Thursday, 26 March 2015

பாரீசில் நூல் வெளியீடு « ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் » ‘Le messager de l'hiver’

செய்திச் சரம் 29
அறிமுகம் : பாரீசு நகரில் புலம்பெயர் ஈழத்துக் கவிஞன் கிபி அரவிந்தன் அவர்களது பிரஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான நூல் வெளியீடு

பிரெஞ்சு மொழியில் புலம்பெயர் ஈழத் தமிழ்க் கவிதைகள் : நூல் வெளியீடு
« ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் »
‘Le messager de l'hiver’


-முகிலன் - பாரிஸ்

ஈழத்தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழியிலான ‘Le messager de l'hiver’ - (‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்) மொழிபெயர்ப்பு தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 03.06.2014 செய்வாய் அன்று பாரீசு மையத்திலமைந்த La Route des Indes, 7 rue d'Argenteuil 75001 Paris  சிற்றரங்கில் எளிமையுடன் அரங்கு நிறைந்த வாசகர்களின் முன்னே டிடியே சான்ட்மான் (Didier Sandman) தலைமைதாங்க, கவிஞர் கிபி அரவிந்தன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் . முருகையன் பங்கேற்க நிகழ்வு சிறப்பாக நடந்தது.

தமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்த கி.பி.அரவிந்தனின் ஏற்கனவே தமிழில் பிரசுரமானவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலைறிவநெவ்(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1980களின் பின் இலங்கையின் இனவொடுக்கல் துயரத்தின் சாட்சிகளாக சிதறுண்டு புலம்பெயர் ஈழத் தமிழர்களாகப் பல்வேறு நாடுகளில் குடியேறியவர்களது முதற் தலைமுறையினரது படைப்புகள் ஆங்கிலமில்லாது உலகளாவிய மொழிகளில் அவர்களது காலகட்டத்திலேயே மொழிபெயர்ப்பாவது சிறப்பானதொரு தடமிடுதலாகவே கவனம் பெறுகிறது.  இந்த நூலின் அட்டைப்படத்தை தமிழ்நாட்டின் புகழ்மிக்க ஓவியர்களில் ஒருவரானடிராஸ்கி மருது வரைந்துள்ளமை சிறப்பம்சமாகும்

பாரீசில் நாம் புலம்பெயர்ந்த 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டமௌனம்இதழ் வாயிலாகக் கிட்டிய அருமையான நண்பரும், மனியத நேயமிக்க தமிழ் ஆர்வலரும்,  2000களின் பின்னர் பாரீசில் தமிழர்களது தனித்துவமான ஒன்றுகூடல் நிகழ்வாக அமையும்தமிழர் திருநாள்நிகழ்வரங்கின் மையக் கருத்துரு மாலையைக் கோர்க்கப் பணியாற்றிவரும், இந்நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருமான அப்பாசாமி முருகையன் அவர்களுடன் உரையாடிய தொகுப்பைப் பதிவிடுகிறேன். இது ‘காக்கைச் சிறகினிலேஇதழ் வாசகர்களுக்காக எழுதப்பட்டது. இதனை புலம்பெயர் வாழ்வின் நீட்சியில் இணையவலையில் பதிவேற்றம் செய்ய எனக்கு 8 மாதங்கள் பிடித்திருக்கிறது. 
ஆனால் இந்த இடைப்பட காலத்தில்,
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334 - நிலையாமை) 
என வலியுத்தியவாறு காலம் கடந்துவிட்டது. 
எனது ஆருயிர்த் தோழர் சுந்தர் என்ற கவிஞர் கிபி அரவிந்தன் சென்ற 08.03.2015 அன்று பிரான்சில் காலமாகிவிட்ட நிலையில் பலவற்றையும் அசைமீட்பவராக இருப்பவர்களில் நானும் ஒருவனாக, கவிஞனின் ஒரு கனவு நினைவாகிய இத்தருணத்தைப் பகிர்கிறேன்.

