Saturday, 15 June 2013

கல்வியாளர் பொ. கனகசபாபதி அவர்களுடனான நேர்காணல்

« கனடாவைப் பொறுத்த வரையிலே அது மாணவர் மையக் கல்வி, ஆனால் இலங்கையில் இருந்ததோ ஆசிரியர் மையக் கல்வி »

நேர்காணல் :  
கல்வியாளர் பொ.கனகசபாபதி
[இலங்கை முன்னாள் கல்லூரி அதிபர், கனடா கல்வியியல் பல் கலாச்சார ஆலோசகர்]

[கல்வித்துறைசார் பணிகளில் ஆற்றலும் பட்டறிவும் கொண்டவர் ‘கனெக்ஸ்’ எனப் பலராலும் அறியப்பட்ட பொன்னையா கனகசபாபதி அவர்கள். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து இலங்கை, நைஜீரியா, கனடா ஆகிய மூன்று நாடுகளில் கல்விப்பணியாற்றி 75 வயதினை கடந்த அவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.

பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்காமல் இன்றுவரை தொடர்ந்து எழுதி வருகிறார்.
அவ்வகையில் அவர் கட்டுரைகளாக கனடா இதழ்களில் எழுதி நூல்களாக தொகுக்கப்பட்ட ‘எம்மை வாழ வைத்தவர்கள்’, ‘மரம் – மாந்தர் – மிருகம்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகள் ஐரோப்பிய நகரங்களில் நடைபெற்ற போது அவற்றில் பங்கேற்பதற்காக நூலாசிரியர் என்ற வகையில் பிரான்சுக்கும் வருகை தந்திருந்தார். அவ்வேளையில் கி.பி.அரவிந்தனின் வீட்டில் வைத்து 27-10-2012 அன்று இந்த நேர்காணல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. தொண்ணூறு நிமிடங்கள் கொண்டதான அந்த ஒலிப்பதிவை எழுத்துக்கு பெயர்த்தவர் டெல்லியில் வதியும் தோழர் ச.வீரமணி. நேர்கண்டவர் கி.பி.அரவிந்தன் உதவியுடன் க.முகுந்தன்.]


பகுதி - 01

கேள்வி: வணக்கம் ஐயா. இலங்கைக்குச் சென்று ஏறத்தாழ பத்து நாட்கள் அங்கே தங்கி இருந்திருக்கிறீர்கள். நீங்கள் கற்பித்த கல்லூரிகளுக்கு எல்லாம் சென்றிருக்கிறீர்கள். அப்போது உங்களிடம் படித்த மாணவர்களைப் பார்த்திருப்பீர்கள், ஆசிரியர்களைப் பார்த்திருப்பீர்கள், பொதுவான நலம் விரும்பிகளை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். அவ்வாறு சந்தித்தபோது அந்தக் காலத்திற்கும் இப்போதுள்ள நிலைமைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை, உண்மையில் கல்வியின் தன்மையை நீங்கள் எப்படி அவதானித்தீர்கள்?

பதில்: இந்தமுறை நான் அங்கே போயிருந்தபோது என்னோடு சம்பந்தப்பட்ட மூன்று கல்லூரிகளுக்குப் போயிருந்தேன். பொதுவாக அந்தக் கல்லூரிகளில் மட்டுமல்ல மற்ற கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களோடு கலந்துரையாடக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் பாடசாலைகள் மாத்திரம் அல்ல, ஏனைய பல பாடசாலைகளும் கூட கட்டிட அமைப்பைப் பொறுத்த அளவில் அவை கனடாவில், இங்கிலாந்தில் காணப்படுகின்ற கட்டிட அமைப்புடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு நன்கு கட்டப்பட்டிருக்கின்றன.

பிரதானமான காரணம் அங்கு இருக்கக்கூடிய பாடசாலைகளின் பழைய மாணவர்  சங்கங்கள் வழங்கிய உதவி.  ஒவ்வொரு பாடசாலைக்கும் வெளி நாடுகளிலே பழைய  மாணவர் சங்கங்கள் இருக்கின்றன. அதில் உள்ளவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு, மிக நெருக்கமாகப் பல விதங்களிலும் உதவி வருகிறார்கள். அவர்களின் உதவிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவதும் ஒன்று. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒரு பாடசாலையின் தரத்தை நிர்மாணிப்பது கட்டிடங்கள் மாத்திரம் அல்ல.

தற்போது அங்கே கல்வியின் தரம் மிகவும் குறைந்தவிதத்திலே காணப்படுகிறது, இது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. அங்கே காணப்படுகின்ற மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, ஒரு பகீரதப்பிரயத்தனத்தை எடுக்க வேண்டியது அவசியம். அதனை நான் எழுதிய புத்தகத்திலேயே ['எம்மை வாழ வைத்தவர்கள்'] சொல்லி இருக்கிறேன்.

யாழ்ப்பாணத்து மக்களுடைய அந்த நீண்டகாலத்து ஆசை என்ன? Social mobility - சமூக அசைவியக்கம்  என்று சொல்கிறோமே அந்த சமூக உயர்ச்சிக்கு, கல்விதான் பிரதானமான காரணியாக இருந்து கொண்டிருக்கிறது. அதனை அன்றைய பெற்றோர்களாலே கனவு காண முடிந்தது. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு உரிய வசதியும் திறமையும் அவர்களுக்கு இருந்ததா என்றால் இல்லை.

