Tuesday, 1 December 2015

நாங்கள் ஏன் இங்கு(பிரான்சிற்கு) வந்தோம்?

குஞ்சரம் 25

நாங்கள் ஏன் இங்கு(பிரான்சிற்கு) வந்தோம்?

பிரான்சில் ‘பறை’ இசை பழக பேரார்வத்துடன் முன்வந்தவர்களாக எமது அடுத்த தலைமுறை மற்றும் இரண்டாவது தலைமுறையினராகிய 15 சிறார்கள் வந்திருந்துமை மிகுந்த உற்சாகத்தை அளித்திருந்தது. ஆண் பெண் வேறுபாடில்லாது ஆர்வமுடன் இவர்கள் பங்கேற்ற பட்டறை பற்றி சென்ற வாரம் நண்பர்கள் சொன்ன போது கிடைத்த உள்ள மகிழ்வை வார்த்தைகளால் இலகுவில் கோர்க்க முடியாது.

இந்த உளத் தூண்டலால் சென்ற ஞாயிறு பயிற்சிப்பட்டறை நிகழ்விற்கு என்னோடு என் துணையாளும் வந்திருந்தார். ஆர்வத்துடன் பறை இசைக் கருவிகளைத் தோள்களில் சுமந்து அணைத்தவாறு சிறார்கள் தமது கை விரல்களில் பிடித்திருந்த குச்சிகளால் தட்டிப் பயின்று கொண்டிருந்தனர். இதுதான் முதல் தடவை என்று கூற முடியாதவாறு அவர்களால் தகுந்த தாளக்கட்டுடன் கூட்டாக இசைக்க முடிவதை ஆனந்தத்தோடு நோக்கினோம்.

இச்சிறார்களில் சிலர் இலங்கையில் பிறந்து இங்கு தம் பெற்றோருடன் குடிபெயர்ந்திருந்தார்கள். சிலர் இங்கு பிறந்த இரண்டாவது தலை முறையினராக இருந்தனர் எல்லோரும் ஒன்பதிற்கும் பதினைந்திற்கும் இடைப்பட்ட வயதினராக இருந்தனர். ஒருவரைத் தவிர மற்றையோர் தமிழ் கற்பவர்களாக இருந்தனர்.

சற்று இளைப்பாறும் நேரம் வந்தபோது சிறார்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வேளையில் அவர்களுக்கு ‘பறை’ இசைக் கருவியின் தோற்றம் இது உருவாகிய வரலாற்றுப் பின்னணி இக்கருவி இசையைத் தொடரும் எமது வாழ்வு பற்றிய உரையாடலாக அமைந்தது. இதில் ‘பாரம்பரியம்’ – எமக்கான ‘முதுசங்கள்’ – எமது ‘தொன்மம்’ ‘மூதாதையினர்’ எனவாக புதிய கலைச் சொற்கள் பற்றிய விபரணம் தேவைப்பட்டது.

இச்சொற்களை விபரணை செய்யும் போது « நாங்கள் யார் ? »
« ஏன் இந்நாட்டிலிருக்கிறோம் ? » எனவான வினாக்களையும் எழுப்ப வேண்டியதாயிற்று.
முதற் கேள்விக்கு தம்மைப் பற்றிக் கூறியவாறு தொடர்ந்த உரையாடலில் ‘தமிழர்’ எனவும் கூட்டாகச் சொன்னார்கள்.

அடுத்த கேள்விக்கான பதில் கூறாது கொஞ்சம் யோசித்தவர்களாக தாமதித்தனர். பதிலைப் பெற ஊக்கமளித்வாறு அளவளாவினோம்.

« தெரியாது ! » என்றாள் ஒரு சிறுமி.

« அங்கு (இலங்கையில்) இருக்க இடமில்லை என்றதால் இங்கு வந்தோம் ! » என்றான் ஒருவன்

« இல்லையில்லை… அங்கு ஆர்மிக்கும் இயக்கதிற்கும் சண்டை நடந்தது அதனால் இங்கு வந்தோம். » என்றான் இன்னுமொருவன்.

மற்றையோர் சொல்லத் தெரியாது முகம் பார்த்தவாறிருந்தனர்.

