Friday, 20 June 2014

தோடுடைய செவியர்

குஞ்சரம் 22

தோடுடைய செவியர் (யன் - யாள் அல்லாது பொதுப்பால்)

அண்மையில் அமெரிக்க நாடுகளில் குடியேறி வாழத்தலைப்பட்ட உறவினர்கள் எங்களது இல்லத்தில் வந்திருந்து சென்றார்கள். இதன் பின்னரான குடும்ப  உரையாடல் ஒன்று என்னை அதிகம் ஈர்த்ததாக அமைந்திருந்தது.
"தோடு அது இதுவென்றும்.... தலை முடியை தாறுமாறாக வெட்டிக் கொண்டு மையடித்துக் கொண்டும் என்னுடைய பிள்ளைகள் இருக்கவே கூடாது! தொலைச்சுப் போடுவன்!!..." வீட்டு அம்மணியின் குரலில் அதிகாரம் அதிக காரமாகவே அன்றிருந்தது.
இப்படியான தொனியில்  பந்தாகப் பறக்கும் வார்த்தைகள் எனக்கானதாக இருப்பதே வழக்கம். ஆகையால் எனது செவி கூர்மையாகியது. நானும் அவதானமாகினேன்.
"ஏன்..... அம்மா இப்படிக்  கத்துறீங்கக..... இப்ப என்ன  நடந்து போச்சு...."  பெரியவன் ஆச்சரியத்தோடு!
"நான் எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறன்... சரியோ..." தாயாரின் சூடு சொற்களில் தகித்தன.
"என்ன அம்மா..... இப்ப என்ன நடந்து போச்சுது.... நாம நல்லாத்தானே இருக்கிறோம்!" குரலில் இறைஞ்சலிருந்தது.
"நீயும் உன்னுடைய நட்புகளும்.... நான் இப்ப உன்னுடைய முகநூலில் சில படங்களைப் பார்த்தனான். தலை மயிரை கன்னா பின்னாவென்று வெட்டுவது..... காதில தோடு போட்டுக் கொண்டு திரிவது இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது!" கண்டிப்பு உச்சத்தானியிலிருந்தது.
"அவங்கள் போடுவதற்கு நான் என்ன செய்ய?..... சும்மா என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..."
"யார் அவங்கள்?... இப்படியான தமிழாக்களோடு சேரவேண்டாமென்றுதானே சொன்னனான்.."
"புட்போல் விளையாட வந்தவங்கள்.... அதுக்கென்ன இப்ப...."
"அதுதான்.... எப்படி நீங்கள் விளையாடுற கிறவுண்டுக்குகெல்லாம் அவங்கள் வந்தவங்கள்?"
"நான்தான் கூப்பிட்டனான்...... அவங்க நல்லா விளையாடுவாங்களம்மா... அதுக்கென்ன இப்ப! அப்பாவிடம் கேளுங்கோ..."
"அந்தாளை ஏன் கூப்பிட வேண்டும்? 50 வயதிலும் வெட்கமில்லாமல் குடும்பி வைத்துக் கொண்டு திரிஞ்ச ஆள்தானே.... இதனால்தானே எனக்கு பயமாக்கிடக்குது!!"
திடுக்கிட்டுப் போனவனானேன்.
"அதுவொன்றுமில்லை கனடாவில இருந்து வந்த அம்மாவுடைய சொந்தக்காரப் பொடியனும் அவர்களுடன் வந்திருந்த பொடியனும்... காதில தோடு போட்டிருந்தவங்கள் தானே.... அதனாலே அம்மாவுக்கு பயம் வந்திட்டுது...!" என தாயாரைக் கட்டிப்பிடித்வாறு கூறினான் எங்களது இளசு. தனது அறைக்குள் பல்கலைப் புகுமுக வகுப்புத் தேர்வுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த எங்களது இளைய மகன் 'இந்த உரையாடல் வெளியில்' நுழைந்தது ஆச்சரியமாக இருந்தது.
தயார் ஆடித்தான் போய் விட்டிருந்தார். என்னையும் அறியாது புன்முறுவல் வெளிப்படுகிறது.
"எனக்கென்று என்ன இருக்கு.... எல்லாற்றையும் இழந்து போட்டேன்...." தாயார் அழாக்குறையாக ஆனால் இப்பொது குரலில் நெகிழ்வு இருந்தது.
"என்னமா... இழந்து போட்டீங்கள்.... நாங்கள் இரண்டு நல்ல பிள்ளைகள் இருக்கிறம்தானே....!" இளசு அன்பால் அள்ளி எறிந்த குறி தப்பவே இல்லை. தாயாருக்கு அடக்க முடியாதவாறு சிரிப்பு வெளிப்பட அது எல்லோரையும் தொற்றிக் கொண்டது.