பொதுவாகப் பெற்றோர்களில் பெரும்பாலோர் சாமானிய விவசாயிகளாக. கல்வி அறிவில் குறைந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், அந்தக் காலத்திலே பாடசாலைகள்தான் கிராமத்தின் மையமாக அமைந்து, அந்தப் பாடசாலைகளுக்குத்தான் பெற்றோர்களுடைய அபிலாசைகளை ஈடுசெய்ய வேண்டிய ஒரு கடமை இருந்தது. ஆகவே. அந்தப் பாடசாலைகளுடைய அதிபர்களுடைய அந்த ஏற்பாடு மிகவும் முக்கியமானதாக அந்தக் காலத்திலே அமைந்திருந்ததைப் பார்த்தோம். அவர்களுடைய அந்த ஏற்பாடு நமது யாழ்ப்பாண மக்களுடைய அபிலாசைகளை ஈடேற்றக்கூடிய விதத்தில் அமைந்திருந்ததால்தான் யாழ்ப்பாணத்தினுடைய கல்வித்தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது.

அதற்கு முழுமையாக என்ன காரணம்? அதிபர்கள் - பாடசாலைகளுடைய அதிபர்கள். பல அதிபர்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களது உழைப்பின் விளைவுதான் அது. எனவேதான், அந்த நூலிலே அவற்றை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதே நிலைமை இப்போது மீண்டும் வந்து விட்டது.

யாழ்ப்பாணத்திலேயுள்ள பெரும்பாலான மக்கள் இப்போதும் கூட விவசாயிகளாகவோ, கல்வி அறிவிலே குறைந்தவர்களாகவோதான் இருக்கிறார்கள். அதை ஒரு குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் போராட்டத்துடன் சமூக உயர்மட்டத்தினர், கல்வி அறிவிலே கூடியவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். அதனாலே, அவர்களுடைய பிள்ளைகளும் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். இன்னொரு சாரார் கொழும்பு மாநகர்  மற்றும் வேறு இலங்கையின் மத்திய இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அங்கு போய்விட்டார்கள். அங்கே அவர்கள் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்கிறார்கள். யாழ்ப்பாணத்திலே மிகுதியாக இருக்கின்ற பெற்றோர்களுடைய ஊக்கம் பொதுவாகவே குறைந்ததாகத்தான் காணப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு அங்கே போதிய அறிவு இல்லை. அதனை பாடசாலைகள்தான் ஈடேற்ற வேண்டும். இந்த மாணவர் தலைமுறை மிகவும் ஓர் இக்கட்டான நிலையிலேயே காணப்படுகிறது.

கேள்வி: உங்கள் காலத்திலே உங்களுக்கு ஒரு மனோநிலை இருந்திருக்கிறது. அதனால்தான் "வாழ வைத்தவர்கள்" என்று பாடசாலை அதிபர்களை [Principals] ஆசிரியர்களைப் பற்றியெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். இன்றைக்கு இப்போது இருக்கிற ஆசிரியர்களோடு நீங்கள் கலந்துரையாடியபோது அவர்களுடைய மனோநிலையை எப்படி உங்களால் அவதானிக்க முடிந்தது? அன்றைக்கு ஆசிரியர்களிடம் இருந்த அந்த தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு, மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்கிற வெறி, இப்போதுள்ள ஆசிரியர்களிடம் காணப்படுகிறதா? அல்லது, ஏனோதானோவென்ற மனோநிலையுடன் காணப்படுகிறார்களா? மனம் திறந்து சொல்லுங்கள்.

பதில்: அப்போதிருந்த ஆசிரியர்களுக்கும் இப்போதிருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. கொழும்பில் ஓர் ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் ‘‘நான் எல்லாப் பாடங்களையும் முடித்து விட்டேன்’’ என்றார். மேலும் அவர், ‘‘இந்தப் பிள்ளைகளுக்குத்தான் நான் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை, உதவாக்கரைகள்’’ என்றார். பிறகு பார்த்தால் ஆசிரியர்கள் அக்கறை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது ஒன்று. மற்றொன்று, மாணவர்கள் மீதும் குற்றச்சாட்டு போடுகிறார்கள். மாணவர்கள் ஒழுங்காக வகுப்புகளுக்கு வருவதைவிட, டியூசன்களை [tution] நம்பி இருக்கிறார்கள்.

‘டியூசன்’ போவதை நிறுத்துவதற்கு நீங்கள் ஆவன செய்யய வேண்டும் என்று நான் ஒரு அதிபரிடம் சொன்னேன். எப்படிச் செய்யயலாம்? பெற்றோர்களுக்கு உங்களிடம் நம்பிக்கை ஏற்படக்கூடிய விதத்தில் பாடசாலைகளை நடத்த வேண்டும் என்று சொன்னேன். எந்த நிகழ்ச்சியையும் பாடசாலை நேரத்திலே செய்யயாதீர்கள். பாடசாலைக்கு அப்புறமான நேரத்தில் நிகழ்ச்சிகளைச் செய்யுங்கள். அப்படி நிகழ்ச்சிகளைச் செய்கின்றபோது, மாணவர்களை டியூசன் [tution] போகாமல் தடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றேன். மேலும் ஓர் உத்தி சொன்னேன்.