00000 000000


01. உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றி செயலில் இறங்க உந்திய காரணிகள் என்ன?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக பாரிஸ் பல்கலைக்கழகம்-8 இல், தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றிய இளநிலை முதுநிலை மாணவர்களுக்கான ஓர் அறிமுக பாடத்தை நடத்தி வருகின்றேன். இப்பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்புக் கூறுகள்
முதலாவதாக, தமிழ் இலக்கிய தரவுகளை மையமாக / கருப்பொருளாகக் கொண்டு மொழி பண்பாட்டை படிப்பித்தல்.

இரண்டவதாக, புலம்பெயர் தமிழரின் மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்விற்கு வழிவகுத்தல்.

இலக்கியதரவுகள் மூலம் மொழியையும் பண்பாட்டையும் பயிற்றுவித்தலில் (பயிற்றுமுறை) மொழிபெயர்ப்பு (Pedagogical translaltion) அத்தியாவசியமான கருவியாகும். மேலும் புலம்பெயர் இலக்கியத் தரவுகள் இல்லாமல் புலம்பெயர்த்தமிழர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளமுடியாது. இந்த இரண்டு அடிப்படைக் காரணங்களும், என்னுடைய பாடத்திட்டத்தின்கண் பல தமிழ் - ஃபிரஞ்சு மொழிபெயர்ப்பு பட்டறைகளை திட்டமிட்டு நடத்த வழிவகுத்தன. இப்பட்டறைகளில் கலந்து கொண்டோரில் 95 விழுக்காடு யாழ்ப்பாணத்தமிழ் மக்களே.

இக்காலகட்டத்தில் 1980-2000 களில் பாரிசில் யாழ்ப்பாணத்த்மிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் பணி மிக்க உச்ச கட்டத்தில் இருந்ததுஇச்சூழ்நிலையில் என்னுடைய ஆராய்ச்சிப் பணி குறித்து கி. பி. அரவிந்தன் போன்ற சில எழுத்தாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. கி. பி. அரவிந்தனின் கவிதைகள் பலவற்றை இந்த பட்டறைகளிலும் மேலும் என்னுடைய பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மொழி பண்பாடு பற்றிய ஆய்வு விளக்கங்களுக்காகவும் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சிக்காகவும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. இச்சூழல்களே கி. பி. அரவிந்தனின் கவிதைகளை மொழிபெயர்க்க வித்திட்டன.

02. புலம்பெயர்ச்சூழலில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

புலம்பெயர்ச்சூழலில், மூன்றாவது தலை முறைக்குப் பின், முன்னோர் மொழியை தக்கவைத்துக் கொள்வது என்பது படிப்படியாக குறைந்து ஒரு காலகட்டத்தில் மறைந்து விடும் என்பது ஒரு கண்டறிந்த கருத்து. இவ்வாறன மொழி பண்பாட்டு இழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக புலம்பெயர்ச் சமுதாயங்கள் பல யுக்திகளை கையாளுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் மொழிபெயர்ப்பு முயற்சியும். ஆனால் மற்ற முயற்சிகளோடு ஒப்பிடும்போது மொழிபெயர்ப்பு சிறிது சிக்கலானது. இருமொழியப் பண்பாட்டினை உள்வாங்கி செயல்படவேண்டியுள்ளதால், பல புலம்பெயர்ச் சூழல்களுள் இருமொழியத்தேர்ச்சி பெறும் முன்பே மூதாதையர் மொழிப் பண்பாட்டு இழப்பு காலூன்றிவிடுகின்றது. தமிழ் மொழி இலக்கியங்களை ஃபிரஞ்சு, ஆங்கிலம் போன்ற தாங்கள் வாழுகின்ற பகுதியின் முக்கியமான மொழிகளில் மொழிபெயர்ப்பது பின் வரும் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மிகவும் பயன் உள்ளதாகவும் கருத்தில் கொள்ளவேண்டும். 1960-70 களில் மலேசியத் தமிழரிடையே தமிழ் மொழிப்பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் மற்றும் மொழி உணர்வு ஏற்படுவதற்கும் தமிழ் ஆங்கில இருமொழியில் தேர்ச்சியும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் வித்திட்ட நிகழ்வை சிறந்த முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.



