நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1
பகுதி -1
உள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய உத்தமர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்
(Rev. Fr. T. M.F. Long, OMI 1936 – 1954)
(Rev. Fr. T. M.F. Long, OMI 1936 – 1954)
யாழ் சம்பத்திரிசியார் கல்லூரி 1850ம் ஆண்டு ஆரம்பமானது. இதன் முதல் அதிபராக அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த திரு Patrick Foy அவர்கள் தான் கடமை ஆற்றினார். அவர்கள் கடமையாற்றியதைத் தொடர்ந்து அயர்லாந்தினைச் சேர்ந்த பல குருமார்களும் சங்கைக்குரிய சகோதரர்களும் வருகை தந்தனர். இவர்களது ஆக்கத்தாலும் ஊக்கத்தாலும் இக்கல்லூரி படிப்படியாக உயர்ந்து யாழ் மக்கள் பெரும் பயன் பெற வைத்தது. இலங்கையின் ஏனைய பாகங்களிருந்தும் மாணவர் தமது கல்வியை வளம் படுத்துற்காக தேடிவரும் அளவினுக்குப் புகழ் பூத்த கல்லூரியாக வளர்ந்தது. இக்கல்லூரிக்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய பின்னர் நாட்டினை விட்டு வெளியேறிய கடைசி ஐரிஸ் பாதிரியார் அதிபர் T.M.F. லோங் அடிகளார் ஆகும். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சபையினால் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.
அருட் தந்தை லோங் அடிகளார் 22- 04- 1896ல் அயர்லாந்து தேசத்தின் Patrickswell எனும் நகரில் பிறந்தார். தனது இளம் வயது முதலே குருவாக மாறவேண்டும், பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற சீரிய கொள்கையுடன் வாழ்ந்த லோங் அடிகளார் அவர்கள் 1915ல் அமலமரித்தியாகிகள் (OMI) சபையினில் சேர்ந்து 1820ல் குருப் பட்டம் பெற்றார். குருப்பட்டம் பெற்ற சில மாதங்களிலேயே சேவையாற்றுதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டார். சம்பத்திரிசியார் கல்லூரியினுக்கு அப்பொழுது அதிபராக இருந்த அருட்தந்தை சார்ள்ஸ் மத்தியூஸ் அவர்களே லோங் அடிகளார் அவர்கள் இலங்கைக்கு, சிறப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருவதற்குக் காரணராயினார். லோங் அடிகளார் 1921 ஜனவரி மாதம் கல்லூரியில் ஆசிரியப் பொறுப்பேற்றதுடன் விளையாட்டுத் துறைக்கும் பொறுப்பேற்றார். 1923ல் லோங் அடிகளார் மீண்டும் இங்கிலாந்து சென்று தனது மேற்படிப்பினை கேம்பிறிட்ஜ் சர்வகலாசாலையில் முடித்துக் கொண்டு M.A பட்டதாரியாக திரும்பி வந்ததுடன் பாடசாலையினது அதிபர் பதவியையும் ஏற்றார். மிக்க இளம் வயதிலேயே அதிபர் பதவியை ஏற்ற அடிகளார் திறமையுடனும் சாமர்த்தியமாகவும் அப்பதவியை வகித்து பதவிக்கே பெருமை சேர்த்தார்.
அடிகளார் அதிபர் பதவி வகித்த காலத்தினை இலங்கை வரலாற்றினிலே இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு முன், இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் என, மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த மூன்று காலகட்டங்களிலும் நாட்டிலும் வெளியேயும் தனக்கு உள்ள தொடர்புகளின் மூலம் பெறக்கூடிய அத்தனை அனுகூலங்களையும் பெற்று தனது கல்லூரியினுக்கும் அது சார்ந்த யாழ் சமுதாயத்தின் உயர்ச்சிக்கும் பயன்படுவண்ணம் அடிகளார் மிக இலாவகமாகப் பிரயோகித்தார்.
சமரசம் உலாவும் இடமே:
அன்றைய யாழ்ப்பாணம் ஓரளவு பிற்போக்கான சமூகக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சமூகமாயிருந்தது என்பதை வெட்கத்துடன் சொல்லியே தீரவேண்டும். எமது சமூகத்தின் சாதிப் பாகுபாடு அதீத முன்னிலை வகித்த கேடுகெட்ட நிலையினை மாற்ற வேண்டும் எனத்தீவிரமாக செயல்பட்டவர் அடிகளார். இதனால் சமூகத்தால் ஒதுக்கிவிடப்பட்ட இனத்தவரின் பிள்ளைகளை பாடசாலையில் எந்த வித பாகுபாடுமின்றி எவ்விதமான பேதமும் காட்டாமல் அரவணைத்தார். எங்கெங்கு அச்சமூகத்தவருக்கு உதவ முடியுமோ அங்கங்கே துணிகரமாக உதவினார் இப்பெருந்தகையாளர். அங்கே சமரசம் உலாவியது. சமத்துவம் கோலோச்சியது.