எமையறியாது உயர்ந்தன எமது புருவங்கள் ! « சரி அப்பா அம்மாவோடு நீங்கள் இது பற்றிக் கதைப்பதில்லையா ? »

« அப்பா கதைக்க மாட்டார் ! சத்தமா ரிவி போட்டு படம் பார்ப்பார் ! » என்றான் முதலாவதாக இருந்தவன்.
« அம்மா கொஞ்சம் பிரெஞ்சு கதைப்பா… ஆனால் இது பற்றியெல்லாம் கதைக்கமாட்டா ! » இன்னொரு குரல்.
« சாப்பிட்டியா ? எத்தனை மணிக்கு வருவாய் ? படி ! விளையாடிக் கொண்டிருக்காதே !! பள்ளிப் பரீட்சையில் குறைந்த மார்க்கு வந்தால் தெரியும் !! படுக்கப் போ.. ! என்ன வேணும் ?..... இப்படியாகச் சிலதான் நாம் வீட்டிலே கதைப்போம். »
« நாங்கள் (சகோதரங்கள்) எங்களுக்குள்ளாகத்தான் பிரெஞ்சில் கதைத்துக் கொள்வோம் ! »
எதையும் வெளிப்படுத்த முடியாது மெளனித்தோம் !

‘அகதி’ எனவாக யாருமே குறிப்பிடவில்லை. இச் சொல்லையும் அறிந்தவர்களாகவும் இருக்கவில்லை.

000000000

‘இங்கு அடுத்த தலைமுறையினர் தமக்கான தேடல்களுடன் அறிய ஆவலுடையவர்களாகவே இருக்கின்றனர். ‘தமிழ்’ ஒரு மொழியாகக் கற்பிக்கப்படுவதற்கு அப்பால் உரையாடலுடன் பேசிப் பழகி உறவாடும் தளத்தில் கற்கை தொடரப்பட வேண்டும். இதற்கு பொறுமையுடன் தகுந்த ஆற்றலுடைய ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். பெற்றோரையும் இணைத்தவாறு பயணிக்கும் கூட்டுக் கல்வி முறைமைகள் கண்டடைய வேண்டும். எல்லாவற்றுக்கும் சமூகப் பிரக்ஞையுடைய அறிவுசார் சமூக மையங்கள் தேவை…. !’ எனத் தானாகக் கிளர்ந்தெழும் எண்ணங்களுடன் ஏதும் பேசாதவனாக வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.

பிற்குறிப்பு
முதுசொம் https://ta.wikipedia.org/s/31mf
ஓவியம் நன்றி – இணைய வழி (முகநூல் பகிர்ந்த நண்பர்)

பதிவு : முகிலன்

பாரீசு 01.12.2015

Sunday, 29 November 2015

பாரீசில் நூல் அறிமுகம் : "யாழ்ப்பாணக் கூத்துகள்"


செய்திச் சரம் 30
நூல் அறிமுகம் :

யாழ்ப்பாணக் கூத்துக்கள்

........................
22.11.2015 அன்று மாலை பாரீசில் 4 r Darboy, 75011 PARIS எனும் முகவரியில் அமைந்த தேவாலய மண்டபத்தில் நிகழ்ந்த நூல் அறிமுக நிகழ்வில் ஆற்றிய என் உரையின் எழுத்து வடிவம்.
........................

திருமறைக் கலாமன்றம் நிகழ்த்தும் இவ்வரங்கின் தலைவர் விழா நாயகன் டேமியன் சூரி அவர்களுக்கும் இங்கு குழுமியுள்ள கலைஞர்கள் கலையார்வலர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் சிறார்கள் அனைவர்க்கும் வணக்கம் !!

புலம்பெயர்  வாழ்வில் பிரான்சில் வாழத் தலைப்பட்ட முதற் தலைமுறையினராகவும் எம்மோடு தொடரும் அடுத்த தலைமுறையினரான சந்ததியினருடனும் அதற்கடுத்த தலைமுறையினரையும் கண்டதாக நீட்சியுறும் வாழ்வில் « எமக்கானதாக எம்மோடு வந்திறங்கிய எமக்கான கலைகள் » தொடர்பாக இவ்வரங்கு பேசுகிறதென நான் நினைக்கிறேன்.




