Saturday, 23 January 2010

சரம் 21 பன்னாடைகள்

சரம் - 21
பன்னாடைகள்

பாரீசில் வியாபார நிறுவனமொன்றில் பணியாற்றும் வார நாளொன்றின் மாலை நேரம், இம்முறை ஏற்பட்ட குளிராலும், பரவலாக சர்வதேச மக்களால் முகம்கொள்ளப்படும் நுகர்வுக் கலாச்சார முடக்கத்தாலும் மந்தமாகக் கழிகிறது.

என்னுடன் பணியாற்றுபவர் முப்பதைத் தொடும் துடிதுடிப்பான இளம் குடும்பத்தவர். பிரான்சுக்கு தன் பன்னிரெண்டாவது வயதில் வந்தவர். வேலைப்பழு தெரியால் இருப்பதற்காக அவ்வப்போது பல்வேறு விடையங்களை கதைத்துக்கொண்டே பணியாற்றுவதென்பது எங்களுக்குக் கைவந்திருந்தது.

தமிழில் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும், அடுத்த தலைமுறையினரின் சிந்தனைகள் தொடர்பாக எனக்கிருக்கும் ஆவலும் இத்தகைய கதையாடல்களில் அதிக நாட்டம் கொள்ள வைத்தன.


எமது கடைக்கு இவரது சித்தப்பா மகன் பிரபு அடிக்கடி வருவது வழக்கம். இந்த பதிம வயதினனை எனக்கு நன்றாகவே பிடிக்கும். இவன் பிரான்சு வந்து சுமார் நான்கு ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனாலும் கணினி பற்றிய தொழில்நுட்பத்தை விரல் நுனியில் பெற்றுவிட்டிருக்கிறான். போடோ சொப் இவனுக்கு கைவந்த கலை. இங்கு வந்தபின்தான் கணினியைப்பற்றி அறிந்திருந்தும், கணினியை பிரித்து மேய்ந்து மீளப்பொருத்தும் ஆற்றல் இயல்பாகவே வந்திருக்கிறது. இவரது குடும்பத்தில் இவனொருவன்தான் பிள்ளை. ஆதலால் பெரியப்பா குடும்பச் சகோதரங்களுடன் அடிக்கடி சந்திக்கும் ஆவல் இயல்பாகவே இவனுக்கிருந்தது.

வழக்கத்தில் உற்சாகமாகக் காணப்படும் பிரபு இன்று ஏதோ யோசித்தவாறு நின்று கொண்டிருந்தது எனக்கே ஒருமாதிரியாக இருந்தது. இவர்களை அவ்வப்போது நோட்டமிட்டவாறு வாடிக்கையாளர் தேவைகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.


"என்னடா! யோசிக்கிறாய்? ஏதாவது வேண்டுமா?......" பொறுக்க முடியாதவனாகி வார்த்தைகள் அண்ணனின் வாயிலிருந்து விழுகின்றன.


என்னை ஒருமுறை பார்த்துவிட்டு பிரபு பேசாமலேயே இருக்கிறான்.

இதைக் கவனித்த அண்ணன், "பரவாயில்லை, பிரபு எதெண்டாலும் சொல்லு!...."
"இல்லை...! அண்ணா!! நாங்களும் பெரியாக்களாக வந்ததும் சண்டைபோட்டு கதைக்காமல் இருப்பமா?"

துறுக்கென்றிருந்தது எனக்கு. முகத்தை மறுபக்கம் திருப்பியவாறு வேறொரு வேலையில் ஈடுபட முனைகிறேன்.


"ஏனடா இப்படியெல்லாம் யோசிக்கிறாய்? நாங்கள் ஒருபோதும் அப்படியெல்லாம் இருக்கவே மாட்டம்!" தமையன் ஆறுதல்படுத்தியவாறு எழும்புகிறார்.

தமையனின் கண்கள் என் பிரடியை நோக்குவது பிரடிக்கே தெரிகிறது.


ஊர்விட்டு, தேசம் மாறி, கண்டம் விட்ட தொலைவில் சிதறிக்கிடக்கும் மூத்த தலைமுறையினராகிய நாம் ஆறுதலாகச் சந்திக்கும் உறவுகளும் நட்புகளும் தொடர்பான நிகழ்வுகள் எம் முகம் பார்த்து வளரும் தலைமுறையினரின் வெண் மனத்திரையில் அழுக்குகளைப் பீச்சிவிடத் தவறுவதேயில்லை.


குறிப்பு:

பன்னாடை - கள்ளு வடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பனை அல்லது தென்னையில் எடுக்கப்படும் இயற்கை வடி. நல்லதை விட்டுவிட்டு அழுக்குகளைச் சுமப்பது இதன் சிறப்பு.

- முகிலன்
பாரீசு (20.01.2010)

No comments:

Post a Comment