சம்பத்திரிசியார் கல்லூரியில் அருட் தந்தை லோங் அடிகளாரால் ஆசிரிய சேவைக்குச் சேர்க்கப்பட்டவரும் பின்னாளில் விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகவும் இருந்து ஓய்வு பெற்று அண்மையில் அமரரான எனது அருமை நண்பர் திரு செல்வரத்தினம் இலங்கையன் அவர்கள், “நான் 1953 யூன் மாதம் இலண்டன் Bsc பட்டதாரிப் பரீட்சைக்குத் தோற்றி அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த பொழுது யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரிய வெற்றிடத்துக்கான விளம்பரத்தைக் கண்ணுற்று அதற்கு விண்ணப்பித்தேன். அதற்கான நேர்முகப் பரீட்சைக்குப் போயிருந்தேன். அன்று என்னை நேர்கண்டவர் அப்போது கல்லூரியின் அதிபராயிருந்த(Rector) அருட்தந்தை ரி.எம். எப். லோங் அவர்களே. அவரைக் கண்டதும் அவரின் உயர்ந்த பருத்த தோற்றம் பயமுறுத்தியது. ஒரு ஆஜானுபாகன் வீற்றிருந்ததைப் போன்ற தோற்றமளித்தார். அவர் ஒரு கண்டிப்பானவரும் மிக ஆளுமை உடையவருமாக இருப்பார் எனவும் கருதினேன். ஆனால் அவர் என்னை நேர்கண்ட பொழுது கேட்ட கேள்விகளின் தொனி எனக்கு மிக ஆறுதல் அளித்தது. 20 நிமிடங்கள் வரை இடம் பெற்ற நேர்காணலின் போது நான் ‘தாழ்த்தப்பட்ட’ என்று கூறப்படும் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறிய பொழுது, அது பற்றி நீர் பயப்படத் தேவையில்லை. அது பற்றி நாங்கள், அதாவது கல்லூரி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் என்று கூறிவிட்டு அலுவலகத்தில் நியமனக் கடிதம் பற்றி தலைமை லிகிதர் ஆகிய திரு. ஜேம்ஸ் அவர்களைக் காணும்படியும் பாடஅட்டவணை சம்பந்தமாக அதற்குப் பொறுப்பான உப அதிபர் அருட் தந்தை ஜோன் அவர்களைச் சந்திக்கும் படியும் பணித்தார். நான் விடுதிச் சாலையில் தங்குவதற்கும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்குச் சம்மதித்த அடிகளார் என்னை அருட்தந்தை ஜோன் அவர்களிடம் பேசுமாறு பணித்தார். அருட்தந்தை ஜோன் அவர்கள் நான் உயர்தர மாணவர்கள் தங்கும் விடுதிச் சாலையில் தங்குவதற்கு ஒழுங்குகள் செய்து தந்தார். ஏறக் குறைய ஒரு வருடம் வரை நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்தேன். மாணவர்களுக்குரிய அதே விதிகளை நாமும் அங்கே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. அது ஒன்றும் கஸ்டமாயிருக்கவில்லை ஆனால் உணவு விசயத்தில் எனக்குச் கொஞ்சம் சலிப்பு. அதிகமான நாட்களில் மாட்டு இறைச்சி தந்தார்கள் ஆகவே அந்த வருட இறுதியில் விடுதிச் சாலையில் இருந்து விலகி விட்டேன்” என தனது வாழ்க்கைச் சரிதத்தில் எழுதியுள்ளார்.