00000 00000 00000

தண்ணீரில் ஒரே ஒரு சிறு கல் விழுந்தாலும் எத்தனையோ அதிர்வலைகளை உந்தித் தள்ளிவிட்டுத்தான் அமுங்கிப் போகும். இதனை போன்றதுதானே நம் மனக் கிணறும்!

செவி - தோடு - கடுக்கண்

1.
மனித உயிரிகளுக்கு எத்தனையோ விசித்திர ஆசைகள். ஆதிகாலத்திலிருந்து இன்று வரை மாற்றம்தான் மாறாதது என்பதான தொடர் அசைவுகளுடனான வாழ்வை நிலைநாட்டிவாறே பயணிக்கும் தனித்துவமானதொரு உயிரி.
ஆனாலும் ஈழத்தில் பிறந்திருந்த நம் தலைமுறையினருக்கு நினைவுத் திரையில் ஆடும் பிம்பங்கள் ஆழ்மனப் பதிவுகளில் உறைந்துதான் கிடக்கின்றன. இலங்கையின் மத்திய மலைநாட்டு நகரான பதுளையில் வாழ்ந்த எமது குடும்பம் 1958 இனக்கலவரத்தின் பின்னர்  அம்மாவின் ஊரான கரம்பனில் குடியேறிவிட்டது. அப்போது எனக்கு வெறும் இரண்டு வயதுதான். எனக்கு ஏதுமே ஞாபகத்தில் இல்லை. ஆனால் இது தொடர்பாக அம்மாவும் அப்பாவும்  பிற்காலத்தில் சொன்ன கதைகள் அனைத்தும் இன்றும் எனது மனக்கிடங்கில் இருக்கின்றன.
1958 கலவர காலத்தில் தமிழர்களை இனங்காண  தலையை  மணந்து பார்த்ததையும் - காதில் ஓட்டையைப் பார்த்ததையும் - பேச்சு வழக்கில் 'வாளி' எனச் சொல்லச் சொல்லி தமிழர்களா? அல்லது சிங்களவர்களா? என உச்சரிப்பைக் கொண்டு இனங்கண்டு அடித்து நொருக்கிய சம்பவங்களை கதைகதைகளாகக் கேட்டு வளர்ந்தவர்களல்லவா நாங்கள்.
இத்தகைய அவலத்தின் நீட்சியில் 'தமிழர்களில் ஆண்கள் தோடு போடுவதற்காக காதில் ஓட்டையிடுவதை முற்றிலுமாகத்  தவிர்க்க தொடங்கியிருந்தார்கள். இத்தோடு  தலையில் நல்லெண்ணை பூசுவதையும்  குறைக்கத் தொடங்கியிருந்தார்கள்.' ஆனால் எங்களது அப்பாக்களதும் அப்புகளதும் காதுகள் துளையிட்டனவாகத்தான் இருந்தன. அப்புகள் (தாத்தாமார்) குடும்பியுடன்தான் சாகும் வரையில் வாழ்ந்திருந்தார்கள்.
தாய்மாமன் முன்னிலையில் மருமகனுக்கு காதுகுத்தும் நிகழ்வுச் சடங்கு முற்காலத்தில் கோலாகலமாக நிகழ்ந்தவொன்று. ஈழத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது 'சிங்கள பேரினவாத' ஒடுக்கல்தானே!
90களின் ஆரம்பத்தில் புதிய தம்பதியினராக தெகிவளையிலுள்ள நண்பனது வீட்டுக்கு விருந்துண்ணச் சென்றுவிட்டு முன்னிருட்டில் திரும்ப விழைகையில் நண்பன் சொன்னான் "மச்சான் உன்னர மனுசியின்ர குங்குமப் பொட்டை அழித்துவிட்டு போடா.... இங்கு வெறியர்களைச் சமாளிக்க முடியாது... தெரியுந்தானே!" என்றான். இந்த வார்த்தைகள் வந்து விழுந்த எனது செவியினால் பெற்ற சிலிர்ப்பு இன்றும் பசுமையாக இருக்கிறது. புதுமணத் தம்பதியனருக்கு குங்குமப் பொட்டிட்டு வாழ்த்தும் பாரம்பரியம் பரிதாபகரமாக அழிப்பதாக அமைந்துபோனது பண்பாட்டு அழிப்பு வன்மம்தானே.
00000 0000000
அண்மையில் பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத் தேர்தல் காலத்தில் அதற்காக நடந்த குழுநிலைச் சந்திப்புகளில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதில் கலந்து கொண்டிருந்த 'மேயர்' என அழைக்கப்படும் நகரசபைத் தலைமை வேட்பாளர்கள் சொன்ன தகவல்கள் என்னைக் கவர்ந்தது. பாரீசு 10 வட்டாரத்தில் சுமார் 110 இனக்குழுமங்கள் வாழ்கின்றன. இங்குதான் தமிழர்கள் அதிகமாக ஒன்றுகூடும் சந்திப்பு மையமாக விளங்கும் லாச்சப்பல் இருக்கிறது. இதே மாதிரியே பாரீசு  18வது வட்டாரத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட பல்லினச் சமுதாயக் குழுக்கள் வாழ்கின்றன. சென் டெனி நகர சபைக்கான வட்டாரத்தில் 126 பல்லினச் சமுதாயக் குழுமங்கள் வாழ்கின்றன.
'மனித உரிமைக் கோட்பாட்டை' வழங்கிய வெள்ளயைர் தேசங்களில் எப்பேர்ப்பட்ட சகிப்புத் தன்மையுடைய மனிதர்கள் வாழ்கிறார்கள்? இவர்களுடன் நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். "யாதும் ஊரே! யாவரும் கேளிர்...." எனவாக சங்க காலத்திலேயே பறைசாற்றிய ஈழத்துக் கவிஞன் கணியன் பூங்குன்றனார் எங்களைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன. (புறம்: 129)
