Tuesday, 5 May 2020

நினைவேந்தல் : ஈழம் தந்த வாழ்நாள் கலைஞர் ஏ. ரகுநாதன்


நினைவுச் சிதறல்கள் :

கலைஞர் . ரகுநாதன்

(மே 05, 1935 கிமாஸ், மலேசியா - ஏப்ரல் 22, 2020 பாரீஸ், பிரான்சு)



«ஏ ரகுநாதன் ஈழத்தின் நவீன நாடகத் தந்தை என அழைக்கப்படும் கலையரசு சொர்ணலிங்கத்தின் கண்டு பிடிப்பு - அவரால் மெருகூட்டப்பட்ட கலைஞன், ‘கலையரசு சொர்ணலிங்கம்’ அன்று நெறியாள்கை செய்த தேரோட்டி மகன் நாடகத்தின் கதாநாயகன் கர்ணன், இவரோடு உடன் நடித்தார் அர்ஜுனாக குழந்தை சண்முகலிங்கம். இது நடந்து 1950 களின் நடுப்பகுதியில்.
அதன் பின் ,கலையரசு பாணி நடிப்பை ரகுநாதன் அன்று பாடசாலை மாணவரிடம் விதைத்தார். முறையான நடிப்பு என்றால் என்ன என அறியாத எனது 20 ஆவது வயதில் என்னிலும் அப்பாணி நடிப்பை விதைத்தார். இவரது உரையாடலில் ஒரு கலைஞனின் மனக்கொதிப்பைக் காணலாம். சமூகத்தின் அசமத்துவம் கண்டு ஏற்படும் கொதிப்பு அது. கொதிநிலையில் வாழ்பவனே உண்மைக் கலைஞன்.
கலையில்
ஒரு வெறியோடு
தணியாத தாகத்தோடு
வாழ்ந்த அக்கலைஞன் வாழ்வு சோகமயமானது
 » பேராசிரியர் மௌனகுரு (முகநூல் நினைவேந்தல் பகிர்வு ஏப்பிரல் 2020)

«நடிப்புக் கலையை ஒரு வெறியோடு நேசித்து, தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, என மேடைகளிலும், கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு, நெஞ்சுக்கு நீதி, என ஈழத்துத் திரைப்படங்களிலும், தனித்துவமான முத்திரை பதித்த கலைஞன்.
புலம் பெயர்ந்து வாழ்ந்த மண்ணிலும் கூடத் தன் முதுமையைப் புறந்தள்ளி, இன்றைய தலமுறையோடும் இணந்து, பல கலைப் பங்களிப்புகளை வழங்கி வந்தவர். 2016 இல் பாரிஸ் மண்ணிலே ஜ.பி.சி.தமிழ் நடத்திய விழாவிலே, எனது கையால் அந்த மூத்த கலைஞனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது.
 » - பி.எச்.அப்துல் ஹமீத் (முகநூல் பகிர்வு ஏப்பில் 2020)

« இவர் நாடக, திரைப்பட நடிகர். `நிர்மலா` என்கிற இலங்கைத் தமிழ்ப் படத்தின் தயாரிப்பாளர். உடல் நலக்குறைவினால் ஓய்வு தேவைப்பட்ட நிலையிலும் உற்சாகமாக உரையாடினார். தான் ஏற்ற பல கதாபாத்திரங்களாக உடனுக்குடன் மாறி நீண்ட வசனங்களை குன்றாத ஞாபக சக்தியுடன் நாடக பாணியில் தகுந்த ஏற்ற இறக்கத்துடன் பேசி ஆச்சர்யப்படுத்தினார்.
தமிழ்ப்பட உலகம் இவரை ஒரு நடிகராகவாவது கவனிக்கத் தவறிவிட்ட து என்றே நினைக்கத் தோன்றியது. » அம்ஷன் குமார்  (முகநூல் நினைவுப் பகிர்வு ஏப்பிரல் 2020)

இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிப்பதில் தடுமாற்றம் ஏற்படும் காரணிகள் பற்றிய அவரது வெளிப்பாடு இப்படியாக இருந்தது. 

« நமது சின்ன மார்க்கெட்டை (இலங்கையில் மட்டும்) முற்றுகையிட்டிருக்கும் ஏராளமான இந்தியத் தமிழ்ப் படங்களை முறியடிக்கக்கூடிய பணம் செலவு செய்து படம் உருவாக்க முடியாமை. தென்னிந்தியாவில் நமது படத்தை வெளியிட அனுமதிக்கட்டும் அல்லது அனுமதி பெற்றுத் தரட்டும் சவான படங்களை எம்மால் தர முடிந்திருக்கும். இலங்கையில் தமிழர் சிங்களப் படங்களை எடுக்க முடியுமாயின் ஏன் தமது சொந்தப் பாசையில் எடுக்க முடியாது ? அமெரிக்காவில் ஆங்கிலப்படம் எடுக்கிறார்கள் இதனால் இங்கிலாந்தில் படம் எடுக்காமலா இருக்கிறார்கள் ? இங்கிலாந்திலும் ஆங்கிலப்படம் எடுக்கத்தானே செய்கிறார்கள். இவர்களது விநியோகம் பரந்து செல்கிறது. இதுதான் இலங்கைத் தமிழ்ப்படங்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழிற்கு இந்த நிலை இல்லை.»
  
என ஏக்கத்துடன் வெளிப்படுத்திய ஈழம் தந்த வாழ்நாள் கலைஞர் ஏ. ரகுநாதன் கூற்றின் நியாயம் மிக ஆழமானது.


