அன்று நடந்ததும் அதே கதை! இன்று நடப்பதும் அதே கதை!! ஐயையோ...!!
சமீபத்தில் திடீரென இறந்த நண்பரின் இறுதி நிகழ்வில் கலந்துவிட்டு வண்டியில் நண்பர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தோம். பயண அலுப்புத் தெரியாதிருக்க அவரவருக்கான பல கதையாடல்கள் பகிரப்பட்டதாக தொடர்ந்தது இப்பயணம். நானும் சமீபத்தில் கேட்டு அசந்துபோயிருந்த நிகழ்வைச் சொன்னேன். பாரீசில் வியாபாரியாக இருக்கும் நண்பர் சென்ற ஆண்டு ஊர் சென்றிருந்தபோது நடந்த கதை.
அவர் சொன்ன கதை இதுதான்:
பல வருடங்களின் பின்னராக எனது யாழ்ப்பாணப் பயணம் அமைந்திருந்தது. இப்படியான ஒரு நாளில் உறவினர் வீட்டில் இரவு உணவு வேளை, மண்ணின் சுவையுடனான உணவுகள் தொண்டைக் குழிக்குள் ஆனந்தமாகப் பயணித்துக் கொண்டிருந்தன. அப்போது அந்த வீட்டில் நடந்த உரையாடலில் மூன்று வீடு தள்ளி இருக்கும் 'சின்னத்துரை மாமாவின்' பெயரும் இருந்ததால் தானாகவே என் காது விழித்துக்கொண்டது.
"இந்தமுறையும் தவணைதான் கொடுத்திருக்காம்!"
"என்னது? வழக்குப்போட்டு இரண்டு வருடமாயிட்டுது.... இன்னுமா இழுக்குறாங்கள்?" எனது உறவினர் அசந்துதான் போயிருந்தார்.
"கோட்டுக்குப் போயாச்சு.... இனி நாம என்தான் செய்யமுடியும்?.... ம்..." என்ற பெருமூச்சை விட்டவாறு அவ்விடத்தை விட்டகன்றார் அவரின் துணைவி.
எனக்கோ ஆச்சரியம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. 'சின்னத்துரை மாமா சோலி சுறட்டிக்கு போகமாட்டாரே! பிறகேன் கோட்டு கேசு என்றெல்லாம் கதைக்கிறார்கள்?' பொறுக்கமாட்டாதவனாக "என்ன நடந்தது மச்சான்?" என்றேன்.
"அட போடா.... பலாப் பழக் கேசு"
"என்னது பலாப்பழமா?" உணவு இல்லாமலே என் வாய் நீர் யானையின் வாயைப்போல் பிளந்துவிட்டது.
என்னிலையைப் பார்த்து பரிதாபபட்டவராக "உனக்கு இங்கு நடக்கிற விடயமெல்லாம் தெரியாது! நாங்க அந்தக்காலத்து மக்களாகத்தான் வாழ்கிறோம்." என்றார் சாந்தமான முகத்துடன்.
"என்னதான் சொல்கிறாய்?" இன்னும் என்முகத்தில் தோன்றிய ஆச்சரியம் அகலவில்லை.
"மாமாவின் வீட்டு மதிலோரத்தில் இருந்த பலா மரம் நினைவிருக்கா?"
"ஓ!! அந்தமாதிரி காய்த்துத் தொங்கும். அதுக்கென்ன?...... வெட்டிப்போட்டுடாங்களா?" என்றேன் தொடரும் சந்தேகத் தொனியில்.
" பலாமரத்ததுக்கு ஒன்றும் நடக்கவில்லை மச்சான்! மதிலுக்கு அங்கால தொங்கிய பழமொன்றை பக்கதிலே வாடகைக்கு இருக்கும் ஆள் பறித்துச் சாப்பிட்டுப் போட்டான்..... அவ்வளவுதான் பிரச்சினை! இப்ப பொலீசு, கேசு, அப்புக்காத்து, கோட்டு எனவாகத் தொடர்கிறது!" என்றவாறே அடக்கமுடியாது வாய்விட்டுச் சிரித்தார்.