2.
அதிகப் பிரசங்கித்தனம் எனவாக பலதை நாம் கேட்டிருக்கிறோம். மூன்று வயதுக் குழந்தை வாயில் பால் வழிய நிற்கிறது...... 'யாராவது இடைச்சி பால் கொடுத்துவிட்டாளோ' எனப் பதைபதைத்தவராகிய தந்தை கோபத்தோடு வினவுகிறார் "என்னடா நடந்தது?"
மூன்று வயதுக் குழந்தையை குளக் கரையில் வைத்துவிட்டு தகப்பன் குளத்துக்குள் இறங்குகிறான். "ஆரோக்கியமான குழந்தை என்ன செய்திருக்கும்?"
" அதுவும் குளத்துக்குள் இறங்கியிருக்கும்" இப்பதிலை இங்குள்ள யாருமே உறுதியாகச் சொல்வார்கள்.
ஆனால் அக்குழந்தை அப்படிச் செய்யவேயில்லை. அச்சாப் பிள்ளையாட்டம் அப்படியே உட்கார்ந்திருந்து. அழுதது.....
'ஐயோ! பாவமென' யாரோ இரங்கிப் பால் கொடுத்துவிட்டு அப்படியே குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்! ஆகா....... கா.... கா.... தற்போதைய தமிழ்ச் சினிமாக்கள் மாதிரியானதொரு சிற்றுவேசன் .... தானே இது!
இந்தக் குழந்தை பின்னர் பாடுகிறது "தோடு உடைய செவியன்.... விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி.... காடு உடைய சுடலை பொடி பூசி ...." இதன்மேலும் என்னால் தட்டச்சிடக்கூட முடியவில்லை. ஆனால் குழந்தை தொடர்கிறது!
"இப்படியொரு சம்பவம் சாத்தியம்தானா?" எனக் கேட்க்கூடாது. ஏனென்றால் மத நம்பிக்கையாளர்களது மென்மையான ஆனால் 'திடமான மனது' பாதிப்படைந்துவிடும். நாமும் கேட்காமலேயே கடப்போம்.
Ø  "தோடு உடைய செவியன்.... " அடடா நம் பெருவிருப்புக்குரிய "பெருமானே" காதில் தோடோடு இருக்கையில் நாமும் பின்பற்றித் தொடர வேண்டாமா?
Ø  நாம் வாழும் 20ம் - 21ம் நூற்றாண்டுகளில் நம் தமிழ்ச் சினிமாக் கதாநாயர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் (கோமாளித்தனங்களையும்) பின்பற்றுபவர்களாக வாழ்பவர்களைக் கண்குளிரப் பார்க்கிறோம். அப்படியானால் 12 நூற்றாண்டுகளுக்கு முந்திய அந்தக் காலத்தில் "இந்த கடவுளர்களது தோற்றத்தை" கண்டவர்கள் தமது பக்தி பிரவாகத்தால் அதனைப் பிரதிபலிப்பவர்களாகத்தானே இருந்திருப்பார்கள். ஆக இதுதான் எனது கேள்வி. "திருஞானசம்பந்தர் 'தோடு உடைய செவியராக' இருந்தாரா? இல்லையா?"
Ø  மொழிகளுக்கெல்லாம் இன்னும் ஏன்... மனிதர்களுக்கெல்லாம் முந்தையது தமது மதங்கள் எனவாக நம்புபவர்கள் 'நெற்றியில் சுடலைப் பொடியை' அவ்வப்போது பூசும் வழக்கத்தைக் கொண்டிருந்தும் விடாப்பிடியாக காதில் போடும் கடுக்கண்ணை (தோடை) நிராகரிப்பது ஏன்?
Ø  அவர் 'தோடு' என்று பாடியிருக்க இப்போது ஆண்கள் போட்டால் 'கடுக்கண்' பெண்கள் போட்டால் 'தோடு' எனவாகச் சுட்டப்படுகிறதே இது ஏன்?
3.
இன்றைய உலகமயமாக்கல் நுகர்வுக் கலாச்சாரம். மெத்தப் படித்தவர்களைக் கொண்டு அவர்களுக்கு வசீகரமான அறைகள் ஒதுக்கி யோசிக்க வைத்து திட்டமிடுகிறது. 'நுகர்வு' மேய்ச்சலை கண்ணை மூடிவாறு மேற்கொள்ள மனித உயிரிகளைத் தூண்டும் திட்டங்களைப் பொழிகிறது. இவர்களால் 'எதையெல்லாம் விற்கலாம்? எப்படியாக விற்கலாம்?' எனவாக திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. இதனை அங்கிங்கினாதபடி  உலகெங்கணுமாக விரிந்த தொடர்பாடல் வலையம் திரும்பத்திரும்பப் பிரதிபலிக்க முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிறகென்ன இதுதான் 'அழகு' எனும் பாஃசன்! பொதுப்புத்தியைப் பயன்படுத்தும் சிந்தனை குறைவாகிப் பின்பற்றும் அல்லது பின்தொடரும் கலாச்சாரம் நீண்டு செல்கிறது. உலக மக்கள் தொகையில் அனைவரும் நுகர என்ன செய்லாம்? என்பதை இவர்கள் இரவு பகலாகத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
பெண்களே அதிகம் தோடு போடாததை இங்கு புலம்பெயர் நாடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஆண்களும் போடுவதால் நுகர்வின் வீச்சு இரட்டிப்பாகி விட்டுள்ளதுதானே
நம் பழமொழி « சந்தனம் மெத்தினால் தடவடா…. » என உறைக்கச் சொல்கிறதுதானே !
00000 0000000