இந்த நாடகம் மற்றும் சினிமா போன்ற புதிய வடிவங்களும் தொடக்கத்தில் இதிகாசங்களையும் வேதாகமக் கதைகளையும் வெளிப்படுத்தியதாகவே இருந்தன. இவ்வாறே தொடர்ந்த நாடகம் மற்றும் சினிமா போன்றவையின் பேசு பொருள் அதாவது கருமக்களது வாழ்வாக மாற்றமடைந்ததை நாமெல்லோரும் மனம் கொள்ள வேண்டும்.


எமது மண்ணின் அண்ணாவிமார்களால் உருக்கொள்ளும் கதைகளும் கதை மாந்தர்களும் ‘புதிய படைப்புகளாக பரிணாமம் கொள்ள வேண்டும். பேராசிரியர் சு வித்தியானந்தன் தொடங்கிய தொடுகை இன்று பேராசிரியர் மௌனகுரு வழியில் பாலசுகுமார் போன்ற பல அறிவுலகத்தினரோடு கைகோர்த்தத்தாக மரபும் மரபுக் கலைகளும் பரிணாமடைய வேண்டிய காலமிது.
000000

ண்மையில் சாராயம் தொடர்பாக கோவன் வெளிப்படுத்திய அரங்காற்றுதல் பலரது கவனத்தை விரைந்து பெற்றது. கேட்க வேண்டியவர்களைக் குடைந்தெடுத்தது. எமது கதை சொல்லிகள் கலையாளர்களால் எமக்கான தாள இலயத்துடன் புதிய அரங்காற்றுதல்களையும் அரங்கங்களை ஈர்க்கும் ஆடல் அரங்குகளையும் இன்ன பிறவான ஆற்றுகைகளையும் நிகழ்த்தலாம். இவை புலம்பெயர்வு வாழ்வில் பல்லின பல் கலாச்சார வெளிகளில் நமக்கானதொரு தனித்துவ முக்கியத்துவத்தை வழங்கும். பொது மக்களது இன்றைய வாழ்வின் வலிகளையும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் கதைகளாக நாம் சொல்லத் தயாராகுவோம் !!
00000

நமது வாழ்வையும் நடைமுறைகளையும் பதிவு செய்தல் என்பது விஞ்ஞானபூர்வமான செயலாகும். இது தனி மனித - கூட்டு வாழ்வாகவும் இருக்கலாம். குமுகாய அல்லது சமூக வாழ்வாகவும் இருக்கலாம். இன்னும் பிறவாக இலக்கியத் தரமான படைப்புகளாகவும் இருக்கலாம்.
பதிவிடல் எனும் அரிய பணியை மேற்கொள்ள நினைத்து செயலில் செய்த கலைஞர் சூரி அவர்களுக்கும் திருமறைக் கலாமன்றத்திற்கும் முதலில் நன்றி கூறிக் கொள்ள வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும்.

இவ்விரங்கில் வெளியிடப்பட்டுள்ள « யாழ்ப்பாணக் கூத்துகள் » எனும் சிறு நூல் வழியாக எனக்கான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பும் தந்துள்ளார்கள். கூத்துக் கலைஞனாக நம் எல்லோரும் அறியப்பட்ட சூரி அவர்கள் தாம் புலம் பெயர்வு நாட்டு அரங்காற்றுகைக்கு அமைவாக வடிவமைத்த கூத்துகள் இந்நூலில் எழுத்துருவாகியுள்ளது. இதில் 
1.            மனிதருள் மாணிக்கம் (வேதாகமம் வழிப்போக்கன் உவமை)
2.            வீணைக் கொடியோன் (இராமயணம் இராமன் இராவணன் யுத்தம்)
3.            தர்மத் தூதுவன் (மகாபாரதம் கிருஷ்ணன்  தூது)
4.            திருந்திய உள்ளம் (வேதாகமம் ஊதாரிப்பிள்ளையின் உவமை)
5.            செங்கோல் (வேதாகமம் மன்னிப்பு பற்றிய உவமை)
ஆகிய ஐந்து கூத்துகள் குறுகிய அரங்காற்றுகையாக பதிவாகியுள்ளன. 

பதிவிடல் எனும் அரிய பணியை மேற்கொள்ள நினைத்து செயலில் செய்த கலைஞர் சூரி அவர்களுக்கும் திருமறைக் கலாமன்றத்திற்கும் முதலில் நன்றி கூறிக் கொள்ள வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும்.

