலிகள் மட்டும் இருந்த காலத்தில், சிற்றலை தவிர்த்து
மத்தியலை,
பண்பலை போன்றவற்றில் இயங்கிய வனொலிகளுக்கு எல்லைகளும், நேயர் வட்டமும் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று செய்மதி,
மற்றும் இணையத்தள வானொலிகள் செல்லும் தூரமோ வரையறுக்கமுடியாதது. அவ்வாறெனில் அவற்றின் பொறுப்பும் கூட விசாலமானது என்பதை நாம் உணரந்து செயலாற்ற
வேண்டும்.
வெறும் சினிமாப்பாடல்களை மட்டும் நம்பி, வானொலியை நடத்துவோமெனில், அல்லது பெரும்பாலான
வானொலிகளை நடத்துவோர்,
அன்றாடம் தொலைபேசி உரையாடல்களில் கலந்துகொள்ளும் சுமார்
இருபத்தி ஐந்துபேர்
(நிச்சயம் அதற்குமேல் இருக்க முடியாது) பேசும் கருத்துக்களை ஒட்டுமொத்த நேயர்களது ரசனையின் வெளிப்பாடு என்று நினைத்து
தமது வானொலியையும் ஒரேபோக்கில் நடத்துவார்கள் எனில், அவ்வாறான வனொலி,
வெறும் பத்தோடு பதினொன்றாகவே இருக்க முடியும்.
உண்மையில்,
எந்தவொரு நேயரது உள்மனமும், தகவல்களை அறியவும்,
அறிவைத் தேடவுமே ஆவலுடன் காத்திருக்கும். இதனைப் புரிந்து கொண்டு வானொலிச்சேவையை நடத்துவோர் மட்டுமே வெல்லப்போவது
நிச்சயம்.
அன்றைய சூழலில், வனொலியில் தம்
பங்களிப்பினை நல்குவோர்,
தொலைதூரங்களிலிருந்து வானொலிநிலையம்
இருக்குமிடத்துக்கு வந்துபோகவேண்டும். அதற்காக பல சிரமங்களைத்
தாங்கித் தம் பொன்னான நேரத்தையும் செலவிடவேண்டும். ஆனால் நவீன விஞ்ஞான வளரச்சியின் பயனாக. வானொலிக்குப் பங்களிப்பினை
வழங்குவோர்,
தேச எல்லைகளைத் தாண்டி வாழ்ந்தாலும், தாம் இருக்கும் இடத்திலிருந்தே தமது பங்களிப்புகளை இணையவழி அனுப்பலாம், பல்தேச மக்களது அபிமானத்தையும் பெறலாம்.
BBCயின் தமிழோசை எனும் வனொலிநிகழ்ச்சி, தேச எல்லைகள் கடந்து ஒரே
அலைவரிசையில் தமிழ் உள்ளங்களை இணைக்கும் பணியைப் பல்லாண்டுகளாக ஆற்றிவருவதுபோல், தமிழுணர்வு கொண்ட நல்ல உள்ளங்கள் ஒன்றுபட்டு உழைத்தால், நமக்கென்று ஒரு வனொலி, உலகத்தமிழர்களை ஒரே
அலைவரிசையில் இணக்கும் வனொலியாக உருவாகும் காலம் நிஜமாகும். அக்காலம் விரைவில் மலர நம் எல்லோருக்கும் பொதுவான ஏக இறைவனிடம் வேண்டி
விடைபெறுகிறேன்.
00000000000
[சிலம்பு சங்கம் நடாத்திய 2014 தமிழர் திருநாளில் நிகழ்வுகளில் ஒன்றாக பாரீசு
8 பல்கலைக் கழகத்தில் 18.01.2014 அன்று இடம்பெற்ற ஆய்வரங்கில்
ஆற்றப்பட்ட உரை இந்த உரையின் எழுத்து வடிவம் சென்னையிலிருந்து
வெளிவரும் ‘காக்கைச்சிறகினிலே’ ஏப்பிரல் மாத இதழில் வெளியாகியிருந்தது.]
-
நன்றியுடன்
பதிவேற்றியவர் : முகிலன் - பாரீசு 28.05.2014
பிற்குறிப்பு :
வானொலி அல்லது ரேடியோ (Radio)
வானொலி என்பது ஒரு
குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த
அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத் தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவுப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள்
அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ)
ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால்
காணக்கூடிய ஒளியைக் காட்டிலும்குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி
நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்மிட்டர்கள்
மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது.இப்படி
ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும்
வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள்,
வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி,
அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து
சத்த ஒலிபெருக்கி (Loud Speaker) ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
உலக வானொலி நாள் (World
Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு
வருகிறது. இந்நாளி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு(யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக
வானொலி நாளாக அறிவித்தது. வானொலிஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே
கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை
வானொலி, மற்றும்
சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கூகிள் இணைய வழங்கி
காக்கைச் சிறகினிலே இதழ் ஏப்பிரல் 2014
பிற்சேர்க்கை:
பிற்சேர்க்கை:
1.