« 2004 ஜூன் மாசம் பாரிஸ் 10ல் "செயின்"  நதிக்கு அருகாமையில் அமைந்த கலைக்கூடத்தில் எனது முதலாவது தனிநபர் ஓவிய காண்பிய நிகழ்வு நடந்தது. ஓவிய நிகழ்வுக்கு பல தமிழ் ஆளுமைகளும் சமூகமளித்திருந்தனர். எல்லோரும் புதுமுகங்களாகவே எனக்கு அறிமுகமானார்கள். உயரமான உருவம், நீண்ட தலைமுடியுடன் திரு.ரகுநாதன் ஐயாவும், கட்டையான கம்பீரமான தோற்றம் உடைய கி.பி. அரவிந்தனும் ஓவியங்களை  பார்வையிட வந்திருந்தனர். நான் நெகிழ்ந்தும்  பெருமிதமும்  கொண்டேன். இதன் பின்னர் புகலிடத்தில் உருவான "முகம்" படத்தின்  இயக்குனர் "அருந்ததி மாஸ்டரின்" கடையில் ரகுநாதன் ஐயாவை காண்பது வழமையாக இருந்தது. எப்பொழுதும் உற்சாகமான குரலில், சரளமான சிங்களமொழி நடையில் - அவரிலும் இளமையான என்னை  "அங் - அய்யே, கோகொமத?" (ஆ -அண்ணா எப்படி சுகம்)   என்று நகைச்சுவையாக சுகம் விசாரிப்பார்.  நானும் பதிலுக்கு சிங்களத்தில்  "ஓ - மங் கொந்தை, மல்லி  கோகொமத?" ( ஓம் - நான் நலம், தம்பி எப்படி சுகம்)  என்று ஆரம்பித்து மீதி உரையாடல் தமிழில் கலை சார்ந்து தொடரும். சென்ற வருடம் நோய்வாய்ப்பட்டு உள்ளார் என அறிந்து நானும் முகுந்தன் அண்ணாவும் "மேற்குத் தொடர்ச்சி மலை" இயக்குநர் லெனின் பாரதியும்  ரகுநாதன் ஐயா இல்லத்திற்குச் சென்றோம். ஐயாவின் அனுபவத்துடன் கூடிய உள்மனம்,  புத்துணர்ச்சியுடன் இருப்பதையும், அவரது உடல் அதற்கு ஈடு கொடுக்காமல் வயது முதிர்ந்த நிலையில் இருப்பதையும் கண்டு எனது ஓவிய ஆசிரியரின் இறுதிக்காலம் மனதில் இழையோடியது. ‘வாழும்போதே வாழ்ந்த ஞாபகங்களை சேர்த்துவிட வேண்டும்’  என்று என் உள்மனம் உச்சரித்தது!! .. » எனப் பகிர்கிறார் இளம் ஓவியர் விபி வாசுகன் (பாரீஸ்)


« தனது உடல் இயலாமையை வெளிப்படுத்தாமல் "இப்போது விட்டாலும் ஒரு படம் செய்யமுடியும்" என்றார். அவரிடம் இருந்து ஒரு கதையும், அதற்கான விளக்கங்களும், குறிப்புகளும் வேகமாய்ப் பிரவகித்தன. அவர்களது வரவேற்பறை, திடீரென ஒரு படப்பிடிப்புத் தளமாக மாறியது போலிருந்தது. அக்கதை திரைப்படமாவது சாத்தியமா என யோசிக்காமல் அவர் அந்தக் கணத்தில் வாழ்ந்தார்.

ஆச்சரியம் தந்த அந்தக் கலைஞன் இனி இல்லை. நண்பர் எஸ்.கே.ராஜன் பகிர்ந்த செய்தி நம்ப முடியாத ஒன்றாய் இன்றைய மாலையை இருளில் கலக்க வைக்கிறது. கலையை எப்படி ஒருவன் நேசிக்க முடியும் என மற்றோருக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு கலைஞன் இன்று கொரோனாவின் மரணப் பட்டியலில் இணைந்தார். » -
கவிஞர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே)



 « இந்தச் சமுதாயம் புத்தன், யேசு, காந்தி சொல்லியே திருந்தவில்லை. இந்த ரகுநாதன் சொல்லித் திருந்துமென்று நான் நினைக்கவில்லை. இது என் தொழில். இதன் மூலம் இலங்கைத் தமிழனாலும் முடியும் அவனிடமும் ஆற்றலுண்டு என்பதை உலகறியச் செய்வதென்பதே என் அவா. இதற்கு ஏனைய தமிழரின் ஒத்தாசையும் இருந்தால் விரைவில் இலகுவாகச் சாதித்து காட்டலாம். இன்று விரும்பியோ விரும்பாமலோ தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த பல நாடுகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை நாம் பயன்படுத்தத் தவறக்கூடாது. »
-          நீங்கள் இந்தச் சினிமாத்துறை மூலம் நம் சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா ? அல்லது இதை ஒரு தொழிலாகக் கருதுகிறீர்களா ? என யோகன் கண்ணமுத்து வினவிய கேள்வியின் பதிலாக இது அமைந்திருந்தது. (ஓசை ஒக்ரோபர் 1993)

« மனதில் உறுதி வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கிய பொருள் கைப்படவேண்டும் இந்த பாரதியின் வரிகளுக்கு ரகுநாதன் மிகப்பொருத்தமானவர். எந்த சூழ்நிலையிலும் கலங்காத மன உறுதியுடையவர். பிறருக்கு நல்லதையே என்றும் நினைப்பவர். அவருக்கு நெருங்கிய பொருள் என்றால் நாடகம், திரைப்படம் என்பவைதான் » ஈழப் பல்துறைக் கலைஞர் கே எஸ் பாலச்சந்திரன் (தாய்வீடு – செப் 2010)

0000


தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள் 114 – நடுவு நிலைமை)

22.04.2020 புவியெங்கும் விரவிய வாழ்வைத் தொடரும் பெரும்பாலான ஈழத் தமிழரது தொடர்பூடகத் தகவல் பரிமாற்றங்களில் இடம்பெற்றிருந்தது நம் மண்ணின் வாழ்நாள் கலைஞர் ஏ ரகுநாதன் அவர்களது இறப்புத் துயர் பகிர்வு. மௌனித்து உறைந்தோம்! பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதிதான் ! ஆனாலும் சில இறப்புகள் அகாலங்களாக அமைந்துவிடுகின்றன. பல்வேறு தேசங்கள் கடந்த இவரது நீண்ட பயணம் பிரான்சில் கொரோனாவின் கோரப் பதிவாக முடிவுற்றது.