“ஒரு சமயம் நலிந்த சமூகத்தினைச் சேர்ந்த யேமிஸ் அவர்களும் பாடசாலையின் ஆசிரியரான யேக்கப்பும் தேர்தல் ஒன்றினில் போட்டியிட்டனர். இருவருமே லோங் அடிகளாரின் ஆதரவினை வேண்டி நின்றனர். அடிகளார் வெளிப் படையாகவே தனது எண்ணத்தை ஒழிவு மறைவில்லாமல் எடுத்துக் கூறினார். நலிந்த சமூகத்தின் மேம்பாடேதான் முக்கியமானது எனவே தனது ஆதரவு யோமிஸ் அவர்களக்கு எனக் கூறினார்” என்கிறார் அக்கல்லூரியின் பிரபலமான பழைய மாணவரும் தகைசார் கல்விமானுமாகிய பண்டிதர் அலெக்சாந்தர். போட்டியிட்டவர்களில் ஒருவர் தனது பாடசாலை ஊழியர் என்று கூடப் பார்க்காது யேமிசுக்கு அடிகளார் ஆதரவு காட்டியமை அடிகளாரது கண்ணியத்தையும் நேர்மையையும் இங்கே துலக்குவதுடன் நலிந்த சமூகத்தினது உயர்வே அவரது கனவு, என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேம்பாட்டினுக்கு வழிகோல வேண்டும் என்ற நல்ல நோகங்களைக் கொண்டிருந்த அடிகளார் அமரர் C.W.W. கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தினை வரவேற்கவில்லை என்பதை அறிந்த எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. அதனை அடிகளார் விரும்பாமைக்கு என்ன காரணம் என்பது இன்றும் எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது. கட்டணம் கட்டிப் படிப்பதற்கு வசதி அற்றிருந்த எத்தனை மக்களுக்கு இலவசக் கல்வித்திட்டம் ஆங்கிலப் பாடசாலைகளில் அடி எடுத்து வைக்க உதவிற்று! இலவச கல்வித் திடம் பின்தங்கிய சமூகத்தவருக்கு எத்தனை உதவியது என்பதை அடிகளார் நிச்சயமாகப் பின்னாளில் உணர்ந்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.
மலைவாழை போலல்லவா கல்வி வாயார உண்ணலாம் வா:
அவர் தனது அலுவலகத்திற்கு வரும் பொழுது, சுவாமிமார்களுக்கான விடுதிப் பகுதியிலிருந்து இறங்கி வகுப்பறைகள் தொடராக இருக்கும் விறாந்தை வழியாகவே வருவார். அப்பொழுது மாணவர் எவரும் வகுப்பறைகளுக்கு வெளியிலோ அல்லது நூலகத்துக்கு வெளியிலோ காணப்பட மாட்டார்கள்.உயர் பாடசாலைக்குத்தான் அடிகளார் பொறுப்பாயிருந்தார். மத்திய பாடசாலையும் ஆரம்ப பாடசாலையும் வேறு வேறாகத் செயற்பட்டன. அவற்றிற்கு வேறு வேறு சுவாமிகளே பொறுப்பாயிருந்தார்கள்.
காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கு முன்னர் முதல் மணி அடித்ததும் ஓவ்வொரு நாளும் உயர் பாடசாலையின் மத்தியில் அலுவகத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் மேரி மாதாவின் உருவச்சிலைக்கு முன்பாக உள்ள வெளியில் மாணவர்கள் எல்லோரும் கூடுவது வழக்கம். மாணவர்கள் யாவரும் நேரத்திற்குப் பாடசாலைக்கு வந்து விடவேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார் அடிகளார். அதற்காகவே பாடசாலை தொடங்கும் நேரத்துக்கான முதல்மணி தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் வரை அடிக்கப்படும் என அறிகிறேன். இதனால் பாடசாலைச் சுற்றாடலில் வதியும் மாணவர்கள் காலதாமதமின்றி ஓடோடி பாடசாலையை வந்தடைவதற்கான அவகாசம் கிடைக்கும். பாடசாலை ஆரம்பிப்பதற்கான முதல்மணி அடித்ததும் அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக மேரி மாதாவின் பீடத்தில் ஏறி நின்று அதன் முன்பாக உள்ள வெளியை நோக்கி தன் கண்ணோட்டத்தைச் செலுத்துவார். அப்பொழுது நூல் நிலையம் வகுப்பறை விறாந்தைகள் தோறும் நின்று ஓடித் திரிந்த மாணவர்கள் எல்லோரும் மேரி மாதா உருவச் சிலைக்கு முன்பாக ஓடோடி வந்து நிற்பார்கள். மர்ணவர்களின் ஒழுங்காட்சிக்குப் பொறுப்பான தலைமை ஆசிரியர் (Head Master) பிரம்புடன் மாணவர்களின் ஒழுங்கு நிலையை மேற்பார்வை செய்துகொண்டு உலாவித்திரிவார். மாணவர்களின் இந்த ஒன்றுகூடலின போது அதிபர் பாடசாலையில் இடம்பெற்ற இடம்பெறப் போகின்ற விசேட நிகழ்ச்சிகள் பற்றி எடுத்துக் கூறுவார்.