2014 பாரீசு தமிழர் திருநாள்
நிகழ்வில் கலந்து சிறப்பித்த பி.எச். அப்துல் ஹமீட் அவரால் உருவாக்கப்பட்ட
அறக்கட்டளைப் பரிசைப் பெறுபவராக புலம்பெயர் தமிழ் அறிவிப்பாளரும் தொகுப்பாளரும் சமூக ஆர்வலருமான
திரு எஸ். கே. ராஜென் அவர்களுக்கு நினைவுப் பரிசுக் கேடையம் வழங்கிக் கௌரவித்தார்.
2.
கலைஞர்களும் படைப்பாளிகளும் அவர்கள் வாழும்
காலத்திலேயே கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற நற்செயலை ஆற்றிவரும் புதிய தமிழர்களாக
இன்று நாம் இருப்பதை பெருமிதத்துடன் பதிவிடலாம். இத்தகைய அரிய செயல்களை முன்னின்று
நடாத்துபவர்களில் புலம் பெயர் தமிழ்ச் சமூக ஈடுபாட்டாளர் திரு எஸ். கே. ராஜென்
அவர்கள் முன் நின்று உழைப்பவர். இலண்டன் மாநகரில் இவரால் 2004 இல் முன்னெடுக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட தமிழர்களின் நெஞ்சம் நிறைந்த அன்பு
அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் அவர்ளைக் கௌரவித்த சிறப்பு நிகழ்வின் காணொலிப் பதிவு இது.
பொருத்தப்பாடு கருதி இதில் மகிழ்வுடன் இணைக்கப்படுகிறது.
000000
இருபதாம் நூற்றாண்டு இருபெரும் உலக
மகாயுத்தங்களையும் மனிதனின் மிகப் பெரிய ‘அழித்தலை’ நிரூபித்த
அணுக்குண்டழிவைக் கண்ட நூற்றாண்டு.
« ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி» எனவாக
பாரதியால் பாடப்பட்ட இரசியப் புரட்சியால் உலகைக் குலுக்கிய மானிடக் ‘காத்தலும்’ இதன் தொடராக பல்வேறு பிராந்திய தேச விடுதலைகளையும் உந்தி உதறிவிட்டு
உலகமயமாதலாகியும் கடந்துவிட்டது.
உருண்டையான புவியை மனிதர்களால்
சுற்றி வலம் வர தரை- கடல்- வான் எனப் பல்வேறு போக்குவரத்து வாய்ப்புகள் பெருக்கெடுத்து
மலர்ந்ததும் இந்த நூற்றாண்டில்தான். மனிதனின் ‘படைத்தலால்’ வெளிப்பட்ட விஞ்ஞானக் கருவிகளும் இயந்திரங்களும் புவியின்
கடைக்கோடி சாதாரண மனிதனும் அனுபவிக்கத் தொடங்கிய காலம். புவியைக் கடந்து சந்திரனில் மனிதன் காலடி பதித்த முக்கியமான
நூற்றாண்டு!
விரிந்த உலகை தனது சிந்தையால் அறிய
முனைந்து திகைத்த ஆதி மனிதனின் கற்பனைகளையெல்லாம் தகர்த்து உலகைச் சுருட்டி
வீட்டுக்குளாக்கி அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிய தொலைத் தொடர்பூடக இணைப்பைத் தொட்ட
நூற்றாண்டு. மனித
மூளையின் விஞ்ஞான பிரதிப்படைப்பாக வெளிப்பட்ட கணினியின் வருகையோடு உலகமயமாதலாகி புவியைப்
புள்ளியாக்கியும் அண்டத்தை ஆராய்ந்து அண்டப் பயணத்திற்கும் உந்தியதாயும் கடந்தும்
விட்டது. இன்று
இதை நினைத்துப் பார்க்கையில் புன்முறுவல் பூக்கிறது.
மனித உயிரியின் தன்னிகரில்லாத « படைத்தல் – காத்தல் – அழித்தல் » எனும் மூவகை ஆற்றலையும் உலகின் கடைக் கோடியில் வாழ்ந்த
சாதாரணர்களும் நேரடியாக உணர வைத்த நூற்றாண்டு இது.
இந்த படைப்பாற்றலால் முதலில்
மக்கள் மயமாகிய விஞ்ஞானக் கருவி ஒலிபரப்பியாக வெளிப்பட்டு ‘வானொலி’ ஆனது. இது
கட்புல உணர்வில்லாது தடைகளற்ற வான் வழியாக பயணித்து மனிதர்களின் செவிப்பறைகளைத்
தொட்டு வருடியவாறு மூளைக்குள் நுழைந்தது. நாளாந்தம்
தொடரப்பட்ட இத்தகைய செயலால் மானிட வாழ்வை புத்தம் புதியதொரு பரிணாமத் தளத்தில்
பயணிக்கும் உந்துதலை அளித்தது.
இவை புதிய
பரிணாமத்திலான வானொலிகளாக இன்றும் மனிதன் மேற்கொள்ளும் பணிகளுக்கு இடைஞ்சல்
செய்யாது பல தருணங்களில் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
0000000000000
Tweet
No comments:
Post a Comment