புவியின் தொடர் அசைவில் 2020 தொடங்கிய வருடம் ‘மாற்றம் ஒன்றே மாறாதது !’ எனும் இயங்கியலை ஓசையில்லாது வெளிப்படுத்துகிறது ‘கொரோனா’ தீநுண்மி. கடந்த இரு தசாப்த காலங்களுக்கு மேலாக விரிவடைந்த உலகமயமாக்கல் கார்ப்பரேட் பெருநிதிய இலாபச் சந்தைப் பரவல் தந்த அதிநுகர்க் கலாச்சாரத்தில் சிக்குண்ட உலக மக்கள் கூட்டம் திகைத்து உறைந்தது. பரபரப்பாக நேரத்தைத் தொலைத்தவர்களாக வாழப் பழகிய மனிதர்கள் திடீரென தத்தமது இல்லங்களில் முடக்கப்பட்டனர். விரிவடைந்த விஞ்ஞான யுகத்தில் ஏதிலிகளாக செய்வதறியாது தவித்த மனித வாழ்வை 2020 வரலாறு பதிவு செய்துவிட்டது. நாளாந்தம் கொரோனா தாக்கத்தால் இறக்கும் மனிதர்களது விபரத்தை நாடுகள் வாரியாக பட்டியலிடப்பட்ட ஊடகச் செய்திகள் கண்டு மக்கள் அரண்டு போயினர். இப்படியான ஒருநாளில் எம்மோடு பாரீசில் வாழ்ந்து கொண்டிருந்த 67 ஆண்டுகள் தொடர் கலைப் பயணத்தையுடைய முதிர் கலைஞர் ரகுநாதன் அவர்களது காலமாகிய தகவலும் வந்தடைந்தது.

சூழலுடன் தன்னைத் தகவமைத்து எதையும் மகிழ்வோடு ஏற்பவராக ‘நல்லதை நினைத்து நல்லதைப் பகிர்ந்து நல்லதைப் பாராட்டி மகிழ்ந்தவர்’ கலைஞர் ரகுநாதன். வாலிபப் பருவத்தில் தான் ஏற்றுக் கொண்ட பெரியாரியக் கொள்கையை வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தவர். « ஈழக் கலைஞர்களில் சுபமங்களா காலச்சுவடு தீராநதி காக்கை என நீழும் சஞ்சிகைகள் முதல் ஆனந்தவிகடன் குமுதம் என வெளியாகும் வாராந்திரிகள் வரையில் பன்னெடுங்காலமாக வாசிக்கும் ஒரு வாசகராக இவரைத் தவிர வேறு யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. » எனப் பதிவு செய்கிறார் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன். தினகரன் ஆசிரியராக பேராசிரியர் கைலாசபதி பணிபுரிந்தபோது கொழும்பில் மேடையேறிய இவரது நாடகம் தொடர்பாக ஒரு விமர்சனம் வெளிவந்தது. அதில் ஒரு பாத்திரம் பேசிய மொழியாடல் ரகுநாதனுக்குரியதாக இருந்ததேயன்றி அப்பாத்திரக்காரனுக்குரியதாக இருக்கவில்லை என விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனை வாசித்த ரகுநாதன் அடுத்த நாளே பேராசிரியர் கைலாசபதியைச் சந்தித்து அதனை ஏற்பதாக ஒப்புக் கொண்டதைக் கண்ட பேராசான் ‘ரகு ! நீ விமர்சனங்களை ஏற்கும் கலைஞனாக இருக்கிறாய் எனவே நீ சாகும்வரை கலைஞனாக இருப்பாய் !’ என்றாராம். இதனை எத்தனையோ தடவைகள் நினைவுகூர்ந்துள்ளார் கலைஞர் ஏ ரகுநாதன். பேராசான் கைலாசபதியின் கணிப்பு மிகச் சரியாகவே அமைந்திருக்கிறது.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வாராந்தம் மூன்று முறை இரத்தச் சுத்திகரிப்புடன் வாழ்வைத் தொடர்ந்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் ஒருபோதும் தன் கலைசார் பயணத்தை முடக்கவே இல்லை. உலகம் தழுவிய கலைப் பயணங்களுடன் செயற்பட்ட வண்ணமே இருந்தார். இவரது உற்சாகப் பயணத்திற்கு பக்க துணையாக இருந்தவர் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இவரோடு இணைந்த அன்புத் துணை சந்திரா அம்மையார் என்பதை பதிவு செய்ய வேண்டும். இவர் பெரிதும் நேசித்தது இவரது தாயாரைத்தான். 23வயதில் கணவன் இறந்த துயர்தாங்கிய விதவைப் பெண்ணாக மூன்று பிள்ளைகளுடன் மலேசியாவிலிருந்து நாடு திரும்பி இலங்கை நவாலியில் வாழ்வைத் தொடர்ந்தவர். இவர் தனது 94வது வயதில் காலாமாகிய தகவல் அறிந்த நாளில் மிக நீண்ட நேரம் அவரது தாயார் நினைவுகளுடன் என்னோடு உரையாடிய அந்த குரல் மொழி மிகக் கனதியானது. இது புலம்பெயர்ந்து தொலைவில் வாழத் தலைப்பட்ட பலரால் சுமக்கத் தடுமாறும் இழப்புப் பொதி.