அசகாய சூரத்தாண்டவமாடும் கதாநாயத் தமிழ்ப்படத்தின் கிளைமாக்ஸ்(இறுதிக்) காட்சியைப் பார்த்தவன் போலாகிய நிலையாகிவிட்டது என்நிலை....
'சும்மா சொல்லக்கூடாது.... ஊரில் வாழும் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் முகம்கொடுத்தவாறு இவர்கள் வாழ்கிறார்கள்?' ஆர்வமாகத் தொட்ட பொருளொன்று கழிவாக இருந்தால் ஒரு பதபதப்பு வருமே.... அப்படியாக இருந்தது அன்றைய மாலை. இதன் மேல் என்னால் ஒரு கவளம்கூட சாப்பிட முடியவில்லை. கதைக்கவும் முடியவில்லை, எழுந்து சென்றுவிட்டேன்.
"இந்தச் சனங்கள் ஒருநாளும் உருப்படாது!"
"இதுகள் எதையும் கற்றுக் கொள்ளாது! தானாகவே அழிந்து போகும்!" என்ற நண்பன் தாஸ்சின் கோபத்துடனாக சம்பவ விபரணத்தைக் கூறிக் கிண்டலடித்தேன்.
எனது கதையாடல் நண்பர்களிடையே சிரிப்பைத் தோற்றுவித்திருந்தது. சாரதி புன்முறுவலிட்டவாறு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். இச்சிரிப்லை அதிக நேரத்துக்குச் செல்லாது தடுத்தது, முன்னிருக்கையில் சாரதிக்கு அருகாமையில் இருந்த புதிய நண்பரின் குரல்.
அவர் முகத்தைத் திருப்பி எம்மைப் பார்த்தவாறு, கோபத்துடன் "இதை எப்படிப் பிழையாகக் கருத முடியும்? பழத்தைக் களவாகப் பறித்துச் சாப்பிட்டது பிழைதானே? இப்படியான ஆட்களுக்குப் பாடம் கற்பிக்கத்தானே வேணும்?" என்றதான பாவனை சிரித்துக் கொண்டிருந்த எம்மை நிலைகுலைய வைத்துவிட்டது. அனைவரும் ஒருவரையொருவர் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டோம்.
"இல்லை..... தம்பி! நீண்டதொரு கடுமையான யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு மீளுருப் பெற்று வரும் எமது சமூகம், சில விடயங்களிலாவது பெருந்தன்மையாக நடக்க வேண்டாமோ?" நண்பர்களில் ஒருவர் தட்டுத்தடுமாறியவாறு.
"அதையெப்படி விட்டுக் கொடுப்பது. இவர்களைத் திருத்த வேண்டும்! அப்ப பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ஊரான ஒட்டிசுட்டானில் நடந்ததை சொல்கிறேன். கேட்டால் விக்கித்துப் போய்விடுவீர்கள்." என்றதும் அனைவரும் கதைகேட்கும் வகையில் மௌனித்தோம்.
---------------------------
அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் திட்டத்தில் வந்து குடியேறியவர்களில் ஒன்றுதான் எனது குடும்பம். எங்களுக்குப் பக்கத்துக் காணியில் யாரும் வரவில்லை. அதற்கடுத்த காணிக்காரர் தென்னையெல்லாம் பயிரிட்டு செழுமையாக வைத்திருந்தார். இடப்பெயர்வால் பக்கத்துக் காணிக்காரன் தன் காணியைத்திருத்தி வாழும் முடிவில் வந்திருந்தார். அவரது காணியில் ஒரு சிறு துண்டம் அடுத்த காணிக்காரனால் உள்வாங்கப்பட்டு வேலியால் அடைக்கப்பட்டிருந்தது. இதைப் பேசி இணங்கவைக்க முடியவில்லை. ஆக மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் 'இணக்க சபை'யிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த இணக்க சபையினர் மறு அளவீடு செய்து வழக்காளியின் கோரிக்கையின் நியாயத்தை உறுதி செய்தனர். இரு தினங்களுக்குள் வேலியை கழற்றி முறைப்படியான எல்லைக்குச் சென்றிடவேண்டுமெனத் தீர்ப்பாயிற்று. இதில் புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியது. புதியவரின் காணிக்குள் 6 தென்னங்கன்றுகள் அடங்கிவிடுவதால் அதற்கான நட்டத்தைத் தருமாறு தென்னையைப் பயிரிட்டவர் கோரிக்கை வைத்தார். இத் தென்னைகளை 7 ஆண்டுகளாகப் பயிரிட்டு பராமரித்து வருகிறார் இவர். மீண்டும் விசாரணைகள் நடாத்தப்பட்டு 'மற்றவரின் காணியில் பயிரப்பட்டதால் நட்ட ஈடு வழங்க முடியாது' எனத் தீர்ப்பாகியது.