பின்னிணைப்பு:
1.
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. (தேவாரம் திருஞானசம்பந்தர்)
தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
நன்றி : விக்கிபீடியா http://ta.wikipedia.org/s/jm3
திருமுறையின் தொடக்கப் பாடல் “ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் திருஞான சம்பந்தர் தேவாரம் ஆகும். இப்ப¡டல் எழுந்த சூழ்நிலையைப் பார்ப்போம். சீகாழிய¢ல் தந்தையாருடன் நீராடச்சென்ற ஞானசம்பந்தக் குழந்தை தன் தந்தை நீராடும்போது அவரைக் காணாது கலங்கிக் கோயிலைப் பார்த்து”அம்மே அப்பா” என்று அழுதது, இதனைக் கேட்ட சிவபருமான் உமை அம்மையோடு அங்கு எழுந்தருளி உமை அம்மயைப் பார்த்து “துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன் கிண்ணத்து ஊட்டு” எனப் பணித்தருளினார். அதற்கேற்ப உமை அம்மை“ எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி “உண் அடிசில்” எனச் சம்பந்தர்க்கு ஊட்டினார். அந்நிலையில் சம்பந்தர் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலியன உணர்ந்து ஞான சம்பந்தர் ஆனார். நீராடிவிட்டுக் கரயேறிய ஞானசம்பந்தரின் தந்தையார்’ யார் அளித்த பாலடிசில் உண்டது நீ” என அரட்டிக் கேட்க அதற்குப் பதில் கூறும் வகையில் எழுந்ததுதான்“ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் பாடல். எனவே திருமுறையின் தொடக்கத்திற்கே உமை அம்மையார்தான் காரணம் என்பதனை இதன் வழி உணரலாம்.
பாடல் - தோடுடைய செவியன் (நன்றி : யூரியூப்) - திரைப்படம்: ஞானக் குழந்தை
2.
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும்.
2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழின் இலக்கணம் போன்ற அடிப்படைகளில் ஒன்று பண். தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது
நன்றி: விக்கிபீடியா http://ta.wikipedia.org/s/vpa
- முகிலன்

பாரீசு 20.06.2014

No comments:

Post a Comment