01.
தனித்துவமான நீட்சித்தொடர் கொண்ட பண்பாட்டு வரலாற்றை தமிழ் எம்மிடம் கையளித்துச் சென்றதொரு மகத்தான நன்நாள்தான் தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒருநாள்.
புலம் பெயர்வாழ்வில் ‘நான் யார்’? - என்ற கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் முக்கிய கேள்வியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாம் வாழும் பல்தேசிய இனக் குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர்.
இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும்.
அதுமட்டுமல்லாது, சமாந்தரமாக எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு.
கலை- கலாச்சார – பண்பாட்டு நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு சிறப்பாக இடமளிக்கின்றன. புலம்பெயர்வு வாழ்வில் இத்தகைய நிகழ்வுகளை செயற்படுத்தும் முயற்சியில் வெளிப்படதொரு அரங்கநிகழ்வுதான் ‘தைப்பொங்கல்’ நாள் நிகழ்வு.
நீண்டதொரு தொடரான பண்பாட்டு மரபுடைய இந்நிகழ்வு இன்றைய நமது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ எனப் பரிணமித்துள்ளது.
02.
இருபது ஆண்டுகளைக் கடந்து செல்லும் எனது புலம் பெயர்வு வாழ்க்கையில், இன்றைய காலை கொஞ்சம் வித்தியாசமான மனப் பதைபதைப்புடனே புலர்ந்தது.
சாளர வழியாகப் புலப்பட்ட காட்சி; வெள்ளையர் நாடு என்பதைத் தெளிவாகக் காட்டும் வெண்மை வெளியாக போர்த்திருந்தது அடர்த்தியான உறை பனி.
இத்தருணங்களில் சூரியனில்லாது பரவி விசிறித் தெறிக்கும் ஒளியின் பிரகாசமென்பது கவித்துவமானது. ஒளி அலைகளின் பரவல் தொடர்பான ஐயன்டீன் தத்துவத்தை நிறுவியவாறு புன்னகைக்கும்.
இங்கு பிறந்து எம்மோடு வாழத்தலைப்பட்டுள்ள எமது இரு மகள்களும் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். இவர்களிருவரும், தம் வாழ்வில் முதன் முறையாகப் பொங்கல் காட்சியைப் பார்க்கப் போகிறார்கள். ஆனால் எனது துணைவியின் முகத்தில் மட்டும் கேள்வி உறைந்திருந்தது.
« இப்படியான உறை பனி வேளையில் பொங்கல் நடக்குமா? » அவளின் மனதில் ஓடும் வினா சின்னத் திரை காட்சியில் வரும் நினைவொலியாக எனது மண்டையை அடைந்தது ஆச்சரியம்தான்.
நாம் இருப்பது பாரிசின் தென் கோடி, நிகழ்வு நடைபெறுமிடம் பாரிசின் வடக்கில் அமைந்ததொரு நகரம். என்னையும் அறியாது கைத் தொலைபேசி எண்களை விரல் தடவ தொடர்பும் கிடைத்தது.
« நிகழ்வு எந்தவிமான இயற்கைச் சூழலிலும் நடைபெறும்! » உறுதிபட மறுபக்கத்திருந்து ஒலித்த தோழமையின் குரல் அந்தக் கால வாலிப வயதுப் பயணத்தின் நினைவுகளுடன் என்னைச் சங்கமித்தது.
எனது முகத்தில் வெளிப்பட்ட தெளிவைக் கண்ட துணைவி மகிழ்வுடன் எழுந்திருக்க பிள்ளைகள் துள்ளிக் குதித்தார்கள்.
இங்குள்ள சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் பனியில் விளையாடுவதென்பது கொள்ளை ஆசை. ஒரு வழியாகத் திடலை அடைந்தபோது பொங்கல் மேடையும், கோலச் சிரிப்பும் வரவேற்றது.
துப்பரவு செய்யப்பட்ட தரையில் தடம் பதித்தவாறு பந்தல் கொட்டகை அரங்கினுள் நுழைந்ததும் திகைத்துப் போனோம். கொள்ளை அழகாக உள்ளரங்கம் புறக் குளிர் உறைதலை அகற்றி மனதைக் கௌவிக் கொண்டது.
பிள்ளைகள் உற்சாகத்துடன் ஓடியவாறு நுழைந்தார்கள். எனது முகம் வட்டப் பாதையில் சுழன்றது. மின் பிறப்பாக்கியில் வந்த மின்சாரத்தால், ஒளிவீசிக் கொண்டிருந்தது குளாய் பல்ப்புகள் Tube lights.