03. இந்த மொழிபெயர்ப்பின் போது தாங்கள் எதிர்கொண்ட சவால்களை கூறுவீர்களா?

முதலில், இம்மொழிபெயர்ப்பு ஒரு கூட்டுப்பணி, பலருடைய ஒத்துழைப்பின் பலனாகத்தான் செயல் படுத்தி முடிக்க முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு பல மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பே நடந்தேறியுள்ளன. இந்த எங்களுடைய முயற்சி புதிதல்ல ஆனால் நோக்கம்தான் சிறிது வேறுபட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு தமிழ் இளைய தலைமுறையினருக்கும் ஃபிரஞ்சு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய இலக்கு. அடுத்து, அரவிந்தனின் கவிதைகள் புலம்பெயர் தமிழ் இலக்கிய வகையைச் சார்ந்தன. மொழிபெயர்ப்பில் சவால்கள் ஏற்படுவது புதிதல்ல ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் எல்லாம் எங்களுடைய இந்த இலக்குகளையும் மொழிபெயர்க்க்ப்பட்ட கவிதை வகையையும் சார்ந்ததே.

அரவிந்தன் மூன்று கவிதைத் தொகுப்புகளில் தொண்ணூறு கவிதைகளை வெளியிட்டுள்ளார். முதலாவதாக எதிர்கொண்ட கேள்வி, இத்தொண்ணூறு கவிதைகளில் எத்தனைக் கவிதைகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என்பதுதான். எங்களுடைய இரு இலக்குகளையும் திருப்தி படுத்த வேண்டும் அதே வேளையில் கவிஞரின் உள்ளக்கிடக்கைகளையும் / எண்ணங்களையும் பண்பாட்டு தாக்கங்களை, குறுக்கீடுகளைத் தாண்டி பொருள்மயக்கமின்றி மொழிமாற்றம் செய்யவேண்டும். நானே தனித்து பல முறையும் திரு அரவிந்தனுடன் கலந்து பலமுறையும் ஒவ்வொரு கவிதையாக படித்து பரிசீலனை செய்து பண்பாட்டுப் புரிதல்களில் சிக்கல் இல்லாத அல்லது சிக்கல்கள் மிகக் குறைவாக உள்ள கவிதைகளை முதலில் தெரிந்தெடுத்தோம். பின்னர் அவற்றுள் பண்பாட்டு முரண்பாடுகள் கொண்ட சாதியம் மற்றும் மதம் சார்ந்த கருத்துக்களை மொழிமாற்றம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. அடுத்து இலங்கைத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் குறித்த கருத்துக்களை மிகத்துல்லியமாக அரசியல் தஞ்சம் பெற்ற ஒரு தனி மனிதனின், தந்தையின், சுதந்திர போராட்ட வீரனின் நிலையில் நின்று எவ்வாறு மொழிபெயர்ப்பது? இக்கேள்விகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மொழிபெயர்ப்பு என்பது ஒரு மிக கடினமான மீட்டுருவாக்க பயிற்சி. இப்பயிற்சியை முடிந்த அளவு வெற்றியுடன் முடிக்க பலருடைய ஒத்துழைப்பும் தேவை என்பது தெளிவு.


04. இம் மொழிபெயர்ப்பின் போது இக்கவிதைகள் ஊடாக நீங்கள் பெற்ற அனுபவங்கள் என்ன?