காணி எல்லையை 3 நாட்களுக்குள் சரியான இடத்தில் நகர்த்தவேண்டும் எனத் தீர்பானது. தோற்றுப் போனவர் தனக்கு அவகாசம் வேண்டுமெனக் கேட்டார். அவரது நியாயத்தை ஏற்றுக் கொண்டு ஒரு வார கால அவகாசம் கோடுக்கப்பட்டது.
"படபடவென காரியத்தில் இறங்கினார் முன்னரே குடியேறிய காணிக்காரர். ஒரு வாரத்துக்கு எட்டுப்பேரை வேலைக்கமர்த்தி அவ்வளவு தென்னைகளையும் தறித்துப்போட்டு புதிய எல்லையில் வேலிகட்டினார். ஆள் பெரிய பணக்காரன். கெட்டிக்காரன்! இந்தக் கதை அப்பவே பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது! இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?" என்றவாறு புதிய நண்பர் பெருமித்துடன் திரும்ப்பிப் பார்த்ததாரே ஒரு பார்வை.
-------------------------------------
அப்பப்பா..... நிசமாகவே, விக்கித்துத்தான் போனோம்!! ஒருவரும் வாயைத் திறக்கவே இல்லை. அடங்கிப் போனவர்களின் பரிதாபகரமான முத்தைப் பார்த்த வெற்றி மிடுக்குடன் முன்னிருக்கையில் நேராக முகத்தைத் திருப்பிவாறு தனது கைத் தொலைபேசியின் பாடல் ஒலியை அதிகமாக்கினார் அந்தப் புதிய நண்பர்.
"இங்க பாருங்கோ இந்தச் சமூகத்தை பற்றி உங்களுக்குத் தெரியாது. சமூகத்துக்காக அது செய்யப்போறேன்...... இது செய்யப்போறேன்...... எனக் கனவு காணவேண்டாம். ஒன்றுமே நடக்காது! கடைசியல நீங்கதான் நொந்து போவீங்க!! உங்களுக்கு ஏதும் நிகழ்ந்தா நாம்தான் நடுத்தெருவில நிக்கவேணும். எல்லாத்தையும் விட்டுப்போட்டு.... பிள்ளைகளை வளர்க்கிற வழியை மட்டும் பார்த்தால் போதுமப்பா...." எனவாக என் மனைவியின் இறைஞ்சல் நினைவில் ஓடுகிறது.
- கிடுகு வேலிக்குள் ஒவ்வொருவரும் குறுநில மன்னனாக வாழும் மனிதக்கூட்டத்தில் அயலவன்கூட வேற்று மன்னனாகவே தெரிவதில் வியப்பொன்றும் இல்லை. தத்தமது வீட்டு வளவுக்குள் 'நான் ... எனக்கு... எனக்கு மட்டுந்தான்..... எனக்கில்லாதது எவருக்கும் கிடைக்ககூடாது.... அதுவும் அயலவனுக்குக் கிடைக்கப்படவே கூடாது!' எனவான மனக்கோலங்கள் சிறு பிராயத்திலிருந்தே பதியமிட்டு வளர்க்கப்ட்ட பெருமன விருட்சங்கள்தானே எம்மவர் மனங்கள்......!! முறுவலிக்றேன்.
- முகிலன்
பாரீசு. 19.06.2013 Tweet
No comments:
Post a Comment