கடந்த 15.01.2012 அன்று வாரவிடுறையாக இருந்தபோதிலும், புலம்பெயர் தமிழர்கள் காலையிலேயே எழுந்து குளித்து தங்களுக்கான நன்னாளாகிய பொங்கலை தத்தம் வீட்டில் செய்யும் பரபரப்புடன் இருந்தனர். தொலைபேசி, மின்னஞ்சல், வானொலி, முகப்புப் புத்தகம் போன்ற பல்வேறு சமூகத் தளங்ளெல்லாம் பொங்கல் வாழ்த்தைப் பகிர்ந்த வண்ணமிருந்தன. தொலைக் காட்சிகளும் சிறப்பு நிகழ்வுகளால் போட்டி போட்டவண்ணம் ஈர்த்துக் கொண்டிருந்தன.
ஆனாலும், பிரான்சில் புதியதாய்த் தோற்றம் பெற்றிருந்த வேற்றுமையில் ஒருத்ததுவத் தமிழர்களாய்க் கூடிப் பொங்கலிடும் நிகழ்வரங்கமாகிய 'தமிழர் திருநாள் 2012' தனக்கே உரியதான தனித்துவத்துடன் எளிமையாக முற்றத்துப் பொங்கலாக பாரிசின் வடக்கிலமைந்த நகரமாகிய சென் டெனியில் சிலம்பு அமைப்பின் தலைவர் வீட்டு முற்றத்தில் ஒழுங்காகி இருந்தது. உறைபனிக் குளிரை எதிர் கொள்ளும் ஆடைகளுடன் குடும்பங்களாக வருகை தந்தோர் முற்றத்து வளாகத்திலும் வரவேற்பு அறையிலும் நிரம்பி இருந்தனர். குளிரை விரட்டப் படாது பட்ட சூரியனால் ஒளியை மட்டும் அள்ளிக் கொடுக்க முடிந்தது.
புதிய சந்ததியினர் பொறுப்பேற்கும் குறியீடாய் சிறார்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்தவுடன் நிகழ்வு மக்களரங்கமாக வருகை தந்தோர் அனைவரையும் ஒருங்கிணைத்துவிட்டது. அமைதி வணக்கத்துடன் பொங்கலிடல் ஆரம்பமாக உள்ளகக் காட்சி அரங்காக வைக்கப்பட்டிருந்த தமிழர் உணவுப் பலகாரங்கள் அனைவரையும் ஈர்த்தது. இதில் இருபது வகைகைக்கு மேற்பட்ட பலகாரங்கள் தமிழ் - பிரஞ்சுப் பெயர் விபரங்களுடன் தயாரித்தவர் பெயருடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிறார் முதல் பெரியவர்கள் வரையில் ஒவ்வொன்றையும் பார்த்துக் கேட்டு உண்டு சுவைத்தனர். வருகை தந்தோரே தங்களுக்குள் பணிகளை தாமாகவே பங்கிட்டு பங்கெடுத்ததானது மகிழ்வான நிகழ்வாக எல்லோலரயும் உற்சாகப்படுத்தியது.
பானையில் பொங்கல் பிரவாகமாகிப் பொங்கியபோது உடுக்கடியுடன் பொங்கலோ பொங்கல்கூவிப் பாடி அனைவரும் அகமகிழ்ந்தனர். பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்ட பின்னர் சின்னஞ் சிறு சிறார்களுக்கான 'அகரம் எழுதல்' நிகழ்வு தற்போது சிறப்பு தமிழ் இலக்கணப் பாடத்தை சேர்போன் பல்கலையில் கற்பிக்கும் ஆசிரியை திருமதி சுமத்திரி பிரான்சிஸ் அவர்களால் மதிப்புடன் நிகழ்த்தப்பட்டது. வழமைபோலவே சிறார்களால் தாளில் எழுதப்பட்ட எழுத்துடனான பிரதி அவர்களது புகைப்படங்களுடன் சட்டகமிப்பட்டு அரங்கிலேயே வழங்கப்பட்டது.
தமிழிசைப் பாடகர்கள் இந்திரன், நாதன், ஆனந்தன் குழுவினர் உடுகடியுடன் பொங்கல் பாடல்கள் பாடி நிறைவாக வாழி பாடல் பாடி நிகழ்வை முடித்து வைத்தனர். இந் நிகழ்வரங்கை சிலம்பு அமைப்பின் செயலாளர் முகுந்தன் நெறிப்படுத்தி நடாத்தினார். பிரான்சில் தமிழர் திருநாள் நிகழ்வு உருவாக்க மூலவர்களில் ஒருவரான கிபி அரவிந்தனால் சிறப்புரை வழங்கப்பட்டது. இதில், 'கனடாவில் இரு நகர சபைகள் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நாட்களாக ஜனவரி 13, 14, 15 ஆகிய நாட்களை பிரகடனப்படுத்தியதை முன்னுதாரணமாகக் கொண்டு புலம் பெயர் தேசமெங்கிலும் எதிர்காலத்தில் பொங்கல் வரும் வாரத்தை தமிழர்களின் பண்பாட்டு வாரமாக்கி தமிழாலும், தமிழர்களின் தொன்ம நினைவு நீட்சியாலும் ஒருங்கிணையும் நிகழ்வுகள் வலுப்பட அனைவரும் பாடுபடவேண்டும் குறிப்பாக, தற்போது நகரசபைகளில் பிரதிநிதித்துவம்பெற்றுள்ள தமிழ்ப்பிரதிநிதிகள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்' எனக்குறிப்பிட்டார்.
பொது அரங்கம் கிடையாமையால், முற்றத்துப்பொங்கலாக நடைபெற்றிருந்த இந்நிகழ்வு வருகை தந்திருந்த அனைவரையம் நெகிழ்ச்சியுடன் ஒருங்கிணைத்திருந்தது. வருகை தந்தோரில் சிலர், ஆங்காங்கே தமக்கு வேண்டியவர்களுக்கு கைகுலுக்கி வெற்றிலையில் சிறப்பு கைப் பரிசையும் வழங்கினர்.
No comments:
Post a Comment