யாழ்ப்பானத் தமிழர் பற்றியும் அவர்களது தமிழ் மொழியின் தனித் தன்மைகள் பற்றியும் எவ்வளவோ படித்திருந்தாலும் அரவிந்தனின் கவிதைகள் மூலம் தெரிந்துகொண்டவை அளவிலடங்காது. அவர்களது சமூக அமைப்பு, பண்பாட்டு விதிகள், சாதி சமயக் கோட்பாடுகள், உரிமைப் பறிக்கப்பட்டோரின் ஆற்றாமை, காந்தி அல்லது அரவிந்தர் போன்ற ஆன்மீக வாதிகள் போராளிகளாக அவதரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகின்றது எனும் பல வேறுபட்ட கருத்துக்களை அடக்கி புனையப்பட்டுள்ள அவரது கவிதைகளை புரிந்துகொள்ள முயலுகின்ற எல்லோரும் என்னைப்போல் திக்குமுக்காடித்தான் போக வேண்டியிருக்கும். உள்ளுக்குள் வீசும் பெரும் புயலை ஆற்றுப் படுத்தி அதனை ஆக்க சக்தியாக மாற்ற கவிஞனாக இருக்கவேண்டும் என்னும் பாடத்தை புகட்டுவதாக இருந்தது இம்மொழிபெயர்ப்பு அனுபவம்.

திரு அரவிந்தனின் கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தாய் நாட்டைத்துறந்த சிறுபான்மைக் குழுவைச்சேர்ந்த ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றன. இக்கவிதைகளில் எல்லாம் அங்கும் இங்குமாக என்னுடைய அனுபவங்களில் பலவற்றை அடையாளம் கண்டேன்.
அரவிந்தனுடைய கவிதைகள் அவருடைய தனிப்பட்ட  அனுபவங்களின் அடிப்படையில் இருப்பினும் புலம் பெயர்ந்த ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் ஏதோ ஒருவகையில் சித்தரிப்பதாக உள்ளன. இக்கவிதைகளை என்னுடைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது ஒவ்வொருவரும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களில் ஏதோ ஒரு சில அரவிந்தனது கவிதைகளில் பிரதிபலிப்பதாகக் கூறினர். அரவிந்தனுடைய கவிதைகள் எல்லைக் கடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவை அவர் உலகுக்கு விடுத்த தூது என்று கொள்வது மிகையாகாது.
00000 0000000

நூல் வெளியீட்டு அரங்கத்தில் 03.06.2014 அன்று மாலை நிகழ்வில் பங்கெடுத்த வேளையில் மனந்திறந்த பல்லின உரையாடல்களும் அதன்பின்னரான தெறிப்புகளுமான கருத்து மஞ்சரி :