வேறு இடங்களில் பணியாற்றும் நல்ல சிறந்த ஆசிரியர்களை கூப்பிட்டு டியூசன்  கொடுப்பதை பாடசாலை ஆசிரியர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதை வேறு மாதிரிச் செய்யலாம். அதாவது ஒரு ‘பயிற்சி பட்டறை’ [workshop] மாதிரி, சிறந்த ஆசிரியர்களைக் கூப்பிட்டு, இடையிடையே workshop மாதிரி செய்யலாம். அது ஆசிரியர்களையும் பாதிக்காது. மாணவர்களுக்கும் நம்பிக்கை வரும். அது மாதிரி மாணவர்களுக்கு உதவி செய்வது, அப்படியான ஒருசில செயல் திட்டங்களை வகுத்தால், நிச்சயமாக மெல்ல மெல்ல பாடசாலைகள் மீது மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். அது முக்கியமான ஒன்று.

‘‘இந்தப் பாடசாலை ஆசிரியரிடம் கல்வி கற்றால் நான் முன்னேறுவேன்’’ என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.

கேள்வி: உங்கள் காலத்திலும் அல்லது அதற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் ஆசிரியர்கள், அதிபர்களின்  கல்வித்தரம் மிக உயர்வாக இருந்தது. இன்றைக்கு காணப்படுகின்ற ஆசிரியர்கள் அவ்வகையான தரத்தில் இல்லாமல் குறைந்த நிலையிலேயே பதவிக்கு வருவது ஒரு காரணமாக இருக்குமா?

பதில்: இல்லை. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வந்த காரணத்தினாலேயே பல ஆசிரியர்கள் பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். எங்கள் காலத்திலே  நான் உண்மையிலேயே ஆசிரியராக இருக்கும் வரையிலே ‘டிப்புளோமா’ பெறக்கூட விரும்பவில்லை. ஒரு சிறந்த ஆசிரியருக்கு ‘டிப்புளோமா’ எந்தவிதத்தில் உதவப் போகிறது?  « காரிகைக் கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று » எனச் முன்னோர் சொல்லி வைத்துள்ளார்கள்.

ஓர் ஆசிரியர் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யதார் என்றால் வேறு பட்டங்கள் தேவையில்லை. ஆனால், இன்றையதினம் பார்த்தீர்கள் என்றால், பல ஆசிரியர்கள்,  நிறைய பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பட்டங்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு உதவுவதில்லை. அவர்களுடைய பதவி உயர்வுக்கு உதவுகிறது. அதைக் குறைச் சொல்வதற்கில்லை. ஆனால், அதே சமயத்திலே, மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய பணியையும் ஆசிரியர்கள் யோசிக்க வேண்டியது அவசியம். அந்த அளவுக்கு இதை முக்கியமானதாகக் கருத வேண்டும்.

கேள்வி: இப்போது  ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையில் - குறிப்பாக 2009க்குப் பின்னால் - அவர்களுக்கு இடையிலான கல்வி நிலைமையில் ஓர் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அமைப்பைக் - முறைசார் கல்வித்திட்டம் [formal education system], கொண்டுவர வேண்டிய அரசோ அல்லது கல்விசார் நிறுவனங்களோ கொண்டுவராதது ஒரு காரணமா?

பதில்: ஆம். நிச்சயமாக. நாடு ஒரு குழப்ப நிலையில் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அதற்குப் பின் ஒரு சீரான நிலைக்கு நாடு வருவதற்கு ஒரு கணிசமான காலம் எடுக்கும். அதுவும் முக்கியமாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையிலே சில பாடசாலைகள், கல்லூரிகள் பெரிதாக இந்தப் போராட்டத்தாலே பாதிக்கப்படாதவைகளாகும். யாழ்ப்பாண நகரத்திலே உள்ள இந்துக் கல்லூரி பெரிதாக இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படவில்லை.

ஆனால் அதேசமயத்திலே இந்தப் போராட்டக் காலத்திலே மகாஜனா போன்ற கல்லூரி 15 இடங்களிலே மாறி மாறி இடம்பெயர்ந்து வந்திருக்கிறது. நடேசுவரா கல்லூரி இன்னமும் தற்காலிகமான ஒரு கட்டிடத்தில்தான் இயங்குகிறது. மகாஜனக் கல்லூரியின் சுற்றுவட்டாரத்திலே இன்னமும் மக்கள் குடியேறவில்லை. மக்கள் வெகுதூரத்திலிருந்து பஸ்களில்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியான பல பிரச்சனைகளைப் பல பாடசாலைகள் எதிர்நோக்குகின்றன.