பன்முகத் தொடர்புகளுடன் தேசங்கள் கண்டங்கள் கடந்து நீண்ட இவரது பயணத்தில் அனுபவங்கள் நிரம்பிக் கிடந்தன. இதனை மீட்பவராக நிறைந்த ஞாபகத்துடன் கடைசிவரை உரையாடிய அவரால் தொடர்பு கொள்ளும் வேளைகளில் அடிக்கடி பாடப்பட்ட பாரதிபாடல் காதில் ஒலித்த வண்ணமே இருக்கிறது. ஒரு தாத்தாவின் உணர்வுப் பகிர்வாக இரசித்து உருகிய பாவத்தில் வெளிப்பட்ட இப்பாடல் காவும் கரு எதிர்காலச் சந்ததிக்கு வழங்கிய வாழ்வு நெறியாகவே கொள்ள முடியும்.

கொட்டு முரசே! கொட்டு முரசே!

கொட்டு முரசே! கொட்டு முரசே!
அன்பென்று கொட்டு முரசே! -மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;

மக்கள் 
அத்தனை பேரும் நிகராம்…..

கொட்டு முரசே! கொட்டு முரசே!
அன்பென்று கொட்டு முரசே

இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்...

கொட்டு முரசே! கொட்டு முரசே!
அன்பென்று கொட்டு முரசே-

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் பெருக்கிடும் வையம்;


சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு

தன்னில் பெருக்கிடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.




பாரதியார் பாடல் – (ஓர் இரவு திரைப்படம் 1951 – ஆர். சுதர்சனம் இசை)

000



நினைவேந்தல் :

‘சாதிப்போம் ! – சாதிப்பவர்களுக்குத் துணைநிற்போம் ! மனிதத்தைப் போற்றுவோம் !’
‘நல்லதை எங்கு காணுற்றாலும் பாராட்டி மகிழ்வோம் !’
என வாழ்ந்த
ஈழம் தந்த வாழ்நாள் கலைஞர் . ரகுநாதன்
(மே 05, 1935 கிமாஸ், மலேசியா - ஏப்ரல் 22, 2020 பாரீஸ், பிரான்சு)



2000களின் தொடக்கத்தில் பாரீஸில் வெளிவந்த 'பேரன் பேத்தி' குறும்படம் திரையிருட்டில் காண்பிக்கப்படும் போது கடைசிக் காட்சியில் பெரியவர் தாகத்துடன் தண்ணீருக்காக அவதிப்படுகிறார்... அங்கிருந்த முன் வரிசையிலிருந்த சிறு குழந்தையொன்று "அம்மா! தாத்தாவுக்கு தண்ணி கொடு!!" என்று வீறிட்டதான நிகழ்வை நேரில் காணுற்ற எவராலும் மறக்க முடியாது.  பரா மொழி தெரியாத பெயரர்களின் தவிப்பை இந்தச் சட்டகத்தினுள் அடக்கியிருந்தார். இதற்கு முன்பு வெளிவந்திருந்த 'அழியாத கவிதை' குறும்படத்தில் காரின் பின் டிக்கிக்குள் இருந்து பெரியவர் வெளிப்படும் போதில் உஸ்...... எனப் போடாதவர்கள் மிகக்குறைவு. புகலிடப் பெயர்வு வாழ்வின் தாக்கத்தை அஜீவன் இந்தச் சட்டகத்தில் அடக்கியிருந்தார்.

இந்தப் பெரியவர்தான் எங்களுடன் வாழ்ந்த, தன்னை எப்போதும் பொடியனாகவே பிரதிபலிக்கும் ஈழக் கலையுலக இளைஞன் ரகுநாதன்.  இவர் கடந்து வந்துள்ள இந்த 85ற்குள் 67 வருட தொடர் கலையுலகப் பயணம், மூன்று நூற்றாண்டுக் கலையுலக வித்தகர்களுடனான அனுபவ வாழ்வு, இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள தமிழ்க் கலைஞர்களுடனான கலைப்பயணம், ஈழத்துக் கலைக் கனவு மேம்பாட்டுக்காக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நம்பிக்கையுடன் பயணித்துக் கண்ட பட்டறிவு, ஈழத்தமிழன் சிதறுண்டவனாகி பூமிப் பந்தில் விசிறப்பட்டிருக்கும் புலம் பெயர்வு வாழ்வில் தானுமொருவனாகித் தொடர்ந்த அடுத்த பரிமாணத்திற்கான கலைப் பயணம் என இவரது பயணத்தைக் குறுக்கு வெட்டில் பதிவாக்கினால் ஈழத்துவரலாற்றின் இன்னுமொரு முக்கியமான ஆவணம் கிடைக்கும்.


ஆடிய கால்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கும், உழைத்த கைகள் உழைத்துக் கொண்டே இருக்கும் என்பார்கள் அதை இவருடன் நெருங்கியவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பர். மேடை நாடகத்துடன் அறிமுகமாகி வானொலி, திரை, குறுந்திரை எனவும் புதியதாகப் பிரசவிக்கும் கலை வெளிப்பாடுத் தளங்களிலும் இவரது பயணம் தொடர்ந்தது ஆச்சரியமானதொன்று. கலைப்பயணத்தில் எல்லாமாகி இருந்தாலும் ஈழத்துக் கூத்து தொடர்பாக இவருக்கிருக்கும் நேசம் அலாதியானது. தருணம் கிடைக்கும்போதெல்லாம் தன்னை ஒரு கூத்தராக வெளிப்படுத்த முன்னிற்பார். இதனால்தான் இவர் தனக்கென்று நிறுவியுள்ள அமைப்பிற்கு "தமிழாள் கூத்தவை" எனப் பெயரிட்டுள்ளார் போலும்.  இந்தப் பெயரிடல் இவரது ஆழ்மனத் தெரிவு. ஆக ஆழ் மனத்தில் ஈழத்துக்கான கலை பதிவுற்றிருக்கிறது.
ஈழத்துத் தொன்மக் கலை கூத்து, இதனுள்ளிற்தான் எமக்கானதான அடையளக் கலைப் பொக்கிசங்கள் புதைந்து கிடக்கின்றன. அரங்கியல் நிகழ்த்துக் கலையின் வலாற்றில் சடங்குகள் முக்கிய தொடக்கப் புள்ளி என வரலாற்றியலில் பார்க்கிறோம். மனிதனின் மனம் சார்ந்த விரிவுத்தளத்தில் உதயமாவதும் மற்றைய மனிதர்களின் மனதினுள் ஊடுருவி, ஆர்கசித்து மனிதரை மானிடராக பரிணமிக்கவைப்பது கலை இலக்கியத்தின் முக்கியமான பணி. மிக வேகமாக விரட்டப்படும் புதிய உலகமயமாகச் சூழலிலும் பரவலான மானிட நேசிப்புக்குரியதான இடத்தில் கலையுலகு புதிய விஞ்ஞான உத்திகளினூடாகப் பயணித்த வண்ணம் இன்றும் இருக்கிறது. சமூக இயற்கை இயங்கியல் போக்கில் தன்னை இயைந்து தான் நேசிக்கும் கலை வெளிப்பாடுகளை காலத்துக்கேற்ற புதிய சூழலிலும் தகவமைக்கும் இவரால் பலர் கவரப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. இதில் நானும் ஒருவன். இவர் எங்களுக்கெல்லாம் மானுட நேசிப்புடனான ஒரு தந்தை. ஈழத்து வரலாற்றில், வாழும் போதே வாழ்த்தும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாகப் பதிவுறும் இந்தப் பவளவிழா நிகழ்வில் பெரும்பாலான ஆர்வலர்கள் பங்கேற்றதானது ஒரு சிறந்த உதாரணமாகும்.