இது எமது ஊர் கீற்றுக் கொட்டகை அரங்கை நினைவலையில் மீட்டிழுத்தது. அரங்க மேடைக்கு அருகாமையில் ஒலி ஒருங்கிணைப்பாளரும், ஒளிப்பட ஒருங்கிணைப்பளர்களும் பரபரப்பாக தமது இணைப்புகளைச் செய்து கொண்டிருந்தனர்.
மேடையின் பின் திரை 'தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்!" உன்ற விருது வாக்கியத்துடன் புலம் பெயர் தமிழர் திருநாள் - வள்ளுவராண்டு 2044 எனவாகக் காணுற்ற கம்பீரக் காட்சி முள்ளெலும்பை நிமிர்த்தி நடை பயிலவைத்தது. முகம் இயல்பாகவே முறுவலித்தது.
வெளித்திடல் நிகழ்வாக பொங்கலிடல், கோலமிடல் கட்புலச் சுவையூட்டலாக அமைந்திருக்க, உள்ளரங்கில் நிகழ்த்துக் கலை நிகழ்வுகள் மற்றும் தாமாகவே சுவைத்து அனுபவிக்கும் தமிழர் உணவுக் காட்சியும் கொண்டதாக செவிச்சுவையையும் நாச் சுவையூட்டலாகவும் அமைந்திருந்தது.
நிகழ்கலை அரங்கினை நிகழ்த்தி வருகை தந்தோரை மகிழ்வித்தனர் சிறுவர்கள். 'கண்டியரசன் பொங்கல்' என்ற சிறு கூத்தரங்கம், மற்றும் பொங்லிடல் அரங்கில் அமைந்த பாரம்பரிய தாள வாத்திய முழக்கத்துடனான பாடலிசை அரங்கம் தமிழர் திருநாள் கொண்டாட்டத்திற்கு பெருமை கூட்டியது.
தமிழர்களின் பாரம்பரிய பாடலிசை முழங்க சிறுவர் முதல் மூத்தோர் வரை சுற்றிச் சூழ நிற்க வெளித்திடலில் பொதுப் பொங்கலிடப்பட்டது.
பொங்கலுக்கான அரிசியை பானையிலிட்டு ஆரம்பித்துச் சிறப்பித்தவர் 50 ஆண்டு திருமண வாழ்வை நிறைவுடன் தொடரும் மூதாளர்களான சின்னராசா பாக்கியலட்சுமி தம்பதியினர். தொடர்ச்சியாக உள்ளரங்கில் பொங்கலோடு தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கலந்கொண்டிருந்தவர்கள் முக மலர்ச்சியுடன் காணப்பட்டதால் அரங்கம் மகிழ்வானதொரு ஒன்றுகூடலாகி அனைவரையும் மகிழ்வூட்டி சூழலில் தகித்துக் கொண்டிருந்த கடுமையான குளிரை மறக்கடிக்கச் செய்திருந்தது.
ஸ்தான் [Stains-93240] எனும் இந்நிகழ்வு நடந்த ஊரின் துணை நகரபிதா திரு அசடீன் தைபி [AZZEDINE TAIBI] சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர் திருநாள் ஒன்றுகூடல் உணர்வினை வாழ்த்தி அனைவருக்குமான புத்தாண்டு வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வினை பிரபல நடனக் கலைஞர் பிரேம் கோபால் அவர்கள் தனக்கேயுரிய தனித்துவ அழகுடன் பிரஞ்சு தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தொகுத்தளித்தார்.
வெண்பனியால் இறுகிப் போர்த்திய பாரீசின் தரையில் 'பொங்கலோ பொங்கல்..' எனும் கூட்டு குரலொலியுடன் பொங்கியது பொங்கல் பானை - நாம் என்ற பன்முகத் தன்மையுடன் தமிழர்களாக ஒருங்கிணையும் ஓர் உன்னதமான திருநாள் தமிழர் திருநாள் என்பதனை இம்முறையும் இந்நிகழ்வு பிரான்சில் பறைசாற்றியது சிலம்பு அமைப்பினரால் ஒழுங்கமைக்கட்ட 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2013'.
03.
« அழகான உள்ளரங்க அமைப்பை தொடர்ந்து மன ஈடுபாட்டுடன் செய்து வரும் தமிழர் பண்பாடு ஈடுபாட்டு 'அரங்கமைப்பாளர் சசி’ அவர்களை மனதால் இரு கைகளாலும் இணைத்துக் குலுக்கினேன். இப்படியான இளைஞர்கள்தான் அடுத்துவரும் தொடர் நிகழ்வுகளை பெரிய அளவில் நிகழ்த்தப் போகிறார்கள். » என்றார் உணர்ச்சி பெருக்குடன் நிகழ்வை ஒருங்கிணைத்த சிலம்பு அமைப்பாளர்.