யாழ்ப்பாண நகரத்திலுள்ள இந்துக் கல்லூரியிலே 2500 பிள்ளைகள் கற்கிறார்கள் என்றால், என்ன காரணம்? அந்தப்  பாடசாலையினுடைய கல்வித் தரத்தை அது பிரதிபலிக்கவில்லை. அங்கே போனால் பாடசாலை முடிந்தவுடன் டியூசனையும் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வரலாம். டியூஷன்  நடைபெறும் மையங்கள் யாழ் நகரத்திலேயே உள்ளன. அந்த ஒரு நோக்கத்தோடுதான் அங்கே போகிறார்கள். யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிகமான அளவில் மாணவர்கள் இருக்கிறார்கள். மகாஜனா கல்லூரியில் 1500 மாணவர்கள்தான் இருக்கிறார்கள். ஸ்கந்தாவில் 800 மாணவர்கள்தான்  இருக்கிறார்கள். அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவை மிகவும் சொற்பமான தொகை.

கேள்வி: நீங்கள் உங்கள் நூலிலே, ஆசிரியர்கள் பிரம்பு  இல்லாமல் கற்பிப்பது பற்றி  எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். அண்மைக் காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துக்களை கேட்டால்  ‘அடித்தல்’, ‘ஆசிரியர்களை வணங்குதல்’ போன்ற நடைமுறைகள் எல்லாம் இப்போதும் இருக்கின்றன என்கிறார்கள். சில பாடசாலைகளில் மாணவர்கள் கட்டாயமாக சப்பாத்து அணிந்து வர வேண்டும் என்பதான விடயங்கள் எல்லாம் அண்மையில் வந்திருக்கின்றன. இவை பலருக்கும் சிரமங்களை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். இவைபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அடிப்பது என்பது இப்போது குறைந்துவிட்டது என்று கருதுகிறேன். அடித்தால் மாணவர்களே பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவார்கள். அந்தக் காலத்திலே பள்ளிகளிலே மாணவர்களை அதிபர்கள் அடித்தார்கள், ஆசிரியர்கள் அடித்தார்கள் என்று வீட்டுக்கு வந்து சொன்னால், வீட்டிலும் அடி விழும். இப்போது அப்படி இல்லை. நிலைமை மாறிவிட்டது. ஆசிரியர்கள் பிரம்பை  பாவிப்பது  மிகவும் குறைந்துவிட்டது.  ஆனால் ஆசிரியர்களிடம் பணிவு என்பது தேவையான ஒன்று. ஆசிரியர்களிடம் மாணவர்கள் பணிவாக இருக்க வேண்டியதுதான். அதற்காக ஆசிரியர்களின் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஓர் ஆசிரியரைத் தோழமையோடு பார்க்கலாம். அதே சமயத்திலே அவர்களுக்கு உரிய மரியாதையை மாணவர்கள் கொடுக்க வேண்டியது அவசியம். அதை மாணவர்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். பொதுவாக பாடசாலைகளில் நான் பார்த்தபோது அந்த அளவிற்கு மாணவர்கள் மோசமாக இல்லை. பாடசாலைகளில் வந்து பார்த்தபோது மாணவர்கள் நல்லவிதத்தில்தான் இருக்கிறார்கள்.

சப்பாத்துப் பற்றிக் கூறுவதானால் நான் அங்கு அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் பாடசாலைச் சீருடையை வரையறுத்தேன். வெள்ளை  உடையில்  பெண்களுக்குக் கழுதுத்துப் பட்டியும் எல்லா மாணவர்களுக்கும் சப்பாத்து அணிய வேண்டும் எனவும் கட்டாயப் படுத்தினேன்.  பாடசாலையில் அழகு ஒழுங்கு தேவை என்பது என் கருத்தாக இருந்தது. இப்போது பெற்றோர்களுக்கு போதுமான வசதி குறைவாகத் தான் உள்ளது. ஆனால் அரசாங்கம் சீருடை வழங்குகிறது. மகாஜனா மாணவர்களுக்குப் பழைய மாணவர் சங்கத்தினர் சப்பாத்து வாங்குதற்கான நிதி உதவி வழங்கியுள்ளனர்.

கேள்வி: அங்குள்ள பாடசாலைகளில் தற்போதுள்ள பாடவிதானம் [Curriculum] பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அண்மைக் காலத்திலே பாடத்திட்டங்களிலே பல மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றை அவ்வளவு உகந்ததாக நாம் கருத முடியாது. மாற்றங்கள் அரசாங்கம் தங்கள் விருப்பப்படி கொண்டு வந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

கனடாவில் கல்வித்திட்டத்தினை ஆய்வு செய்வதற்கென்றே ஒரு திணைக்களம் உள்ளது. அதன் சிபார்சின்படி கல்வி வழங்குகையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்தில் கூட 2015ல் பரீட்சை முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆய்வுகளைச் செய்கின்றபோது அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்களைக் கொண்டு வருவது இயல்பானதே. இங்கிலாந்திலே பழையபடி எழுத்துப் பரீட்சை முறையைக் கொண்டுவர இருக்கிறார்கள். இலங்கையில் நடப்பதுபோலவே பரீட்சை முறையை 2015ல் தொடங்கப்போகிறார்கள்.