தொண்ணூறுகளின் கடைசியில், புதிய சந்ததியினராக தடமிடப்போகும் புலம் பெயர் ஈழத்தமிழர் தொடர்பான சமூக அக்கறையுடனான சந்திப்புகளில் கலைத்தளத்தின் அவசியம் எங்களால் நன்கு உணரப்பட்டது. அப்போது கலை- இலக்கிய படைப்பாளர் தனித்தனிக் குழுமங்களாகவும் பெரும்பான்மை மக்கள் வீடியோ, சஞ்சிகைகளை இலகுவாகவும் மலினமாகவும் பெறும் கலாச்சார விற்பனை நிலையங்களின் நுகர்வோர்களாகவும் கொண்டதாய் சமூகச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.

இவ்வேளையில் நம்மவர் கதை சொல்லிகளாகி நம்பிக்கையூட்டும் குறுந்திரைப் படங்களை தந்திருந்தார்கள். இதற்கான போட்டிகளும் நடந்து உற்சாகமளிப்பதாக இருந்தது. இந்தக் குறுந்திரை முயற்சி எம்மைப் போன்ற பலரை ஈர்த்தது. இனிவரும் காலத்தில் பெரிய அளவில் நம்மவர் படைப்புகள் வெளிவருவதற்கான நிறைவான சாத்தியப் பாடுகளை இதில் எம்மால் இனங்காண முடிந்தது. எதிர்காலச் சந்ததியினரின் சமூக அக்கறையின் ஈர்ப்பால் இவ்வகைப் படைப்புகள் பரவலான மக்கள் தளத்திற்குப் போக வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு நாம் கூறிய ஆலோசனைகள் கேட்பாரற்று காற்றில் சங்கமித்து கரைந்து போயின. நம்மவர்களால் நிகழ்த்தப்படும் எழுத்து - காட்சி ஊடகங்கள் பெரும்பான்மை மக்களின் இயந்திரத்தன இரசனைக்குத் தீனி போடும் ஆர்வத்துடனேயே செற்பட்டன.

சமூக அக்கறையின் காரணமாக தொலைவில் தெரியும் பிரகாசத்தை மக்களிடம் கொண்டு சென்று மக்களின் இரசனையையும் படைப்பாளரது எண்ணங்களையும் சங்கமிக்கும் ஒரு தளம் காலத்தின் அவசியமானது. 'நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்ற விருது வாக்கியத்துடன் சலனம்  பிறந்தது. எதிர்கால ஈழத்தமிழரின் வாழ்வுப் பதிவுகளுக்காக அப்பால் தமிழ் இணையமும், கலை வெளிப்பாட்டுத்தளமாக சலனமும் சமூக அக்கறைத் தொண்டு நிறுவனங்களாகின. இதனூடான பயணத்தில் கலையுலக நட்புடன் ரகுநான் ஐயா எம்முடன் இணைகிறார். 'வாழ்க வளமுடன்' என்ற அழைப்புக் குரலுடன் தொலைபேசி முனையில் விளிக்கும் தன் அணுகு முறையை இன்று எம்போன்ற பலரும் பரவலாக மேற்கோள்ளும் பரிவுத் தெறிப்புக்குச் சொந்தக்காரர் இவர். ஆனால் இவர் தொடர்பான அறிமுகம் எனக்குக் கிடைத்தது சுவையான வேறோரு கதை.


1970 கள், ஈழத்தின் வடபகுதியில் இளையோர் மத்தில் சுதேசியம் தொடர்பான சுயதேடலுக்கான விழிப்பு பரவலாக வெளிப்பட்ட காலம். யாழ் நகரத்தைக் கோலாலகலமாக்கிய உலகத் தமிழாராட்சி மாநாடு கிணற்றுத் தவளையாக இருந்த இளையோரை வெளியுலகில் கொண்டுவந்து விட்டிருந்தது. 'வெளிக்கிடடி விசுவமடு' நாடகம் மற்றும் 'இலண்டனில மாப்பிளையாம் பொண்ணு கேக்கிறாங்க.... ஐயையோ வெட்கக் கேடு...' பொப்பிசைப்பாடல் மற்றும் வாடைக்காற்று திரைப்படம் என மக்கள் மயமான ஈழத்தமிழர் படைப்புகள் இளையோரின் பெரும் கவனத்தைக் குவித்திருந்தன. இக்காலகட்டத்தில் உருவாகிய யாழ் பல்கலைக்கழகத்தினூடாக 'கண்ணாடி வார்ப்புகள்' போன்ற புதிய அரங்க நிகழ்வுகளும் வெளிப்படத் தொடங்கின. இலங்கையில் இதுவரை அறுபதுகளில் சமுதாயம்(1962) முதலாக 1993இல் வெளிவந்த சர்மிளாவின் 'இதயராகம்' வரை சுமார் 28 திரைப்படங்கள் பதிவு பெற்றுள்ளன. இதில் 1970களில் மட்டும் 16 திரைப்படங்கள் வெளிவந்துள்ளமையை அலட்சியப்படுத்திவிட முடியாது. இதிலும் யாழ் ராணித் திரையரங்கில் 'வாடைக்காற்று' திரையிட்ட அதே வேளையில் யாழ் லிடோ திரையரங்கில் 'தென்றலும் புயலும்' ஓடியதை கவனமெடுக்கத்தான் வேண்டும்.

