Wednesday, 18 June 2014

"மண்டூகம்!"

செவிவழிக்தை 22
கதைச்சரம் 25

"மண்டூகம்!"
 
பன்னெடும் காலமாக அந்தக் கிணற்றுக்குள் சில தவளைகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. இவற்றினுள் ஒரு தவளை பென்னாம் பெரியது. அது அதிகம் தண்ணீரில் நீந்துவது கிடையாது. அது எப்போதும் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலான பெரும் பாறை பொந்தில்தான்  இருக்கும். அது என்னதான் செய்கிறதென யாருக்கும் தெரியாது. ஏதாயினும் அரவம் கேட்டால் கத்தி உசார்ப்படுத்திவிடும். அதன் உருவத்தாலும் இருக்கையாலும் மற்றைய தவளைகளுக்கு இராசா போல் வாழ்ந்தது.
புதிதாக உருவான குட்டித் தவளைகளுக்கு கொஞ்சம் கும்மாளமிடலும் துள்ளலும் அதிகமாகத்தானே இருக்கும். இதனால் இவற்றின் பெற்றோர் அந்த இராசா தவளையைக்  காட்டி பயமுறுத்தி வழக்கத்திற்குக் கொண்டுவரும் வழக்கமும் அங்கிருந்தது. இதனால் பெருந்தவளையின் கிட்டே பலரும் போவது கிடையாது. ஆனால் இந்த பெரும் தவளை ரொம்பவும் சாதுவானது. இலகுவில் கோவிக்காது. அவ்வப்போது தவளைக் கூட்டத்தினருக்கு ஏதாயினும் தேவைகள் வந்தால் பெருந் தவளையிடம்தான் முறையிடுவார்கள்.
ஒருநாள் அந்தக் கிணற்றுக்கு அருகாமையில் அதிர்வுச் சத்தங்கள் கேட்டன. தவளைக் கூட்டம் பயந்து விட்டது. பெருந்தவளை "எல்லோரும் கவனமாக மறைந்து இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டது.
அடுத்த நாள் கிணற்றுக்குள் ஒரு அண்டா போன்ற பாத்திரம் கயிறு வாயிலாக இறங்க தவளைகள் எல்லாம் ஓடிப் பதுங்கிக் கொண்டன. வந்த பாத்திரமும் தண்ணீரை அள்ளிக் கொண்டு மேலே சென்று விட்டது. இப்படியாக பகல் வேளைகளில் பலமுறை இப்பாத்திரம் வருவதும் போவதுமாக இருந்தது. நிம்மதியாக வாழ்ந்த தவளைக் கூட்டத்திற்கு பகலில் பொழுது போவதென்பது கொஞ்சம் சிரமமாகிவிட்டது. கொஞ்சக் காலம் செல்ல இதுவும் பழகிப்போனது. பழையபடி இளவட்டங்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கியும் விட்டன.
சில சமயங்களில் ஒரு சில தவளைகள் காணாமல் போவதும் நிகழ்த்தொடங்கியது. பெருந்தவளை மீண்டும் மீண்டும் எச்சரித்தது. மேலே செல்லும் அண்டாவுக்குள் அகப்பட்ட தவளைகள்தான் காணாமல் போவதாக பெருந்தவளை எடுத்து சொன்னது.
இந்தத் தவளைக் கூட்டத்தினுள் ஒரு சுட்டான் தவளைக் குடடியும் இருந்தது. இதற்கு மேலே என்னதான் நடக்கிறதென அறிய ஆவல். தனது விருப்பத்தை தாய்த் தவளையிடம் கூற அம்மாத் தவளை கதறியது. ஆனாலும் சுட்டான் அடம்பிடித்தது.
பிறகென்ன பிரச்சனை பெருந் தவளையிடம் எடுத்துச் செல்லப்பட்டது. எல்லாவற்றையும் கேட்ட பெருந்தவளை "அங்கு வெளியில் பெரிதாக ஏதுமே இருக்காது!" என்று மென்மையாகச் சொன்னது. ஆனாலும் சுட்டான் விடுவதாக இல்லை.