இப்போது அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்கள் கோர்ஸ் [Course work] களில் தேர்ச்சி அடைய முடியும். தகுதி குறைந்த மாணவர்கள் கூட சித்தி அடையக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.

கேள்வி: தாங்கள் தற்போது கல்வியாளர் என்ற முறையிலே கனடாவிலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அங்கேயும் நீங்கள் ஒரு கல்வியாளராகத்தான் அறியப்பட்டிருக்கிறீர்கள். அங்கேயும் பல்வேறுக் கல்வித் திட்டங்களில், பாடவிதானக் குழுக்களில், கல்வி ஆலோசனைக் குழுக்களில் இருந்திருக்கிறீர்கள். கனடாவின் கல்வித்துறையில் என்ன வகையான முறையிலே பங்காற்றுகிறீர்கள்? தமிழ் மொழி சார்ந்த கல்வித்துறையில்தான் கவனம் செலுத்துகிறீர்களா? அல்லது கனடா மக்கள் சார்ந்த அல்லது பல்லின மக்கள் சார்ந்த பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறீர்களா?


பதில்: நான் கனடாவிற்குப் போனபோது பாடசாலை ஆசிரியர் பணியில் சேரத்தான் விரும்பினேன். அதற்குரிய கல்வித் தகுதியையும் நான் பெற்றேன். ஆனால் சற்றேறக்குறைய எங்களுடைய கற்பித்தல் முறைக்கும் கனடாவில் இருந்த கற்பித்தல் முறைக்கும் வித்தியாசம் காணப்பட்டது.

அங்கே பார்த்தபோது முழுக்க முழுக்க மாணவர் மைய கல்வியாக இருந்தது. ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு குழுத் தலைவர்- ‘டீம் லீடர்’ [Team Leader] என்று சொல்வார்களே அதுபோல இருந்தார்.

அங்கே நான் அங்கீகரிக்காத ஒன்று. கலவை வகுப்பு - ‘மிக்ஸ்ட் கிளாஸ்’ [Mixed Class] முறையாகும். அதாவது 4ம் 5ம் தரத்தை ஒன்றாக வைத்திருப்பார்கள். அதுபோன்று 5ம் 6ம் தரத்தை ஒன்றாக வைத்திருப்பார்கள். அதன் தத்துவம் என்னவென்றால், ஒரு மாணவன்/மாணவி தனக்குத் தெரிந்த விடயங்களைத் தன் சகபாடிக்குச் சொல்லிக் கொடுப்பதானால் அவன்/அவள் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதாகும்.  தரத்திலே சற்றுக் குறைவான நிலையிலே உள்ள ஒரு மாணவனுக்கு/ மாணவிக்கு அவன்/அவள் சகபாடி சொல்லிக் கொடுப்பதனை  ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதிலும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும் என்பது அங்குள்ள கல்வியியலாளர் கருத்தாக உள்ளது.

பொதுவாகவே யாழ்ப்பாணத்திலே இருப்பதுபோல் மாணவர்களைத் தரத்தின் அடிப்படையிலே தரம் பிரித்தல் நடைபெறுவதில்லை. எல்லாத்தரமான  மாணவர்களும் ஒன்றாகவே ஒரே வகுப்பினில் இருப்பார்கள். ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால். 5 பிள்ளைகள் மிகவும் மேல் நிலையிலும். 5 பிள்ளைகள் மிகவும் கீழ் நிலையிலும் இருப்பார்கள். மீதம் உள்ள பிள்ளைகள் நடுத்தரத்தில் இருப்பார்கள். ஆசிரியர்களைப் பொறுத்த அளவில் நடுத்தரமாக இருக்கக்கூடிய மாணவர்களுக்குத்தான் கவனம் செலுத்துவார்கள். அதனாலே மேல் நிலையில் உள்ளவர்களும், கீழ் நிலையில் உள்ளவர்களும் - இப்படி இரண்டு பகுதியினரும் - விரக்தி அடைவார்கள். இந்த மிக்ஸ்ட் கிளாசாலே அனைவரையும் மேலே உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அதனாலே மிக்ஸ்ட் கிளாஸ்கள் அநேகமாக அனைத்துப் பாடசாலைகளிலும் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

கேள்வி: தாங்கள் கனடாவில் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறீர்கள். இலங்கையிலேயும் கல்வி கற்பித்திருக்கிறீர்கள். அதிபராக இருந்திருக்கிறீர்கள். நைஜீரியாவில் கல்வித்துறையில் பல்வேறு பணிகளில் இருந்திருக்கிறீர்கள். கல்வி கற்பித்தல் முறையில் கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் என்ன வித்தியாசத்தைக் கண்டிருக்கிறீர்கள்?