பிராந்திய மொழி வழிப் பண்பாட்டைத் தழுவும் முடிவை கிறீத்தவம் மேற் கொண்டதன் வாயிலாக எமது மண்ணில் தமிழ்க் கத்தோலிக்கம்எனவாக தன்னைத் தகவமைத்தது தென்னாசியப் பிராந்தியக் கிறீத்தவம். தமிழில் இது குறிப்பிடத் தக்க அடையாளமாகத் தொடர்கிறது. இதன் வழியில் பண்பாட்டுத் தளத்தில் பணியாற்றும் தொண்டு நிறுவனமாக திருமறைக் கலாமன்றம்கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரிய பணிகளை ஆற்றி வருகிறது. இதில் எமக்கான கலையாகிய கூத்துகள்அரங்காற்றுகையை சிறப்பாகத் தொடர்ந்தும் வருகிறது.

இந்த வழியில் வந்த பலர் இன்று புலம்பெயர் தமிழர்களாய் உலகமெங்கும் கலைப் பண்பாட்டுத் தொண்டர்களாக இயங்குகிறார்கள். பாரீசில் இன்று இவர்களில் சிலரை இவ்வரங்கு கொண்டிருக்கிறது. தமிழ் கத்தோலிக்கம் செய்த சிறப்பான பணி தமிழ்மொழியில் உறவாடும் பிராத்தனை மற்றும் பூசைகளையும் இதற்கான பாடல்களையும் நடைமுறைப்படுத்தியதாகும். தாம் நம்பும் இறைவனுடன் தமது தாய் மொழியூடாகவே உசாவுறும் அரங்கமாக நிகழ்வதானது புலம்பெயர் அடுத்த தலைமுறையினரையும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கிறது. பக்தி’ ‘விசுவாசம்’ ‘பரவசம்’ ‘வணங்குதல்’ ‘மண்டியிடல்’ ‘மெய் மறத்தல்’ ‘மனமுருகிப் பிராத்தித்தல்போன்ற பல அருவச் சொற்களுக்கான உளப்பூர்வமான அர்த்தங்களை பெற்றோரிடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் சிறார்கள் கற்கிறார்கள். இதனை நான் சென்றிருந்த நிவேர் என்னும் கிராமத்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடனான உரையாடலில் நேரிலேயே காணுற்றேன். 

ஐந்து கதைகளை கலைஞன் சூரி குறுகிய கூத்து ஆற்றுகையாகப் பதிவு செய்திருக்கிறார். இதற்கான பாடல்களும் மெட்டுடன் குறிக்கபட்டிருக்கின்றன. தென் மோடியாலான கூத்தரங்க வழமையில் பாடல்கள் வழியாக கதை சொல்லல் நிகழ்கிறது. தொடக்கத்தில் காப்பு பாடல் நிகழும். பின்னர் திரை விலகும். தேவையான வகையில் பாத்திரங்கள் கதை சொல்லிகளாக ஆற்றுகை செய்யும். கடைசியில் உரையுடன் நிகழ்வு முடிவுறும்.

1.         ஆபத்தில் பிறருக்கு உதவும் மனமுடையவன் மனிதரில் மாணிக்கமாகிறான்
2.         மாற்றான் மனையைத் தூக்கியவன் தனது சுற்றதோடு மரணிக்கிறான்
3.         சூதால் இழந்த சொத்துகளைப் பெற்றுக்கொள்ள முயலும் தூதுவன் கிருஷ்ணன் மகாபாரதப் போர் தொடங்கும் முன் சென்ற தூதுக் காட்சி
4.         ஊதாரியான பொறுப்பற்ற மகன் ஒருவன் பட்டறிவோடு திருந்துதல்
5.         தனக்காக இறைஞ்சி மன்னிப்படைந்த ஒருவன் மற்றவனை மன்னிப்பதில்லை. இதனால் அவனும் தண்டிக்கப்படுகிறான் !

இக் கதையாடல்களில் கடைசியில் அமையும் உரைகள் அல்லது கூற்றுகள் கவனம் கொள்ள வைக்கின்றன. இவை வெளிப்படையான நீதி போதனைகளாக அமைகின்றன.