« திருவள்ளுவரையும் திருக்குறளையும் பகன்றதொரு நன்னாளில், தொன்மையின் மீட்சியாத் தொடரும் 'வாழி பாடலாக’ அனைவருக்கும் நன்றி பகிர்ந்தது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது » என்றார் நண்பர் பரமேஸ்.
« இங்கு நடந்த கூத்தரங்கமும் பாடல் இசை அரங்கும் நன்றாகப் புரிந்தது » என்றார் கலந்து கொண்ட சிறுமி வாரகி.
நிகழ்வரங்கை அழகாகத் தொகுத்தளித்த பிறேம் கோபாலை பாராட்டினார் நண்பரும் தமிழ்ப் பற்றாளருமான கிளி என்ற பரராசசிங்கம்.
அழகான பொங்கல் கோலத்தைப் போட்டிருந்தனர் லட்சுமியும் யோகினியும், தனியாக தரை ஓவியக் கோலத்தை வரைந்திருந்தார் இளம் ஓவியரும் தமிழ்ப் பற்றாருமான வாசுகன்.
« தனிநாயகம் அடிகளாரை நினைவு கூர்ந்தது என்னை நெகிழ வைத்து யாழில் நடந்த தமிழாராட்சி மாநாட்டை நினைவூட்டியது » என்றார் தர்மரட்ணம்.
« சிறப்பாகச் சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பு மாலையாக நன்றாக இருந்தது » என்றார் இப்படியானதொரு நிகழ்வில் முன்முறையாகக் கலந்து கொண்ட சட்டப் பல்கலைக் கழக மாணவன் சசி.
பாரதியாக நிகழ்த்திக் காட்டிய சிறுவன் சோபி சந்திரமோகனின் ஆற்றலைப் பாராட்டினார் பிறேம் கோபால்.
அரிசி சுளகில் புடைப்பதையும், பானையில் விறகிட்டுப் பொங்குவதையும் இன்றுதான் முதற்தடவையாகப் பார்த்திருப்பதாகப் சிறாறார்கள் பலரும் சொன்னார்கள்.
தைப்பொங்கல் தொடர்பான பிரஞ்சு உரையை மனமுவந்து வழங்கி தனக்கிருக்கும் கோலம் போடும் ஆர்வத்தையும் சொன்னார் பாண்டிச்சேரி வழி வந்த புலம்பெயர்ந்த தமிழர் தலைமுறையினரான செல்வி ஜெசிமா மொகமட்.
"பொங்கல் நிகழ்வொன்றின் காட்சியை உணர்வுபூர்வமாகக் காணுற்று நெகிழ்ந்து போனேன். இப்படியான காட்சியை இதற்கு முன் மதுரையில் கண்டு மகிழ்ந்துவன் நான். புலம்பெயர் நாடொன்றில் உறைபனி படர்ந்த தரையில் நிகழ்ந்த இந்நிகழ்வைக் கண்டு நெகிழ்ந்து போனோம். பாடல் இசையால் இந்திரன் ஆனந்தன் குழுவினர் அனைவரையும் வசீகரித்து கிறங்கடித்துவிட்டார்கள்." என்றார் பாரீசில் விரி காசு அன் கறி வியாபார நிறுவன முகாமையாளர்களில் ஒருவரான தாஸ் அவர்கள்.
பரபரக்கும் பாரிசு நகர வாழ்வில் நிதானமாகக் கழிந்ததொரு நாளாக இனிக்கும் நினைவுகளுடன் குதூகலிக்கும் மனநிறைவோடு வீடு திரும்பினோம்.
- ராம் பாரிஸ்
[இத் தைப்பொங்கல் 7வது ஆண்டு நிகழ்வாக பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரின் வடக்கிலமைந்த புறநகர்ப்பகுதியான ஸ்தான் [Stains-93240] என்னும் ஊரில் 19.01.2013 அன்று சிலம்பு அமைப்பினால் நடாத்தப்பட்டது]
குறிப்பு:
இந்த ஆக்கத்தின் சுருக்கம் இந்தியாவிலிருந்து வெளியாகும் 'காக்கைச் சிறகினிலே' மாத இதழில் (பெப்பிரவரி 2013) வெளியாகியுள்ளது. Tweet
No comments:
Post a Comment