இந்தியத் திரைப்படங்கள் மேளதாள வரவேற்புடன் கோலாலகலமாகத் திரையிடப்பட்ட காலம் அது. திரைப்பட இரசிகர் மன்றங்களின் அட்டகாசங்களும், சீட்டுப் பெறக் காத்திருக்கும் கூட்டத்தின் மேலாக தாவிச் செல்லும் அடாவடிக் குழுவினரின் செயல்களையும் இலகுவில் மறக்க முடியுமா? புதிய படங்கள் 8 காட்சிகளாகவும் 9 காட்சிகளாகவும் போட்டா போட்டியாக அப்போது திரையிடப்படும். சீட்டுகளை திரையரங்குகளில் பெறமுடியாது தவித்த வேளையில் பிளாக்கில் யாழ் கடைகளில் சீட்டுப் பெற்று படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் சிவாஜி பித்தன். சிவாஜியின் திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ரசிகர்களில் ஒருவன். இதனால் நட்பு வட்டத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் நடப்பது சகசம். இலங்கையில் உருவாகும் தமிழ்ப்படங்கள் தொடர்பாக பரிசீலனைக் கவனத்தைத்தானும் இந்த சிவாஜிப் பித்து விடவில்லை. கௌரவம் வெளிவந்திருந்த போது என் ஊர் நண்பன் குவின்டஸ், சிவாஜியின் 'ஓவர் அக்சன்' பற்றி கிண்டலாக எடுத்துரைப்பான். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாதிருந்தது. பொறாமையால்தான் இப்படியெல்லாம் கதைப்பதாக எண்ணிச் செல்வேன். இதன்பின் வெளிவந்திருந்த பைலட் பிரேம்நாத் தொடக்கம் பட்டாக் கத்தி பைரவன் வரையிலான சிவாஜி படங்களை எனது மூளை அவனது விமர்சனப் பார்வையுடனனேயே பார்க்க வைத்தது. எனது சினிமா இரசனை மேம்பாடடைந்து. சிவாஜி பித்தை வெளியேற்றி எனது சினிமா இரசனை அறிவுக்கு வழிகாட்டிய குவின்டஸை பின்னர் வாஞ்சையுடன் கைகுலுக்கினேன்.

இக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புதியதொரு உலகு தெரிய ஆரம்பித்திருந்தது. அன்னக்கிளியால் தமிழ்த் திரை இசைஞனாக இளையராசாவும், 16 வயதினிலே பாராதிராசாவும், முள்ளும் மலரும் மகேந்திரனும் கமெராவால் கதை சொன்ன ஒளிஞானி பாலு மகேந்திராவும் என சினிமா தொடர்பான பன்முகக் கலைநுணுக்கங்கள் புலப்பட ஆரம்பித்தன. நிறையவே படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இதில் நெஞ்சம் மறப்பதில்லை 'கல்யாண்குமார்' என்ற இயல்பான நடிகர் பற்றி இந்தச் சினிமா இதழ்கள் பெரிதாக எழுதாத வெறுமை தெரியவந்தது.

கொழும்பில் பணியாற்றிய எனது அண்ணன் யாழ் வரும்போது பொன்மணி மற்றும் குத்துவிளக்கு படம் பற்றி நிறையவே சொல்வான். இவை எமது தேசியப் படங்கள் இம்முயற்சியை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வான். அப்போது இலங்கையிலும் சிலபேர் தாங்களும் கதாநாயகர்களாக நடமாடும் கனவுகளுடன் படாதபாடுபடுகிறார்கள் எனத்தான் நினைப்பேன்.

யாழ் பல்கலையில் கற்கும் காலத்தில் புதிய நட்பு வட்டமொன்று உருவாகி இருந்தது. இந்த நட்புவட்டம் ஒன்றாகவே படம் பார்த்து விமர்சன இரசனை செய்யும் பக்குவத்துடன் இருந்தது. படம் முடிய றிக்கோ ஓட்டலில் றோல் சாப்பிட்டவாறு நிறையவே விலாவாரியாக அலசலில் ஈடுபடுவோம். இம்முறையால் கவரப்பட்டதாலோ என்னவோ எம்முடன் படிக்கும் ரகுநாதன் என்ற சகமாணவன் அப்போது வெளிவந்த 'தெய்வந்தந்த வீடு' பற்றிச் சொல்லி எங்களையும் அழைத்தான். சாந்தி தியேட்டரில் பார்த்த அந்தப்படம்தான் இந்த ஏ.ரகுநாதனை எனக்கு அறிமுகம் செய்தது.  தலைமுறை கடக்கும் நீண்ட கதை. பிரமாண்டமாக எடுத்திருந்தனர். சிவாஜியின் தில்லானா மோகனாம்பாளின் பாதிப்பின் பிரதியாக வெளிப்பட்ட இந்தப் படம் எம்மை நெளியத்தான் வைத்தது. அப்போது எம்மை அழைத்த நண்பனிடம் "டேய்!  உன்னடைய பெருடையவர்தான் இப்படத்தின் நாயகன் என்றதால்தானே எங்களை இப்படத்துக்கு அழைத்தாய்!" என்றபோது அவனால் ஏதுமே சொல்ல முடியவில்லை.
இப்படத்தை ஏன்தான்தான் இவ்வளவு சிரமப்பட்டு எடுத்தார்கள்? என்ற கேள்வி என்னை விடாது அரித்துக் கொண்டே இருந்தது. பின்னொரு காலத்தில் ஈழத்தமிழனாலும் முடியும் என்றதான தன்முனைப்பின் உந்துதலால் கலைத்தளத்தில் வெளிப்பட்ட ஒரு கீற்றுதான் இது என்பது தெரிந்தது. எமக்கானதோர் கலை இருப்புக்காக முனைவோராகக் காணப்பட்ட ரகுநாதன் போன்றோர் வாஞ்சைக்குரியராகினர்.