      « தமிழ் மொழியின் வரிவடிவத்தைக் கண்டு வட்டெழுத்து அழகை இரசித்திருக்கிறேன். ஆனால் இன்று கவிதை வாசிப்பில் அம்மொழி எனது செவிகளில் இனிமையான உணர்வைத் தந்ததை மனந்திறந்து மகிழ்கிறேன். » இந்நிகழ்வைத் தலைமையேற்று நிகழ்த்தியவரும் பிரஞ்சுக் கவிதைகளை வாசித்தவரும் La Route des Indes (இந்தியாவுக்கான ஒரு வழிப் பாதை) நிறுவனப் பொறுப்பாளருமான டிடியே சான்ட்மான் (Didier Sandman)
« அருமையாதொரு பணியை நிகழ்த்தியிருக்கிறார்கள். திசைகள் கவிதை என்னைப் பாதித்தது - அம்மா சொல்லும் வார்த்தைகளால் துவண்டுபோனேன். இக்கவிதைகளை நான் சிங்கள மொழியில் வெளிக் கொணர முயலுவேன் » என்றார் மகிழ்வுடன் இந்கழ்வில் கலந்துகொண்ட கல்வியாளர் ஒஸ்மான்.
      « 35 ஆண்டுகளாக இங்கு வாழும் ஒரு சமூகத்தினது எண்ணங்களை அவர்களது வாழ்வியலை இதிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது பிரதிபலித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். இப்போது நாம் உயிர் வாழ்தல் நிலையிலேயே சாதாரண உயிரிகளாக வாழ்கிறோம் அவ்வளவுதான் ! » எனக் கருத்தளித்தார் கிபி அரவிந்தன்.
      « சண்டை முடிந்திருந்தாலும் பிரச்சனைகள் தீராத ஈழத் தமிழரின் அவல வாழ்வை நினைக்கும்போது வேதனையாகவே இருக்கிறது. எல்லாமே விழலுக்கிறைத்த நீராகிவிட்ட கதைகாகிப் போனது சோகம்தான் ! » என்ற வேதனையைப் பகிர்ந்தார் டெல்கி பல்கலையில் பணியாற்றும் பிரஞ்சு மொழிப் பேராசிரியை.
« பிரஞ்சிலும் பின் தமிழிலும் கவிதைகள் வாசித்ததால் மிகவும் நன்றாக இருந்தது நன்கு புரிந்தது. » இங்கு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவன் ஜோனாஸ்.
      « நாம் வந்த காலத்தில் எமக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜெரார் (தற்போது யாழ் பிரெஞ்சு நட்புறவுச் சங்கத் தலைவராக இருக்கிறார்) பிரெஞ்சு பல்கலைக்கழகத் தமிழ் மொழிப் பொறுப்பாளர் எலிசபேத் உதயணன் என பல பிரமுகர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். இந்த கவிதை நூல் வெளியீட்டில் நான்கு கவிதைகள் மட்டுமதான் பிரஞ்சிலும் தமிழிலும் வாசிக்கப்பட்டன. ஆனால் பின்னரான உரையாடல் சாதியம், அகதி வாழ்வு, ஈழத்தின் வாழ்நிலையென முழுமையான அரசியல் கலந்துரையாடலாக முற்றிலும் வித்தியாசமாக சிறப்பாக இயல்பாக இருந்தது. » என்றார் மலர்ந்த முகத்துடன் எமது நண்பர் கர்ணன்.
« காணொலி கண்டபோது புளங்காகிதமடைந்தேன். அரங்கு நிறைந்த பல்லின - பல்துறை வாசகர்கள் குழுமியிருக்க நோயுற்ற நிலையிலும் என் தோழனது கவிதை நூல் வெளிவந்த காட்சி மிக அருமையாக இருந்தது. நான் அவ்விடத்தில் இல்லாதது வேதனையளித்து. மிகவும் பயனுள்ள செயலை நண்பர் முருகையன் அவர்கள் ஆற்றியுள்ளார்கள். இதை நாம் பாராட்டி ஊக்கப்படுத்தவேண்டும் !! » தொலைபேசி வாயிலாக மலேசியாவிலிருந்து தோழர் வரன்.
« இப்படியொரு நிகழ்வில் உங்களுடைய ஆக்கள் (ஈழத் தமிழர்கள்) எத்தனை பேர் வந்தார்கள் ? நீங்களும் உங்களுடைய செயற்பாடும்…. » என உணர்ச்சிமேலிட்ட முருகையன் என்னை உற்று நோக்க நான் வாயடைத்தவனாகினேன்.
« இம்முறை பிரெஞ்சுப் பொதுப் பரீட்சையில் (BAC) தோற்றவிருக்கும் எனது மகளுக்கு இந்நூல் பயனாகும். இந்த வருடம் கவிதைதான் பிரதானமாக இடம் பெறப்போவதால் நன்றாக வாசிப்பாள் » என்றார் நண்பர் நேசன்.

  கிபி அரவிந்தனின் துணைவி பணியாற்றும் வீட்டுக்காரி நூலின் பிரதியொன்றைப் பெற்ற இருவாரம் கழித்து « நாங்களும் 1956-ஆம் ஆண்டு எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டு இங்குவந்து குடியேறிய யூதர்கள்தான். அங்கு பெரும் முதலாளியாகச் செல்வச் செழிப்போடு வாழ்ந்த குடும்பக் கதைகளை எனது அம்மா சொல்லிச் சொல்லி அழுவா….. இங்கு பெற்றோருடன் நான் சிறுமியாக வெறும் கைகளுடன் வந்திருந்தநிலை இன்றும் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது. அகதி வாழ்வு பற்றிய கிபி அரவிந்தனின் கவிதைகளை வாசித்தபோது எனது கடந்தகால நினைவுகள் மேலெழ திக்குமுக்காடிப் போனேன். என்ன அறியாது கலங்கினேன். எங்களது வாழ்விலும் அவர் பதிந்த பல விடையங்கள் ஆச்சரியமாக ஒத்து போகின்றன. » என நிதானமாக இரு கரங்களைப் பற்றியவாறு நெகிழ்ந்தார்.