"சரி! சரி!! அழாதே.... எனக்குத் தெரியாத ஒன்றும் வெளியில் இல்லை. என் அறிவுக்கு எட்டியவரையில் எமக்கு வேண்டியனவெல்லாம் இந்தக் கிணற்றுக்குள் கிடைக்கின்றன. வெளியில் போனால் அதிக ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இங்கிருந்து போன யாருமே திரும்பவில்லை என்பதை மறக்கக்கூடாது!" எனக் கண்டிப்புடன் கூறியது.
என்ன சொன்னாலும் சுட்டியன் ஏற்பதாக இல்லை. கடைசியில் ஒருநாளுக்கு மட்டும் சுட்டியன் கவனமாகச் சென்று திரும்புதென்று முடிவெடுக்கப்பட்டது. அந்த நாள் அதிக வெயில் இல்லாத நாளாகவும் அந்த நாளில் பெருந்தவளை அடிக்கடி குரலெழுப்பிய வண்ணம் இருப்பதென்றும் முடிவாயிற்று. இது கிணற்றடையாளத்தை தவளைக் குட்டிக்கு தெரியப்படுத்திக் கொண்டு இலகுவில் திரும்ப வழிகாட்டும்.
அந்த நாளும் வந்தது. தவளைகள் கவலையுடன் அந்தச் சுட்டானை அண்டாவூடாக வழியனுப்பின. வெளியில் வந்த சுட்டான் முதல் தடவையாக 'இரு கால்களுடன்  மட்டும் பரபரப்பாக நடமாடும் கூட்டத்தைக் கண்டு' நடுங்கியே விட்டது. விரைவாகப் பாய்ந்து வாழை மர அடியில் பதுங்கிக் கொண்டது. கொஞ்ச நேரம் போனதும் தன்னை யாரும் சட்டை செய்யாததை உறுதிப்படுத்தியவாறு வெளியே எட்டிப் பார்த்தது. 'அப்பப்பா..... ஆகா!... எந்தப் பெரிய வெளி. எத்தனை வகையான மரங்கள்.' என தனது கனவு நிறைவேறும் திருப்தியில் திளைத்தது. கொஞ்சம் தூரம் செல்ல 'வௌவ்.... வௌவ்' என்ற ஒலி கேட்க தொடை நடுங்கிவிட்டது. அப்படியே ஒரு பத்தைக்குள் பதுங்கியிருந்தவாறு எட்டிப் பார்த்தது. 'இதென்ன நான்கு காலும் சுருள் வாலுமாக ஓர் உருவம்?' மனதில் பெருந்தவளை சொன்ன கூற்றுகளின் மெய்மை தட்டுபடவே செய்தாலும் அதனது ஆசை அதைச் சும்மாயிருக்க விடவேயில்லை.
நிதானித்துப் பார்க்கையில்  அந்நச் சுருள் வாலையுடைய உருவம் தன்னைக் கவனியாதது அதற்குத் திருப்தியளிக்க மெதுவாக வேறோர் இடத்திற்குத் தாவியது. உயர்ந்து பெரிதாகக்  கிளை பரப்பி நிற்கும் பல தரப்பட்ட மரங்களையும் பார்த்து அதிசயத்தது. ஆனால் அசைந்து கொண்டிருக்கும் உயிரிகளைத்தான்  பயத்துடன் பார்த்து கவனமாக நடந்து கொண்டது. அவ்வப்போது மெருந்தவளையின் குரல் கேட்கிறதா எனவும் அது எங்கிருந்து வருகிறதென்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டது.
தனது விருப்பப்டியாக நடக்கும் அந்தப் பொழுதை மிகவும் மகிழ்வுடன் கழித்தது. இப்படியான மகிழ்ச்சியை அது ஒருபோதும் அந்தக் கிணற்றுக்குள் அனுபவித்திருந்ததே கிடையாது. தான் சுயமாக நினைத்தைச் செய்யும் அனுபவத்தை எப்படி மற்றவர்களுக்கு சொல்லப்போவதையும் அடிக்கடி யோசித்து வைத்துக் கொண்டது.