இவருடன் புகலிட வாழ்வில் நெருங்கிப் பழகியபோது, பதின்ம வயதில் தேசங்கடந்த வாழ்வின் இருப்பாலும், மதம் சார்ந்த குறுட்டு மூடநம்பிக்கையில் தான் பெற்றிருந்த அனுபவத்தால் பெரியாரியத்தை தழுவியதையும் அறியமுடிந்தது. இயல்பாக முகிழ்ந்திருந்த இக்கொள்கையை கடைசி வரை கடைப்பிடித்த இரவது ஆளுமை என்னைப் பெரிதும் கவர்ந்தது.
பாரீசில் 90களின் கடைசியில் ரகுநாதன் ஐயாவை ஒரு குறும்படப் போட்டியின் நடுவர்களில் ஒருவராகச் சந்தித்து கைகுலுக்கியபோது புளங்காகிதமடைந்தவனானேன். நீண்ட வெண்முடியுடன் நிமிர்ந்த திடகாத்திரமான உருவத்துடன் குழந்தைபோல் பழகும் இவரது சுபாவம் தனிக் கவனத்தைக் கொடுத்தது. பின்னர் வில்தானூஸ் கிராமத்தில் சலனம் நடாத்திய குறும்பட மக்களரங்கில் இவரும், புதிய நடிகனாக அறிமுகமாகிய மோகனும் கலந்து மக்கள் இரசனையுடன் சங்கமித்தனர். இந்நிகழ்வில் நடிகன் தொடர்பாக இவர்கூறிய எண்ணம், "நாங்கள் நடிகர்கள்தான் ஆனால் உங்களைப் போன்ற சாதாரண மக்களில் நாங்களும் ஒருவர் என்பதை உற்றுக் கவனிக்க மறக்காதீர்கள்.  நாங்கள் மின்னொளி பீச்சும் மேடைகளிலும், கமெராக்களுக்கும் முன் மட்டும்தான் நடிப்பவர்கள்." என்றதானது என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாது அப்போதுதான் வெளிவந்திருந்த 'விலாசம்'  படத்தின் நாயகன் மோகனுடன் சினேக பாவத்துடன் பழகிய மானிட நேசம் கவனங்கொள்ள வைத்தது.

பின்னர் ஈழவர் திரைப்பட மன்றம் வெளியிட்ட குறுப்பட ஒளித்தட்டு நிகழ்வில் புதியதாக கலையுலகில் பிரகாசத்த இளையோர் வதனன், குணா போன்றோரை கௌரவித்து ஊக்குவித்த செயல் மிகவும் பாராட்டப்பட வேண்டிய உதாரண நிகழ்வாகும். தத்தமது படைப்புகளே ஆகச் சிறந்தது என நினைத்து சிறு சிறு குளாமாகச் சுழலும் கலை இலக்கிய வட்டங்கள் ஒருத்துவமாகும் சங்கமிப்புகளாக இந்நிகழ்வுகள் அமைந்திருந்தன. 'கலைஞர்களால் என்னத்தைச் செய்ய முடியும்?" என்ற இளக்காரத் தொனியுடன் காணப்பட்ட சமூகத் தளத்தில், சமூக ஆர்வலராகக் கலந்துகொண்ட எமக்கு நம்பிக்கையூட்டிய உதாரண மானிடர்களாக இக் கலைஞர்கள்தான் காணப்பட்டனர். இதில் குறிப்பிடத் தகுந்தவர் ரகுநாதன் ஐயா என்பதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன்.

ஈழத் தமிழர் வாழ்வில், கலை இலக்கியத்தில் (பரதநாட்டியம், நாதசுரம் தவிர்த்து) ஈடுபட்டோர் பெரும் சம்பாத்தியங்களை ஈட்டியவர்களான சரித்திரம் கிடையாது. இதில் ஈடுபாடு காட்ட முனையும்போது குடும்பமும் சுற்றமும் "வேலை வெட்டியில்லாதவர்கள், லூசுகள், வெங்கிணாந்திகள், அலுக்கொசுகள், தற்புகழ் விரும்பிகள்....." போன்ற அடைமொழிகளுடன் தூர வைப்பதான வழக்கமே காணப்படும். இதனை நன்கு அறிந்திருந்த பின்பும் ஈடுபட முனைவோரை சாதாரணமானவர்களாக அலட்சியப்படுத்த முடியாது. தன்முனைப்பு கொண்ட முன்னனெடுப்பாளர்கள் பலர் இத்தகைய குளாங்களில் இருப்பதையும், இவர்களது தேவை இயல்பான சமூக அசைவியகத்திற்கு மிக அவசியமானதென்பதையும் உணர முடியும்.

முன்னைய தமிழ் திரையுலக சாம்பிராஜ்யத்தில் கோலோச்சிய எம்ஜியார் - சிவாஜி காலத்தில், வாழ்ந்த போர் வாள் என அடையாளப்படுத்தப்பட்ட எம் ஆர் ராதாவை இங்கு நினைவு கூர்கிறேன். இவரை பள்ளி ஆண்டு விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.