பதில்: இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், இலங்கையைப் பொறுத்தவரையில் இப்போது நிலைமைகள் மாறிக் கொண்டு வருகின்றன. முந்தைய காலத்தில் முழுக்க முழுக்க ஆசிரியர் மையக் கல்வியாக இருந்தது. அதைக் குறை சொல்வதற்கில்லை. தாய்மொழிக் கல்வி என்றார்கள். ஆனால் போதிய நூல்கள் இருப்பதில்லை. ஆசிரியர்கள்தான் ஆங்கிலப் புத்தகங்களைத் தேடிக் கொண்டு வந்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டி இருந்தது. அவர்களுக்கு அந்தக் கடமை இருந்தது. அவர்களே பாடக் குறிப்புக்கள் [notes] எடுத்து மாணவர்களுக்கு அவற்றினைச் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் இல்லாவிட்டால் மாணவர்கள் இல்லை. அப்படி ஆசிரியர் மையக் கல்வியாகத்தான் இருந்தது.

ஆனால் கனடாவைப் பொறுத்த வரையிலே அங்கே மாணவர் மையக் கல்வி. ஏனென்றால், புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால், மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தாய்மொழியாக இருந்ததால், ஆசிரியர்கள் உதவியின்றியே மாணவர்கள் அவற்றைப் பார்க்கலாம். ஆசிரியர்கள் இந்த இந்தப் புத்தகங்கள் இங்கே அங்கே இருக்கின்றன, போய்ப் பாருங்கள் என்று மாணவர்களிடையே சொன்னால் அவர்களால் போய் பார்க்க முடியும்.

இலங்கையில் ஒரு பிரச்சனை, புத்தகங்களைத் தேட வேண்டும். மாணவர்களால் அதைச் செய்ய முடியாது. எனவே இலங்கைக் கற்கைத்துறையில் ஆசிரியர்கள் மிக முக்கியமான ஒரு பகுதி. அந்தக் காலத்திலும் சில ஆசிரியர்கள் நன்கு பெயர் பெற்றிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மிகக் கடினமாக உழைத்தார்கள்.

கேள்வி: கனடாவில் தமிழ் மாணவர்கள் நிலை எந்த அளவிற்கு இருக்கிறது. தமிழ் அவர்களைச் சென்று அடைந்திருக்கிறதா? அவர்களது தாய்மொழியான தமிழை அவர்கள் கற்றுக்கொண்டு வருகிறார்களா?

பதில்: உண்மையிலேயே அங்கே வந்து நான் ஆசிரியர் பணியை ஆரம்பித்தபோது, அங்கிருந்த பிரதமர் புலம் பெயர்ந்த மக்களுக்காக நிறையவே நல்ல விடயங்களைச் செய்திருக்கிறார். அதில் ஒன்றுதான் அவர் அறிமுகப்படுத்திய பாரம்பரியக் கல்வி. ஒவ்வொரு பிள்ளையும் தமது தாய் மொழியைக் கற்பிப்பதற்கு ஆவன செய்ய வேண்டி இருக்கிறது. பாரம்பரியக் கல்வி என்பது  பின்னர்  சற்று மாறி அனைத்துலகக் கல்வி என்று பெயர் பெற்றது.

ஏனென்றால் அது கொஞ்சம் வித்தியாசமான தத்துவம். இன்னொரு மொழியைக் கற்பதால் கூடுதலான உலகத்து மக்களோடு தொடர்பு கொள்ள முடியும் என்ற தத்துவம். அந்தத் தத்துவத்தின் விளைவாக பல பாடசாலைகளில் தமிழும் ஒரு பாடமாக போதிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அங்குள்ள சட்டவிதிகளின்படி ஒரு பாடசாலையிலே 22 மாணவர்களுடைய பெற்றோர்கள் தமது பிள்ளைக்கு தமிழ் கற்பிக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆவன செய்ய வேண்டியது அப்பாடசாலை அதிபருடைய கடமை. அந்த சந்தர்ப்பத்தில் என்னைத் தமிழ் மொழிக்கு உரிய தலைவராக நியமித்தார்கள். நானும் பல பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பதற்கு ஆவன செய்தேன். அதனாலே எம் நாட்டு ஆசிரியர்கள் பலருக்கு ஆசிரியர் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதேசமயத்தில் என் முயற்சியாலே பல்கலைக் கழகங்களில் பயில்வதற்குத் தமிழ் ஒரு பாடமாக அங்கீகாரம் பெற முடிந்தது. அது இலங்கையிலிருந்து அண்மையில் வந்தவர்களுக்கு மிக அனுகூலமாக இருந்தது.

கனடாவில் ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பிள்ளைகள் தமிழ் கற்கிறார்கள் என்பது கேள்விக்குறி. பிள்ளைகளுக்கு வீட்டு மொழியாக தமிழ் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி. பிரான்சில் இப்போதும் தமிழ் வீட்டு மொழியாக ஓரளவுக்கு இருக்கிறது, ஆனால் கனடாவைப் பொறுத்தவரையிலே வீட்டு மொழியாக ஆங்கிலம் மாறிவிட்டது. அதன் காரணமாகப் பிள்ளைகள் தமிழைக் கற்பதில் அதிக நாட்டம் காட்டுவது இல்லை.

கேள்வி: தாங்கள் கனடா கல்வி பற்றி சொல்லிக்கொண்டு வந்தீர்கள். கனடிய கல்வி முறையினுடைய சிறப்பு அம்சமாகத் நீங்கள் அவதானித்தது என்ன?