இப்படியாகக் கழிந்த பொழுது வேகமாகவே கடந்தது போலிருந்தது. மிகவும் மகிழ்வுடன்  சுற்றிய சுட்டானுக்கு 'ம்......மா.....!' என்னும் நீண்ட பேரோசை இடியெனக் கேட்டதில் அரண்டுதான் போய்விட்டது. அந்தச் சத்தம் வந்த திசையில் பாய்ந்து சென்றது. நிமிர்ந்து பார்த்த போது பென்னாம் பெரிய ஒரு உருவம் பெரிய வாலை இடமும் வலமுமாக விசிக்கியதால் எழுந்த அதிர்வில் நடுங்கிவிட்டது.. அந்த உருவம் வாயை அசைத்துக் கொண்டிருந்ததை காணுற்றபோது திகைத்தேவிட்டது. இப்படியானதொரு உருவத்தை அது இதுவரையில் தன் கனவில்கூடக் கண்டிருக்கவில்லை. பயத்தில் அதன் தொடைகள் நடுங்கத் தொடங்கி விட்டன.
சொல்லி வைத்தது போல் அவ்வுருவம் தலையை மேலே தூக்கியவாறு மீண்டுமொரு முறை 'ம்.....மா...!' என்றதுதான் தெரியும் சுட்டானுக்கு கண்மண் தெரியவில்லை. அப்படியொரு  ஓட்டம் மன்னிக்க பாய்ச்சல்.... இப்படியான பாய்ச்சலை இதுநாள் வரை இது செய்ததே கிடையாது.
இனியென்ன பார்க்க கிடக்கிறதென்ற அந்தரத்தில் மூச்சிரைக்க எப்படியோ கிணற்றடிக்கு வந்தடைந்துவிட்டது. கொஞ்ச நேரம் பேசாது பதுங்கியிருந்தது. வழமையாக வெளிப்பட்ட பெருந்தவளையின் குரலொலி இம்முறை தேனாக இனித்தது போல் மிகவும் இதமாக இருந்தது. அப்பாடா...! என தன்னைத் தயார் செய்தவாறு ஒரே குதியலாக கிணற்றுக்குள் பாய்ந்தது.
சுட்டியன் திரும்பி வந்ததை கண்ட தவளைகளும் மகிழ்வோடு குரலெழுப்பி மகிழ்ந்தன. பெருந்தவளை நமட்டுச் சிரிப்புடன் இனித்தான் தூங்கலாம் என மகிழ்ந்தது.
முதல் முறையாக மேலே இருந்துவிழுந்ததால் சுட்டியன் திணறித்தான் போனது. இதுவும்  இன்னொரு அனுபவமாகிப் போனது. வயிற்றில் நல்ல வலி. இதனால் இலகுவில் அதனால் பேச முடியவில்லை. அது பேச முடியாதிருப்பதற்கு  கடைசியாக க் கண்ட பென்னாம்பெரிய உருவம்தான் காரணமென்பதை மற்றத் தவளைகளால் உணர முடியவில்லை. "சரி! நாளைக்கு எல்லாவற்றயும் பார்க்கலாமெனக் கூறிவிட்டு தங்களது மறைவிடத்தில் ஒதுங்கிக் கொண்டன.
அடுத்த நாளும் சுட்டியனுக்குப் பேச்சு வரவில்லை. "இது என்னடா.... புதுமையாக இருக்கு? சுட்டியன் முடங்கிக் கிடக்கிறான். பேசாமல் கிடக்கிறான்?" என அவை சுட்டியனைச் சுற்றிச்சுற்றி வந்து நோட்டமிட்டன. உற்றுக் கவனித்ததில் சுட்டியனுக்கு காயம் ஏதுமே ஏற்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி ஆசுவாசப்பட்டுக் கொண்டன.
ஒரு வாரம் கழித்துதான் சுட்டியனுக்குப் பேச்சு வந்தது. ஆனால் பழைய துடிதாட்டம் இப்ப இல்லாது போய்விட்டிருந்தது. அதுவும் தட்டுத் தடுமாறி ஒருவழியாக தான் கண்ட பென்னாம் பெரிய உருவத்தை வர்ணித்தது. ஆனால் அங்கிருந்த எந்தத் தவளையாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வெளியில் போய் வந்ததனால் அதற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகவே பலதும் நினைத்தன. பிறகென்ன பிரச்சனை பெருந்தவளையின் கவனத்திற்குப் போயிற்று.
வழமைக்கு மாறாக பெருந்தவளை சுட்டியனைக் கவனித்த வண்ணமிருந்தது. சுட்டியன் முன்னர் மாதிரி தன்னை மதிப்புடன் பார்க்காததை அது கவனித்துவிட்டது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்தது.