1.         அயலானுக்குதவிடும் மனமென்றும் வேண்டுமே
ஆண்டவன் அருள்பெறும் மனிதனும் அவனேதான்
இவனேதான் இவனேதான் இவர்களில் நல்லவன்
2.         யுத்தத்தில் அரக்க குலம் பூண்டோடு அழிக்கப்பட்டது. நீதி வெல்லும் என்பதற்கு இச்சரிதம் ஓர் எடுத்துக்காட்டு.
3.         அரசரே ! உமது எண்ணமும் துரியோதன்னின் எண்ணமும் யுத்தமாக இருக்கும் போது நான் எப்படி அதை மாற்றுவது ? அமைதித் தீர்வை நீங்கள் விரும்பவில்லை. உரிமையை போராடித்தான் பெறவேண்டுமென்றால் தர்மத்தின் பாதையில் பாண்டவர் யுத்தத்தை புரியத் தயார். யுத்தப் பேரிகை முழங்கட்டும்முழங்கட்டும்… !
4.         நீ காணாமல் போன ஓர் ஆட்டுக்காக மிகுதி ஆடுகளை பாலைநிலத்தில் விட்டுவிட்டு ஒரு ஆட்டை கண்டு பிடிக்கும் வரை தேடி அலையமாட்டாயா? பின்னர் அது கண்டு பிடிக்கப்பட்டதும் மகிழ்ந்து கொண்டாட மாட்டாயா? அதுபோலவே மனம் திரும்பம் ஒரு பாவியின் நிமித்தம் விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும். இறைத் தந்தையின் அன்பும் அத்தகையதே.
5.         உன்னை ஒருவன் மன்னிப்பதை ஏற்கும் நீ உன் அயலானை மன்னிக்க மறப்பதேன். மனிதா சிந்திப்பாயாக ! ஒருவன் என்ன செய்யவேண்மென்று நீ விரும்புகிறாயோ அதையே மற்றவனுக்கும் நீயும் செய்.
என்றதான போதனைகளை இக்கதையாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

0.            பிறக்கும் போதும் அழுகின்றாய் 
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருநாள் ஏனும் கவலை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே…..
என்ற பாடலோடு பிணைந்தவர்கள் நாம். ஆம் நாம் மனம் விட்டுச் சிரிக்கவும் அந்தச் சிரிப்புக் கணங்களூடாக வாழ்வின் அழகியலை அறிந்து புத்துணர்வு பெறவும் சிந்திக்கவும் மனித குலம் கண்டெடுத்து நிகழ்த்திவைதான் இந்த அரங்காற்றுகைகள்.

தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியுடன் விடைபெறும் பாடல்களோடே எமக்கான பிறப்பும் இறப்பும் இருந்திருக்கிறது. அதுமட்டுமா ? நமது வளர்ப்பின் போதும்; வாழ்வு நெடுகிலும் வண்டியோட்டிய போதும், நடவு நட்ட போதும், ஏர் பிடித்த போதும், நிலத்தை கொத்திய போதும், வலை இழுத்த போதும், நீர் இறைத்த போதும், மலையேறிய போதும், நெல்லுக் குத்திய போதும் எனப் பல் வேறு பணித்தளங்களிலும் இயல்பாகவே எழுந்தவை எமது பாட்டுகள். இவற்றை எமது பாட்டன் முப்பாட்டன் வழியில் எமது கைளில் வரலாற்றத் தொடரோட்டம் தந்துவிட்டது. ஆனால் எம்மால் எமக்கான வழி வழி வந்த இந்த பண்பாட்டுப் பொக்கிசத்தைஎமது சந்தியினருக்கு கையளிக்க முடிந்துள்ளதா?

0.            பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்
அந்த பாட்டுகள் பலவிதம்தான் 
எனவாகவும் கவிஞர் பதிவும் செய்திருக்கிறார்.
000000

நமது வாழ்வையும் நடைமுறைகளையும் பதிவு செய்தல் என்பது விஞ்ஞானபூர்வமான செயலாகும். இது தனி மனித - கூட்டு வாழ்வாகவும் இருக்கலாம். குமுகாய அல்லது சமூக வாழ்வாகவும் இருக்கலாம். இன்னும் பிறவாக இலக்கியத் தரமான படைப்புகளாகவும் இருக்கலாம்.