எட்டிப்பார்க்கத் தேவையில்லை எட்ட நின்றாலே தெரியும்:
பாடசாலை ஒன்றில் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றுவார்கள் எனக் கூற முடியாது. அது போன்றே எல்லா மாணவர்களும் சிரத்தையுடன் கற்பார்கள் என்பதும் இல்லை. ஆகவே தலைமைக்குப் பயந்தே சில ஆசிரியர்களும் கணிசமான தொகை மாணவர்களும் செயற்படுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கற்றலும் கற்பித்தலும் பாடசாலையில் ஒழுங்காக நடைபெறுகின்றனவா? என்பதை தெரிந்து கொள்வதற்குத் தினசரி அதிபர் ஓரிரு முறையாவது பாடசாலையினை வலம் வரவேண்டியது அவசியம்.
அடிகளாரது ஆஜானுபாகுத் தோற்றம் வகுப்பறை மேற்பார்வைக்காக விறாந்தை வழியே அவர் செல்லும் பொழுது வகுப்பறைகளில் கற்பித்தலும் கற்றலும் அமைதியான முறையில் இடம் பெறுவதை அவதானிக்க வசதியாயிருந்தது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதில் கை தேர்ந்தவர் லோங் அடிகள். சிறந்த வாய் வல்லமை உடையவராகவும் வற்புறுத்திப் பேசும் ஆற்றல் உடையவராகவும் இருந்தமையால் ஆசிரியர்கள் அவர் மீது பயம் கலந்த அபிமானமும் பக்தியும் கொண்டிருந்தனர்.
" The best is good enough for St. Patrick’s”, “ Let not circumstances keep you down” எனும் வாசகங்கள் தாரக மந்திரங்கள் ஆயின. அடிகளார் பதவி ஏற்ற அக்காலத்தில் Cambridge Junior, Cambridge Senior போன்ற இங்கிலாந்துப் பரீட்சைகள் தான் நடைபெற்றன. லோங் அடிகளார் மாணவர்களுக்கு அயராது பயிற்றுவித்து அப்பரீட்சைகளுக்குத் தோற்றிய மாணவர்களைச் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்ள தயார்ப் படுத்தினார்.
இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப் பட்ட S.S.C எனும் சிரேஸ்ட பாடசாலைப் பத்திரப் பரீட்சைக்கு மாணவர்கள் முதன் முதலாக தோற்றினார்கள். 1946ல் நடைபெற்ற S.S.C பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பாடசாலை மாணவர்கள் சித்தியடையாமை கண்டு அடிகளார் மனம் வருந்தினார். உடனடியாகவே மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தத் தொடங்கி அவர்களின் ஆங்கிலத் தரத்தினை உயர்த்தினார். ஆங்கிலத்தில் நல்ல பெறுபேறுகளை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுத்தார்.
அடிக்கிற கைதான் அணைக்கும்:
அவர் மாணவர் ஒருவருடன் கதைக்கும் பொழுது தோளில் கை போட்டுக் கொண்டுதான் பிள்ளாய் (Child) என்று விழித்தே சம்பாசணையை ஆரம்பிப்பார். ஒழுங்காட்சி சம்பந்தமான விடையங்களை உப அதிபரும், தலைமை ஆசிரியரும் கவனிக்கும் படியும் விட்டு விடுவார். உடல் தண்டனை ஏதும் இருப்பின் அதை தலைமை ஆசிரியர் தான் வழங்குவார். சற்று மிகையான குற்றகளுக்கான தண்டனையை அதிபர் அவர்களே வழங்குவார்கள். சில சமயங்களிலே தண்டனை பிரார்த்தனை நேரத்தில் மேரிமாதா சிலைக்கு முன்னர் பகிரங்கமாகவே நடைபெறுவதும் உண்டு. அடிகளார் ஒருவரைத் தண்டிக்கு முன்னர் குழந்தாய் முழங்காலில் நில் என்றே பணிப்பார்.