"தம்பி! என்னடா நடந்தது?"
"நான் பென்னாம்பெரிய உயிரியைக் கண்டனான்..... இதைச் சொன்னால் யாரும் நம்புவதாயில்லை!" என நடுங்கியவாறு தெரிவித்தது.
"அப்படியென்ன பெரிய உருவத்தைக் கண்டுவிட்டாய்?" ஆகா!! அக்கா..க்கா!! என ஏளனச் சிரிப்புடன் கேட்டது பெருந்தவளை.
"ஆம் ஐயா!! நான் பென்னாம் பெரியதான உயிரைக் கண்டு திகைத்துப் போய்விட்டேன்!" என்றது சுட்டியன்.
"என்னது என்னையும் விடப் பெரியதாக எதைத்தான் நீ பார்த்திருப்பாய்?"..... ம்... என்று கோபமாக் கேட்டது பெருந்தவளை.
" நீங்கள்.... எந்தளவு?......அது எந்தளவு!" என முணுமுணுத்தவாறு சுட்டியன்.... "ஐயா அது பென்னாம் பெரியது! அதன் கால்... அதன் வால்.... அதன் முகம்.... ஐயையோ எல்லாமே பெரியது" எனக் கதறியேவிட்டது.
"கொஞ்சம் பொறு!" என்ற பெருந்தவளை தண்ணீருக்குள் பாய்ந்து நீரைக் குடித்துப் தன்னைப் பெரிப்பித்தபடி "இப்ப சொல்லு... இந்த அளவு இருக்குமா அந்த உயிரி?" என்றது.
பெருந்தவளையின் முழுமையான பருமையைக் கண்ட ஏனைய தவளைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆனால் சுட்டியன் அசரவேயில்லை.
"அட... போங்கையா.... உங்களது அளவென்ன..... அதன் அளவென்ன.... அது பென்னாம் பெரிது! அதன் உயரம் இங்கிருந்து அங்கு வருமெனக" கூறிக் கொண்டு மேல் கற்துண்டுக்குப் பாய்ந்து காட்டியது.
சும்மா சொல்லக் கூடாது..... இப்போது பெருந்தவளைக்கு கோபமோ கோபம் ... பொத்திக்கொண்டு வந்துவிட்டிருந்தது.
'அட பொடிப் பயலே இப்ப என்னைப் பார்... " எனக் கூறிக் கொண்டு இன்னும் நிறையவே தண்ணிரைக் குடித்துக் கொண்டு பருத்த தன் உடலைக் காட்டியது!
ஆனால் சுட்டியன் அசரவேயில்லை.
பெருந்தவளையும் விடாமல் மீண்டும்.... நீரைக் குடித்துப் பருமனைக் கூட்டியது. சுட்டியனோ பெருந்தவளையின் அளவை ஒப்புக் கொள்ளவேயில்லை. இப்படியாகத் தொடர்கையில்
"டமால்......" ஐயோ.... பரிதாபகரமாக பெருந்தவளை வெடித்து சிதறியிருந்தது. தவளைக் கூட்டனத்தினர் வாயடைத்தவர்களாகிப் போயின.