பதில்: சிறப்பு அம்சம் என்று சொல்வதைவிட அங்கே ஒரு வித்தியாசமான முறை, கையாளப்படுவதைக் கண்டபோது. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  மாணவர்கள் - இரண்டு தரங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றாகச் சேர்த்து -  ஒரு மாணவன்/மாணவி இன்னொரு மாணவன்/மாணவிக்கு, சொல்லிக் கொடுக்கும் முறை அங்கே கையாளப்படுகிறது. அதாவது ஒரு மாணவன்/மாணவியால்தான் இன்னொரு மாணவ மாணவன்/மாணவி க்குச் சுலபமாக கற்பித்தலைப் புகுத்த முடியும் என்ற ஒரு புதிய தத்துவம் அங்கே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது அங்கீகரிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மாணவர்கள் அவர்களுடைய தரத்தை நன்கு உணர்ந்து அதற்கேற்றவகையில் அவர்களுக்கு விளங்கப்படுத்தக்கூடியதாக அது இருக்கிறது. ஆசிரியர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கின்றபோது, அதனை எல்லா மாணவர்களும் புரிந்து கொள்வதில் கஷ்டம் இருக்கிறது. ஆனால் அங்கே இது வித்தியாசமான முறையில் இருக்கிறது. அதை ஒரு சிறப்பு அம்சமாக நான் கருதுகிறேன்.

மற்றொரு முக்கியமான வித்தியாசமான அம்சம் என்று பார்க்கின்றபோது, கனடாவிலே பொதுப் பரீட்சை இல்லை. பல்கலைக் கழகத் தேர்வு வரைக்கும்கூட பாடசாலையின் மதிப்பீட்டின் விளைவாகத்தான் நடைபெறுகிறது. அதிலே குறை சொல்வதற்கும் இடம் உண்டு. ஏனென்றால், எல்லாப் பாடசாலை ஆசிரியர்களும் ஒரே மாதிரியான தரத்திலே கற்பிக்கிறார்களா? அல்லது எல்லாப் பாடசாலை மாணவர்களும் ஒரே தரத்திலே மதிப்பீடு செய்யப்படுகிறார்களா? என்ற ஒரு பிரச்சனை இருக்கிறது. அது ஒரு குறைபாடாக நாம் கருதலாம்.

ஆனால், இதற்கு அவர்கள் சொல்கின்ற விளக்கம், அதாவது ‘‘பரீட்சை என்று வைக்கின்றபோது, மாணவர்களுக்கு ‘மனஅழுத்தம்’  மிகக் கூடுதலாக இருக்கின்ற காரணத்தினாலே, அவர்கள் தமது முழுத் திறமையையும் பரீட்சையிலே காட்ட மாட்டார்கள். இப்படியாக மதிப்பீடு செய்கின்றபோது அந்த மாணவர்கள், சுயமாகத்  தங்கள் திறமையைக் காட்டுவார்கள்,’’ என்று அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.  ஓரளவுக்கு அது ஏற்கக்கூடியதாகவும் இருக்கிறது.

ஆனால், அதே சமயத்திலே, சில மாணவர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடிய நிலையும் இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு பாடசாலையின் தரமும் வித்தியாசமானவையாக இருக்கின்றன. ஒரு பாடசாலையினுடைய மாணவர் குறித்து, அந்தப் பாடசாலை ஆசிரியர் மதிப்பீடு செய்வதைப்போல அதே மாணவரை இன்னொரு பாடசாலை ஆசிரியர் மதிப்பீடு செய்வது  இருக்காது. இரண்டும் சமமாகவும் இருக்காது - கருதவும் முடியாது. எனவே பொதுப் பரீட்சை வைக்கின்றபோது எல்லாரும் சமமாகி விடுகிறார்கள். இவ்வாறு அந்தக் குறைபாடும் இருக்கிறது.

இன்னொன்று, பொதுவாகவே எல்லா நாடுகளிலும் இப்போது வகுப்பேற்றம் என்பது ‘ஆட்டோமேடிக்’ [automatic] -ஆக இருக்கிறது. இங்கேயும் அப்படியாக வந்த காரணத்தினாலே, சில பிள்ளைகளுக்கு 1ம்  தரத்திலே படிக்கிறபோதே, ஆங்கிலம் சரியாக எழுத, வாசிக்கத் தெரியாத நிலை இருக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்காக இப்போது 3ம் தரத்திலே ஒரு பரீட்சையை வைக்கிறது Educational Accountability என்கிற ஒரு நிறுவனம். அந்தப் பரீட்சையின் மூலமாக கணிதமும், ஆங்கிலமும் சோதிக்கப்படுகிறது. அவ்வாறு பரீட்சை வைப்பது மாணவனுடைய தகுதியைக் கணிப்பதற்காக அல்ல. ஆசிரியர் கற்பித்தது, மாணவனுக்குப் புரிந்ததா என்பதை அறிவதற்காகத்தான்.  அந்த நோக்கம் நன்றாக இருக்கிறது. ஏனென்றால், அதற்குத் தக்க மாதிரி ஆசிரியர்கள் தாங்கள் கற்பித்தலில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். அது ஒரு நல்ல அம்சமாகக் கருதப்படுகிறது.

