Thursday, 21 January 2010

செய்திச் சரம் 9 பாரீசில் நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் திரைப் படைப்பாக வெளிவந்த 'மீண்டும்' திரையிடப்படுகிறது


செய்திச் சரம் 9
பாரீசில்
நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் திரைப் படைப்பாக வெளிவந்த 'மீண்டும்' திரையிடப்படுகிறது

பிரான்சில் எதிர் வரும் 31.01.2010 ஞாயிறு மாலை 18.00 மணிக் காட்சியாக ஓபவில்லியே நாற்சந்தித் திரையரங்கில் திரைக்கு வருகிறது நோர்வே என்.ரீ.பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மீண்டும்' திரைப்படம்.

நோர்வே வாழ் புலம் பெயர் மக்களின் கதையாடலுடன் வெளிவந்துள்ள 'மீண்டும்' திரைப்படம் பரவலான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது எனவும் உலகெங்குமுள்ள தமிழர்கள் இவ்வாறான படைப்புகளைப் பார்த்து விமர்சனங்களை முன்வைத்து நம் இளம் படைப்பாளிகளுக்கு உந்துதல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார் நம் மத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தின் தமிழ் திரையுலக வளர்ச்சியில் அயராது ஈடுபட்டுவரும் மூத்த கலைஞன் ரகுநாதன் அவர்கள்.

இவ்வகை முயற்சிகள் தேசம் கடந்த பார்வையாளர்களிடம் செல்ல வேண்டுமென்பதற்காக தனது 75வது அகவைக் காலத்தில், சிறு பையனின் வேகத்துடன் களப்பணியாற்றிவரும் திரு ரகுநாதன் அவர்களைக் காணுற்றபோது நாம் கலைக்காக நிறையவே செய்தாக வேண்டுமென்ற உந்துதல் கிடைத்தது. இவரது முயற்சியாலேயே பாரீசில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.

பொங்கல் திரைப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' பற்றியும் உலகத் திரைப்படங்களில் 'அவதார்' பற்றியும் கதையாடல் நடைபெற்றுவரும் யதார்த்த நிலையில் நம் இளைஞர்களின் திரை முயற்சி பற்றியும் அறியவேண்டியது அவசியமானதுதானே என்றார் என்னுடைய நண்பர்.

திரைப்படம் தொடர்பாக மேலும் அறிவதற்கு: என்.ரீ.பிக்சர்ஸ் http://www.ntpicture.com/

தகவல்: முகிலன்
பாரீசு 20.01.2010

பிற்புறிப்பு:
ஈழத் தமிழ்த் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய N.T.PICTURE இன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்”
இந்தியாவில் திரையுலகம் நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இங்கு சிலர் கூடி ஒரு முழுநீளபபடம் எடுப்பது என்ற முயற்சியும் அதில் வெற்றி பெறுவதென்பதும் இலகுவல்ல. அந்த வகையில் N.T.PICTURE இனரையும் அதில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் வாழ்த்துவதோடு நில்லாமல் பாராட்டியும் ஆகவேண்டும். படம் முடிந்து வெளியே பேசப்பட்ட விடயங்களில் ”மீண்டும்” திரைப்படம் பலர் மனதைக் கவர்ந்ததாகவே சொல்ல வேண்டும். இரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிவைக்கக் கற்றுக்கொண்ட திரைப்படக்கலைஞர்கள் மேலும் இனி ஆக்கபூர்வமான படைப்புகளை வழங்குவர் என்றே நம்பத்தோன்றுகிறது. N.T.PICTURE இன் முந்தய முழுநீளத் திரைப்படத்துடன் (தொப்புள்க் கொடி) ஒப்பிடும் போது ”மீண்டும்” திரைவிருந்தில் இயக்குனர் படப்பிடிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர்களின் சிறப்பான வளர்ச்சி தெரிகிறது.
விமர்சனம்: கவிதா

No comments:

Post a Comment