யாழ்ப்பாணக் கூத்துகள்என்ற பதிவும் எதிர்காலத்திலும் நிலைத்து நின்று வரலாற்றைப் பேசும். 20வது 21வது நூற்றாண்டுகளில் பிரான்சில் குடியேறிய ஈழத் தமிழர்கள் தமக்கான கலை அரங்காற்றுகையில் மனித மனங்களை நெறிப்படுத்தும்வேதாகம இதிகாசக் கதையாடல்களை நிகழ்த்தினார்கள் என்பதற்கான சான்றாக முன்வைக்கபடலாம். இவர்களது கதையாடல்களில் இந்துத்துவமும் கத்தோலிக்கமும் நேசத்துடன் இணைந்துள்ளன. ஆனால் இசுலாமோ பௌத்தமோ சமணமோ கூறும் நீதிக் கதைகள் இடம்பெற்றிருக்கவில்லை. 


செம்மொழி மாநாட்டில் பேராசான் சிவத்தம்பி அவர்கள் கூறும் « தமிழ் மொழி தனது தனித்துவமான நீண்ட பயணத்தில் நான்கு மதங்களது நேரடியான இலக்கியங்களைக் கொண்ட தனித்துவமான செவ்வியல் மொழி » எனக் குறிப்பிட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

அறிவியலோடு தத்துவமும் வரலாறும் முறைசார்க் கற்கையில் பெறும் அடுத்த தலைமுறையினரோடு வாழும் எமது வாழ்வில் மனித மனங்களது பிறழ்வுகள் தொடர்பான கதைகளை ஆற்றுகை செய்கிறோம். நாம் சிறார்களாகவும் பதின்ம வயதினராகவும் வாலிபத்தினராகவும் வளர்ந்த காலத்தையும் எமது மனங்கள் பக்குவமாகிய சம்பவங்களையும் கேட்ட நீதிக் கதைகளையும் பொக்கிசமாகிய பழ மொழிகளையும் இன்ன பிறவற்றையும் அசை மீட்டாது  இருப்போர் மிக அரிது. ன்றைய ஊடக வெளிக் காணொளிக் காட்சிகள் அப்போதிருக்கவில்லை. விஞ்ஞான அறிதல்கள் பொதுவானதாக மக்கள் மயமாக்கப்பட்டிருக்கவில்லை. கூத்துகள் விடிய விடிய நிகழ்ந்த காலட்டம் அது. 

நாடக அரங்காற்றுகைகளும் அதன் பின்னரான விஞ்ஞான தொழில்நுட்பத்தின் கலைப் பிரசன்னமாகிய சினிமாவின் வருகையும் கூத்தின்அரங்காற்றுதலை புறந்தள்ளியது எனப் பொதுவாகக் கூறப்படும். 

« தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு. » (குறள் 436 – குற்றம் கடிதல்) எனும் குறள் வழியாகவே நாம் இவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.

ஆனால் இந்தப் புதிய வடிவங்களும் தொடக்கத்தில் இதிகாசங்களையும் வேதாகமக் கதைகளையும் வெளிப்படுத்தியதாகவே இருந்தன. இவ்வாறே தொடர்ந்த நாடகம் மற்றும் சினிமா போன்றவையின் பேசு பொருள் அதாவது கருமக்களது வாழ்வாக மாற்றமடைந்ததை நாமெல்லோரும் மனம் கொள்ள வேண்டும்.

கால ஓட்டத்தின் பரிணாம மாற்றங்களுடன் இசைவாக்கமடைந்து பயணிக்கும் மனித வாழ்வில் வெளிப்படுத்தும் அரங்காற்றுகைகளும் பரிணாமடைவதும் புத்தெழுச்சியுடன் மீளேழுகை கொள்வதும் காலத்தின் நியதிதான் !! இதைத்தான் பழையன களைந்து புதிய புகல்என்பதாக தமிழில் முன்னமேயே நியதிக் கோட்பாடாகியிருக்கிறது. 