ஆனால், அவர்கள் வைக்கும் பரீட்சையில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள். அதனால் பாடசாலைகள் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.  பாடசாலைகளை ஒப்பிடும் தன்மை இருக்கிறது. அவ்வாறு ஒப்பிட்டு, பெரிய அளவிலே ஒரு பாடசாலையிலிருந்து இன்னொரு பாடசாலைக்கு மாற முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாடசாலையும் அமைந்திருக்கிற எல்லைக்குள் உள்ள பிள்ளைகள் அந்த பாடசாலைகளுக்குத்தான் போக வேண்டும். அவர்கள் குடியிருக்கும் எல்லைக்கு அப்பால் உள்ள பாடசாலைகளுக்குப் போக விரும்பினால், மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் போவதற்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று. மிகவும் குறைவான தொகையினருக்கே அத்தகைய சாத்தியம் கிடைக்கும்.

அதேபோன்று 10-ம் தரத்திலேயும் ஒரு பரீட்சை வைக்கிறார்கள். அந்தப் பரீட்சையிலே ஆங்கிலத்திலே சித்தி அடையாவிட்டால் அவர்களுக்கு, சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். ஆகவே, ஓரளவுக்கு இவை மூலமாக  தரத்தையும் அறியக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இங்கிலாந்திலோ, இலங்கையிலோ பல்கலைக் கழகத்திற்குள் புகுவதற்கு, பரீட்சை வைக்கிறார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை. இரண்டாம் நிலைப்பாடசாலைக்கும் பல்கலைக் கழகத்துக்குமிடையே அதிக இடைவெளி உள்ளது . அதனை நிரப்புதற்கு மாணவர்கள் பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டி உள்ளது என்பது மாணவர்கள் அபிப்பிராயம்.

கேள்வி: கனடாவில்  தனியார் பாடசாலைகளுக்கு  ஒன்று, அரசுப் பாடசாலைகளுக்கு ஒன்று என்று தனித்தனியாக  பாடத் திட்டங்கள் இருக்கின்றனவா?

பதில்: அங்கே தனியார் பாடசாலைகளும் இருக்கின்றன, அரசுப் பாடசாலைகளும் இருக்கின்றன. ரொறன்ரோவைப் பொறுத்த மட்டில். கத்தோலிக்கப் பாடசாலைகள், அரசாங்கப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என்று இருக்கின்றன. கத்தோலிக்கப் பாடசாலைகளில் சமய பாடம் கட்டாயமான பாடமாகப் போதிக்கப்படுகின்றது. அரசாங்கப் பாடசாலைகளில் சமயபாடம் போதிக்கப்படுவதில்லை. கத்தோலிக்கப் பாடசாலைகளில் சமய பாடம் போதிக்கப்படுவதால் ஏற்கனவே கத்தோலிக்கப் பிள்ளைகள்தான் அந்தப் பாடசாலைகளுக்குப் போய்க் கொண்டு இருப்பார்கள். ஆனால், இப்போது ஏனைய சமூகத்தாரரையும் அந்தப் பாடசாலைகளில் சேர்க்கிறார்கள். கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு சமய பாடம் கற்பிக்கப்படும் போது, இவர்களுக்குப் பொதுவான வேறு விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.  ஓரளவுக்கு கத்தோலிக்கப் பாடசாலைகளில் ஒழுங்கு கட்டுப்பாடு இருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை அங்கே அனுப்புகிறார்கள்.

தனியார் பாடசாலைகளைப் பொறுத்தவரையிலே நிறைய இருக்கின்றன. அதிலேயும் இரண்டு விதமாக இருக்கின்றன. ஒன்று,  தனியார் பாடசாலைகள் அரசாங்கத்தாலே அங்கீகரிக்கப்பட்டவை. இன்னொன்று, டியூட்டோரியல் பாடசாலைகள். அந்தப் பாடசாலைகளிலும் மாணவர்கள் கற்கலாம்.  அவர்கள், மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து சில சமயங்களில் ஏமாற்றுகிற மாதிரி நடக்கிறார்கள் என்ற குறைபாடுகள் உண்டு.

சென்ற ஆண்டு இரண்டு மூன்று பாடசாலைகளில் பத்திரிகையாளர்கள் மாணவர்கள் போல போலியாகச் சென்று அதனை சோதித்துப் பார்த்தபோது, அங்கு பிள்ளைகளுக்கு தகுதி இல்லாமலேயே சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு  நிரூபணமாயிற்று. அதுபோன்றும் நடைபெறுவது உண்டு. இக்காரணங்ளால் எமது நாட்டிலேயோ, இந்தியாவிலோ இல்லாத அளவுக்கு இங்கே பல்கலைக்கழகம் புகுந்த பின்னர் இடையில் விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
நன்றி: காக்கைச் சிறகினிலே யூன் 2013 மாத இதழ் 

தொடரும்....
இவரது நேர்காணல் பகுதி2 இனைக் காண பின்வரும் இணைப்பில் சொடுக்குக:

நேர்காணல் : கல்வியாளர் பொ.கனகசபாபதி - பகுதி – 02


No comments:

Post a Comment