ஆரம்பகாலத்தில் "அடியாத மாடு படியாது” என்ற யாழ்ப்பாணத்தவரது பாரம்பரிய முறையினுக்கு ஒப்பவே அடிகளார் கல்லூரியின் ஒழுங்காட்சி, மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குப் பிரம்படி முக்கியம் என்ற கணிப்பினை வைத்துச் செயற்படுத்தினார். ஆனால் 1952ல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு திரும்பிய அடிகளார் மனதில் புரட்சிகரமான ஒரு மாற்றம் ஏற்பட்டது. மாணவர்களைப் பிரம்பு கொண்டு தண்டிக்கும் முறை ஒழிக்கப்படவேண்டும் என அடிகளார் எண்ணினார். தனது அறை மற்றும் வகுப்பறைகள் யாவற்றிலும் உள்ள அத்தனை பிரப்புகளையும் மைதானத்தின் மத்தியில் போடப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் சூழ்ந்து நிற்க தீ மூட்டி எரிக்கப்பட்டது. அவ்வேளையில் அடிகளார் ஆற்றிய உரையினில் அன்புடனும் வாஞ்சையுடனுமே ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் எனவும் அதே போன்று மாணவர்களும் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கற்று நாட்டின் நற்பிரஜைகளாக வாழவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். எரிக்கப்பட்ட சாம்பல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, “Death of A Cane” என்ற பதாதையுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள குளத்தில் கரைக்கப் பட்டதாம். அன்று பாடசாலைக்கும் அரை நாள் விடு முறை வழங்கப் பட்டது. அதோடு மாத்திரமல்லாமல் " Abolition of Corporal Punishment at St. Patrick’s College” எனத் தலைப்பிட்டு அதிக பத்திரிகைகளிலும் அது செய்தியாக வந்ததாம். அடிகளார் மேற்கொண்ட இம் முயற்சி உண்மையிலேயே அதிசயிக்கத் தக்கதும் புரட்சிகரமானதுமான ஒன்றாகும். நான் அதிபராக இருந்த காலத்திலும், எண்பதுகளிலும் கூட, இது நடைபெற்று ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, அதிகமான யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பிரம்படி நடைமுறையில் இருந்தது.
பிரம்படியை நிறுத்திய போதும், வேறு வகையான புதிய தண்டனை முறையினை அடிகளார் கையாண்டுள்ளார் .“கல்லூரியில் அதன் பிறகு சிறிது காலம் தவறு செய்யும் மாணவனைச் சாக்கினிலே போட்டு ஏந்தும் முறை நடைபெற்றது. அந்த மாணவனை ஏனைய மாணவர்கள் பார்த்துச் சிரிப்பதால், அவன் மீண்டும் தவறு செய்யமாட்டான். இம்முறை தொடங்கிச் சில மாதங்களில் பின்னர் சிலீபா என்ற வரலாற்று ஆசிரியர் அந்த முறை சரியானது அல்ல எனக் கூறியதன் காரணமாக அத்தண்டனை முறையினை அடிகளார் நீக்கி விட்டார்” எனப் பண்டிதர் அலெக்சாந்தர் அவர்கள் தெரிவித்தார்கள். மற்றவர்கள் சொல்வதில் உள்ள தர்மத்தை மதிக்கின்ற பக்குவம் அடிகளாருக்கு இருந்ததை இச்செய்கையினால் உணர முடிந்தது.
காலையில் எல்லா மணவர்களும் சரியாக 9:00 மணிக்கு ஒன்று கூடிப் பிரார்த்தனை நடத்துவார்கள். அதன் பின்னர் ஒழுங்காக வரிசையாகத் தமது வகுப்புகளுக்குச் செல்வார்கள். அடிகளாருடைய கழுகுக் கண்கள் ஒவ்வொரு மாணவனையும் கவனித்தபடியே இருக்கும். யாராவது ஒழுங்கு தவறினால் அவன் அவரது அருகே முழங்காலில் நிறுத்தப் படுவானாம். “ ஒரு முறை நான் குயூ வரிசையில் செல்லும் போது பராக்குப் பார்த்து நடந்து சென்றமையால் என் முன்னால் சென்ற மாணவனுடன் முட்டி மோதி விழ நேரிட்டது. கண்ணில் எண்ணை ஊற்றியது போல நின்று இதனை அவதானித்த அதிபர் அவர்கள் என்னை அழைத்து ஒரு ஓரத்தினைக் காட்டி, “On your knees over there” என்றார். நான் வெட்கத்தால் தலை குனிந்து முழங்காலில் இருந்தேன். மாணவர்கள் யாபேரும் தத்தம் வகுப்புகளுக்குச் சென்ற பின்னரே அதிபர் என்னை வகுப்பினுக்கு அனுப்பி வைத்தார்” என திரு R. L. சேவியர் அவர்கள் பழைய நினைவுகளை மீட்டார். காலையில் முதல் பாடவேளையில் அவர் சமயக் கல்வி போதிப்பாராம். அப்பொழுது யாராவது மாணவன் வகுப்பினிற்குப் பிந்தி வருவானாயின் எல்லா மணவர்களையும் எழுந்து நின்று அவனுக்கு salute அடிக்க வைப்பராம். அவன் அதன் பிறகு பிந்தி வருவானா?
- தொகுப்பு: P.Kanagasabapathy
Tel: 415- 283 -1544(கனடா) e.mail: pkanex@hotmail.com
தொடரும்..... Tweet
No comments:
Post a Comment