இக்கதை நான் சிறுவயதில் என் தந்தை வழியாகக் கேட்டது. வடமாகாணத்தில் கரம்பன் என்னும் கிராமத்திலிருந்த எனது அண்ணன் சிறு வயதிலேயே தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி(வெளியூர்) விடுதியில் சேர்க்கப்பட்டதை எங்களுக்கு விளக்குவதற்காகச் சொன்ன கதை இது.
நிகழ்த்திக் காட்டப்படும் இத்தகைய கதை சொல்லிகளது உடல் மொழிகளுடனான வெளிப்படுத்துகையை அவ்வப்போது நினைத்து மகிழ்வுறுவோம்அப்படியான ஓர் உந்துதலால் மனக்கிடங்கிலிருந்து மேலெழுந்ததொரு குமுழியாக வெளியானதுதான் இக்கதை.

00000 000000

குறிப்பு:
1. மண்டூகம் : பென்னாம் பெரிதான ஒரு வகைத் தவளை. (ஈழத் தமிழ் வழக்கத்தில் இது ஒருவகைத் தவளையைக்குறிக்கும்.) கற்பாறை இடுக்குகளுக்குள்ளும் மண் பொந்துகளுக்குள்ளும் வாழும் பெரிய உருவமுடைய தவளை.
பொதுவான அறிவு வளர்ச்சியடையாதவர்களை மண்டூகம் எனச் சுட்டப்படுகிறது (க்ரியா தமிழ் அகராதி) - முலப்பிறப்புச் சுட்டல் இல்லாது இவ்வகை ஒப்புவமை வருமா? இச் சொலில் உள்ள 'மண்' எனும் சொல் கவனம் கொள்ளத்தக்கது. ஆனால் "மண்டூகம்" என்பது சமசுக்கிருத மொழியில் "தவளை" எனவாகப் பதியப்பட்டுள்ளது. (விக்கிபீடியா)
2. பிறப்பு சுழற்சி முறை 
சிறார்களாக நாம் வளர்கையில் 'விஞ்ஞானம்' கற்க பெரு விருப்பம் கொள்ள அப்போது வீடுகளிலிருந்த 'வானொலி' முக்கியமானதொன்று. இது எமது மரபு கடந்த வகையில் எமக்குச் சம்பந்தமில்லாவதர்களது குரல்களையும் தகவல்களையும் தந்து கொண்டிருந்தன. பரிணாமம் போன்ற புதிய கற்கைகளுக்குள் நுழையும்போது இயற்கையாக எமக்குத் தந்த பிறப்பு சுழற்சி முறை உதாரணங்கள் 1. வால்பேத்தை - தவளை ஆவதும் 2. மயிர்கொட்டி - அழகிய வண்ணாத்திப் பூச்சிகளாகப் பறப்பதுவும்.
3. கதையாடல்களும் - பழமொழிகளும் எமது கிராமத்து வளர்நிலைகளும்
தலைப்பிடப்பட்டபோதே பெருமூச்சுதான் உடன் கிளம்புகிறது. அப்படியானதொரு இளம்பிராயத்தை எமது பூர்வீகத்  தரை எமக்கு வாரி வழங்கியிருக்கிறது. நாளாந்தம் செவி வழியாக நாம் கேட்டவை கொஞ்சநஞ்மல்லஎமை அறியாது எம்முடனனேயெ பயணிக்கும் நிழல்போல் எம் வாழ்வை நெறிப்படுத்தும்  அறமாக அவை தோன்றாத அரணாகிவிட்டதை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்து நீண்டு செல்லும் வாழ்வில் எமது வாரிசுகளுக்கு இப்படியானவற்றை நாம் கையளித்திருக்கிறோமா?
ஐரோப்பாவில் இருந்தவாறு யோசிக்கையில் 'ஆசியக் கதை சொல்லிகள்' எப்பேர்ப்பபட்ட ஆளுமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினர் கேட்கும் - வாசிக்கும் - நேசிக்கும் யப்பானியக் கார்ட்டூன் கதைகள் மொழிப் பெயர்ப்பாகாத உலக மொழிகள்தான் இருக்கின்றனவா?
எமக்கு பேரர்கள் - பெற்றோர் - அயலவர் - உற்றார் - ஆசிரியர் - நண்பர்கள் - எம்மோடு பணியாற்றுபவர்கள் எனப்பலரும் 'கதைகள்' சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் எழுத்தில் - ஆவணமாக்கத் தவறிவிட்டிருக்கிறோம். எம் சமுதாயம் செவி வழித்தகவல் பரிமாற்றுப் பரவலுக்கூடாகவே பெரும்பாலும் கடந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் திராவிட நாட்டுக்குள் புகுந்தவர்களும் தமக்கானதான சங்கேத மொழியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் எம்மைக் காலனியாக்கத்துக்குட்படுத்திய வெள்ளையர்களும் அவரவர்  மொழிகளில் தாராளமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் புலம்பெயர்ந்தவர்களாகி இன்று அவர்களது நாடுகளிலேயே குடியேறி வாழத்தலைப்பட்டுள்ளது எமது சமூகம். எமது சந்ததியினரும் இவ்வகையான ஆவண முறைமைப்படுத்தலிலான கற்கை நெறிகளைப் பின்பற்றுபவர்களாகியும்விட்டனர். எனவே எமது தலைமுறையினர்  பதிவு செய்ய நிறையவேயிருக்கின்றன.