கதாசிரியர்களும் கலையாற்றுகையாளர்களும் உருக்கொடுப்பவர்கள்அதாவது ஒரு படைப்பை உருவாக்குபவர்கள் இதனால்தான் படைப்பை ஆக்குபர்களாக இருப்போர்தான் படைப்பாளிகள்எனவாகச் சுட்டப்படுகின்றனர். காலத்தின் வகையறிந்த படைப்புகளுக்கு படைப்பாளிகள் பரிணாமம் கொள்ள வேண்டும். இதற்கு இயைந்தவாறு வில்லுபாட்டு பட்டி மன்றங்கள் விவாத மன்றங்கள் புதிய குறும் திரைகள் - தொடர்கள் எனப் பலவாக புதிய அரங்காற்றுகைகளை இன்று காண்கிறோம்.

எமது மண்ணின் அண்ணாவிமார்களால் உருக்கொள்ளும் கதைகளும் கதை மாந்தர்களும் புதிய படைப்புகளாக பரிணாமம்கொள்ள வேண்டும். பேராசிரியர் சு வித்தியானந்தன் தொடங்கிய தொடுகை இன்று பேராசிரியர் மௌனகுரு வழியில் பாலசுகுமார் போன்ற பல அறிவுலகத்தினரோடு கைகோர்த்தத்தாக மரபும் மரபுக் கலைகளும் பரிணாமடைய வேண்டிய காலமிது.

நம் வீட்டு வரவேற்பு அறைகளில் வீற்றிருக்கும் தொலைக் காட்சிப் பெட்டிகள் வாயிலாக கொட்டும் தொலைத் தொடர் நாடகங்களும் ஆட்டமும் அடிதடியும் பாடலுமான சினிமாவின் பிரதியிடலுடனான வாழ்வுடனேயே புலம்பெயர்வு நிலை தொடர்கிறது.

உலகமயமாகிய அதிவேக இயந்திர நுகர்வுக் காலாச்சாரத்தில் இன்றைய பெற்றோராக நாம் நமது பிள்ளைகளுக்கு அன்பு பாசம் பற்று நேசம் காதல் பக்தி நட்பு எனவாக விரிவுறும் உணர்வுகளை தெளிவாக வாழ்வோடு இயைந்த பயணத் தடத்தில் கொடுத்திருக்கிறோமா ? பெரு மூச்சுகள்தான் மிஞ்சும்.

அண்மையில் சாராயம் தொடர்பாக கோவன் வெளிப்படுத்திய அரங்காற்றுதல் பலரது கவனத்தை விரைந்து பெற்றது. கேட்க வேண்டியவர்களைக் குடைந்தெடுத்து. எமது கதை சொல்லிகள் கலையாளர்களால் எமக்கான தாள இலயத்துடன் புதிய அரங்காற்றுதல்களையும் அரங்கங்களை ஈர்க்கும் ஆடல் அரங்குகளையும் இன்ன பிறவான ஆற்றுகைகளையும் நிகழ்த்தலாம். இவை புலம்பெயர்வு வாழ்வில் பல்லின பல் கலாச்சார வெளிகளில் நமக்கானதொரு தனித்துவ முக்கியத்துவத்தை வழங்கும். பொது மக்களது இன்றைய வாழ்வின் வலிகளையும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் கதைகளாக நாம் சொல்லத் தயாராகுவோம்!!

« எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு. » (குறள் 423 – அறிவுடைமை)
என்று தமிழில் அன்றே வள்ளுவன் சொல்லியதை இன்றும் காவும் வாழ்வையுடையது மனித வாழ்வு.

நன்றி!
வாழ்க வளமுடன் !!

பிற்குறிப்பு :
நூல் விபரம்
0.            யாழ்ப்பாணக் கூத்துக்கள்
இளைஞர் கலைக்கழகம்
குருநகர் யாழ்ப்பாணம் (விலை 200 இலங்கை ரூபாய்கள்)
ஆசிரியர் - டேமியன் சூரி பரிஸ் பிரான்ஸ்


முன்மொழியும் புதிய கதைகள்
1.            டார்வின் கலிலியோ ஐயன்ரீன் நியூட்டன் போன்றவை
2.            உலகப் போர்கள் உலகைக் குலுக்கிய நாடுகள்
3.            சாதனையாளர்கள்
4.            எதிர் கால வாழ்வு - முன்மொழிவுச் சித்திரங்கள்
5.            நமது வாழ்வுக் கதைகள்


இடுகை : முகிலன்
பாரீசு 29.11.2015