நிறைவாக புலம்பெயர்வு நாட்டு வழமையின்படி நொறுக்குத் தீனியுடன் பானங்கள் பருக அரங்கம் களைகட்டியது. நூல் வெளியீட்டு அரங்கம் தாம் பெற்ற நூலில் கவிஞரதும் மொழிபெயர்ப்பாளரதும் கையொப்பத்தைப் பெறும் பரபரப்பில் இருந்தது. இன்றைய நிகழ்வரங்கில் பரவிய பிரஞ்சுக் கவிதையும், தமிழ் கவிதையும் கொடுத்த தாக்கத்தை பலரும் வெளிப்படையாகவே கூறினர். செவிவழியாக முதன் முதலாக தாம் கேட்டகவித் தமிழ்மிகவும் இனிமையாக இருந்தது என பல்லினித்தவர் மகிழ்வுடன் தெரிவித்து கிபி அரவிந்தனைக் கரம் குலுக்கின காட்சி காணுற்று கிறங்கிப்போனேன். « யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது » என அன்றே மகாகவி பாரதி பொழிந்த கவிதைவரிகளின் ஞாபகத்தடம் தரிசனமாக….. பாரீசு நகர வீதியில் மிதந்தவாறு வீடு திரும்பினேன்.
0000000000
கனவின் மீதி தொகுப்பின் முன்னுரையில் பேராசான் கா. சிவத்தம்பி அவர்கள் 1999 இல் குறிப்பிட்ட வாசகம்,
« கி.பி. அரவிந்தனுக்கு மாத்திரம் நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் நிச்சயம் விரியும். ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். »

«
 ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலக இலக்கிய வாசற்கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது.  'கனவின் மீதி' ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. எங்கள் அண்மைக்கால வரலாற்று அனுபவங்களுக்கான உதாரணம். சமூக அனுபவங்கள் ஆழ, அகலமாகி கீழ்நோக்கிச் சென்று உயிர்க்குலையைப் பிடிக்கும் பொழுது மறக்கமுடியாத கலை இலக்கியங்கள் தோன்றும். இது உலகப் பொதுவிதி. ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை...? »

« இது ஒரு முக்கிய கட்டம். ஈழத்துத் தமிழ் அகதி என்கின்ற நிலையிலிருந்து அப்பாலே போய் ஒரு சர்வதேசியத்திற்குச் செல்லுகின்ற தன்மை இதில் காணப்படுகிறது. ஈழத்து அகதி வாழ்க்கையின் பிரக்ஞைநிலை இன்னொரு தளத்திற்கு மாறுகிறது. இதனை மற்றைய கவிஞர்களும் பேசியுள்ளனர். ஆனால் இந்தத் துன்பங்களுக்கு அப்பால் உள்ள, இவற்றின் காலான சர்வதேச முதலாளித்துவம் அரவிந்தன் கைக்குள் பிடிபட்டு விடுகிறது. "அதிசயம் வளரும்" எனும் கவிதையில் அரவிந்தன் அந்த உண்மையைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார். ஈழத்துத் தமிழ்க் கவிதை பிரக்ஞை பூர்வமாக சர்வதேசியத்திற்குச் செல்கிறது. »

எனும் வாக்கியங்கள் நினைவுக் குமிழிகளாக மேலெழுகின்றன.
00000 000000


பின்னிணைப்பு :
வெளியீட்டு நிகழ்வின் காணொலி : https://www.youtube.com/watch?v=gHYD1DNyOAs




நூலைப் பெற்றுக் கொள்ள நுழைக 



நூல் வெளியீட்டு நிறுவனம் Riveneuve Editions, 75 Rue de Gergovie, 75014 Paris, France



இணைப்பு : முகிலன் பாரீசு 26.03.2015


No comments:

Post a Comment