இப்படியான முயற்களில் ஒன்றைத்தான் நானும் தொடர்கிறேன்உரிமை கோரப்படாதவையாகப் பரவிய இக்கதைகளின் தொன்மத் தொடர்புகள் வரலாற்றாளர்களுக்கு முக்கியமானவை.  நம் மூதாதையினரால் பெரிதும் மதிக்கப்பட்ட இதிகாசங்களான மாபாரதம் இராமாயணம் போன்றவற்றுக்குள் இத்தகைய சிறு கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால்தான் இத்தகைய பெருங்காப்பியங்கள் அடிப்படை மக்களிடத்திற்குள்ளும் சென்றடைந்திருக்கின்றன என்பதை இலகுவில் ஒதுக்க முடியாது.
கிராம வழக்கத்தில் பரவிவிட்டப்பட்ட பாடல்கள் - பழமொழிகள் - கதைகள் எல்லாவற்றுக்கும் மூலத்தைக் கண்டடைவது சிரமமானது. (இதனை சமுக ஒப்பீட்டு ஆய்வாளர்கள்தான் செய்ய வேண்டும்.) இவை இலகுவில் மாற்றத்துள்ளாக் கூடியவை. யார் வேண்டுமானாலும் எடுத்தாளும் தாராளமயமானவை.
0000 00000
பிற்குறிப்பு:
1. தொடர்பான சில பழமொழிகள் :
'பாம்பின் கால் பாம்பறியும்!'  (பாம்புக்கு ஏது கால்?)
'நுணலையும் தன் வாயால் கெடும்' (பாம்புக்கு ஏது காது?)
'மாரித் தவளை போல் கத்தாதே!'
"கிணற்றுத் தவளைகள் போல் இருக்காதே!"
2. மண்டூகம்:
இந்தியச் சிற்ப மரபில் மண்டூகம் அல்லது சண்டிதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. "மண்டூகம்" என்பது சமசுக்கிருத மொழியில் "தவளை" என்னும் பொருள் தருவது. இது ஒவ்வொரு பக்கமும் எட்டாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் அறுபத்து நான்கு (8 x 8) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய நான்கு பதங்கள் பிரம்மாவுக்கு உரியன. மீதியுள்ள அறுபது பதங்களுள் சில பதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவருக்கு உரியவை. சில இடங்களில் இரண்டு பதங்களைச் சேர்த்து ஒருவருக்கு உரித்தாக்கப்பட்டு உள்ளன. வேறு சில பதங்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் (அரைப் பதம்) வெவ்வேறு தேவர்களின் பதங்களாக அமைகின்றன. இவ்வாறு 64 பதங்களில் உருவாகும் மொத்தம் 45 பிரிவுகள் 45 தேவர்களுக்கு உரியவையாக உள்ளன.
3.  இந்தக்  கதையை  சுவாமி விவேகானந்தர்  குறிப்பிடுகிறார் :
ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. அத்தவளை அக்கிணற்றிலேயே பிறந்து வளர்ந்து, அதிலேயே வாழ்ந்து வந்தது. கிணற்றில் இருக்கின்ற புழு, பூச்சிகள், கிருமிகள் போன்றவற்றைச்  சாப்பிட்டு, அசுத்தத்தை நீக்கி, சுத்தம் செய்து வந்தது. இதன் காரணமாய் நன்கு கொழுத்துப்  பருத்திருந்தது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று தெரியாமல் அக்கிணற்றில் தவறி விழுந்து விட்டது.  அப்போது ‘கிணற்றுத் தவளை’ அழையா விருந்தாளியாய் கிணற்றுக்குள் வந்த கடல் தவளையை உற்று நோக்கியது.
அவை இரண்டுக்கும் நடந்த உரையாடல் இதோ…
“நீ எங்கிருந்து வருகிறாய்?
“கடலில் இருந்து…”
‘கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.
‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?’ என்று கேட்டது கடல் தவளை.
கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதி குதித்து, “உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?” என்று கேட்டது.
“சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?
“நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!” என்று கத்தியது கிணற்றுத் தவளை.
நன்றி:
4. சிறந்த கதை சொல்லி தென்கட்சி கோ சுவாமிநாதன் (காணொலி)

நன்றி: கூகிள் இணைய வழங்கி மற்றும் யூரியூப்

- முகிலன்
பாரீசு 18.06.2014

2 comments:

  1. மண்டூகம் - என்னும் தவளையை என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இது பெரிதாய் இருக்கும். தோட்டம் கொத்தும்போது மண்வெட்டியால் வெட்டப்பட்டு கிடந்ததையும் நான் கண்டிருக்கிறேன். கொஞ்சம் சோம்பல் சுபாவமுடையது. வீணிர் மாதிரி தோலில் பழபழக்கும் தொட மனம் வராது. கிட்டே போய் தடிகளால் தொட்டால் கூட அசையாது. இவற்றின் தொடை இறைச்சிகளை ஐரோப்பியர் உண்பதாக அப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    "எமக்கு பேரர்கள் - பெற்றோர் - அயலவர் - உற்றார் - ஆசிரியர் - நண்பர்கள் - எம்மோடு பணியாற்றுபவர்கள் எனப்பலரும் 'கதைகள்' சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் எழுத்தில் - ஆவணமாக்கத் தவறிவிட்டிருக்கிறோம். எம் சமுதாயம் செவி வழித்தகவல் பரிமாற்றுப் பரவலுக்கூடாகவே பெரும்பாலும் கடந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் திராவிட நாட்டுக்குள் புகுந்தவர்களும் தமக்கானதான சங்கேத மொழியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் எம்மைக் காலனியாக்கத்துக்குட்படுத்திய வெள்ளையர்களும் அவரவர் மொழிகளில் தாராளமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்."
    - ஒப்புக்கொள்ளவேண்டிய பதிவு!
    "நீயென்ன மண்டூகமா?" எனப் பெரியவர்கள் கேட்கும்போது பதறிப் போய்விடுவோம்!! -பழைய சொற்களை ஞாபத்திலிருந்து மீட்டுத் தந்ததற்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் "மண்டூகம்" தொடர்பான கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் அருந்தா!
      எம் வாழ்வோடு கலந்த பல்வேறு சொற்கள் பயன்பாடில்லாதனவாக அருகிவருகின்றன.

      Delete