இதில் கலந்து கொள்ள மறுத்திருந்த எம் ஆர் ராதா பின்னர் அன்பால் கட்டுண்டவராகி இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், "உலகத்தில் எந்த வேலையையும் உருப்படியாகச் செய்யாது விட்டால் உடனடியாகவே வேலையிலிருந்து நீக்கி விடுவான் முதலாளி. ஆனால் நாம் செய்யும் தொழில் இதற்கு நேர் எதிரானது. பிழையாகச் செய்துவிட்டால் எமக்கு பழச்சாறு தந்து, சாமரம் வீசி, உற்சாகமாகச் பேசி மீண்டும் மீண்டும் திருப்பிச் செய்ய வைப்பார்கள். இவைதான் திரையில் பிரகாசிக்கும். இதைப் பார்த்துவிட்டு ஒழுங்காகப் பணியாற்றாத எம்மை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகளுக்கு அழைக்கிறார்கள்! இந்த இடத்தில் ஒரு அறிஞனையோ, ஒரு விஞ்ஞானியையோ அழைத்திருந்தால் அழைத்தவர்களுக்கும் சிறப்பு வந்திருப்பவர்களுக்கும் சிறப்பாக இருந்திருக்கும்!" எனத் திறந்த மனதுடன் கூறியதை இங்கு மீளப் பதிவிடுகிறேன்.

நுண்கலை மனிதரை உற்றுநோக்கிக் குவியப்படுத்தி எழுப்பும் சிந்தனைகளால் மானுடராக்கும்
தனக்கானதொரு கலை அடையாளத்தை வெளிப்படுத்தாத சமூகம் முழுமையானதாக கவனங்கொள்ளப்படாது.
‘உண்மை’ தாங்கிய சமூகக் கரிசனைப் படைப்புகள் தரும் கலைஞர்கள் - படைப்பாளிகள் தமது படைப்புகளால் காலம் கடந்தும் வாழ்வார்கள் !
எம் மத்தியில் வாழ்ந்த வாழ்நாள் கலைஞர் ரகுநாதன் ஐயாவுக்கு இறுதி வணக்கம் !

 25.09.2010 அன்று பாரீசில் நடைபெற்ற நிகழ்வு. இந்நூலைத் தொகுத்தவர் கவிஞர் கிபி அரவிந்தன். நிகழ்வை ஒருங்கிணைத்தவர் அறிவிப்பாளர் எஸ் கே ராஜென். அரங்க நிகழ்வை நெறிப்படுத்தியவர் நாடகர் -ஊடகர் -ஏடகர் ஏ.சி. தாசீசியஸ்


-
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!
சலனம் முகுந்தன்.
*****

இக்கட்டுரை 2010 செம்டெம்பரில் பாரீசில் நிகழ்ந்த பவள விழா நிகழ்வு மலரான 'சுட்ட பழமும்  சுடாத மண்ணும்' இல் இடம்பெற்றது.  இந்த மலரை தனது கல்வெட்டு ஆவணமாகக் கருதுவதாகவும் தனக்காக எழுதிய கல்வெட்டு ஆக்கங்களை வாசித்து அனுபவித்தவனாக தான் இருப்பது மிகுந்த மகிழ்வைத் தருவதாகவும் கூறி மகிழ்ந்திருக்கிறார். அத்தோடு தான் இறந்தபின் ‘இனியொரு கல்வெட்டு வெளியிடத் தேவையில்லை, துண்டுப் பிரசுரம் வெளியிடக் கூடாது, மரண நிகழ்வரங்கம் நடாத்தக் கூடாது,  நானில்லாதபோது எனக்கு நடித்துக் காட்டத் தேவையில்லை’ எனச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஒருவர் வாழும்போதே வாழ்த்தி மகிழும் ஏற்பாடாக இவரது பவளவிழா நிகழ்வு அமையப் பெற்றிருந்தது மிகச் சிறப்பானதாகும். அவரது ‘நினைவேந்தல்’ ஆக்கமாக காக்கை வாசகர்களுக்கு காலப் பொருத்தப்பாடுடைய சில மாற்றங்களுடன் பகிரப்படுகிறது.
000


நன்றி மே 2020 காக்கைச் சிறகினிலே 









Sunday, 14 January 2018

உலகமெல்லாம் விரவிய வாழ்வில் ‘தமிழ்’தான் எமக்கான அடையாளம்

தமிழர் திருநாள் 2018 பகிர்வு

உலகமெல்லாம் விரவிய வாழ்வில்
‘தமிழ்’தான் எமக்கான அடையாளம் :
‘வேற்றுமையில் ஒருத்துவம் காணும் தனித்துவநாள்’ – தைப் பொங்கல் நாள் : தமிழர் திருநாள்
'தமிழர் திருநாள்'
வள்ளுவர் ஆண்டு 2049

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’
‘காக்கை கரவா கரந்துண்ணும்..’ எனக் கூட்டமாக கூடி மகிழ்ந்து வாழும் மனித மனத்தின் பிரதிபலிப்பான கூற்றுகளை நாம் நம் முன்னோர் வழிகளில் கேட்டு அனுபவித்த தலைமுறையினர் நாம்.



ஆனால் மனிதர்களை 21வது நூற்றாண்டு உலகமயமாக்கிய கார்ப்பரேட் நிறுவனப் பொருளாதார அடிக் கட்டுமானத்தில் பயணிக்கும் ‘நுகரி’களாக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொருளாதார அடித்தளத்தின் நிர்வாக இயந்திரங்களாக ‘அரசு’ப் பொறிமுறை அடக்கமாகிவிட்டது. உலகை அளவிடும்  ஒரே அலகாகிவிட்ட பணத்தை நிர்வகிக்கும் வங்கிப் பொறிமுறையும் இவற்றையெல்லாம் இணைக்கும் உலகளாவிய தொலைத்தொடர்பு வலையமைப்பும் பின்னிய பாதைகளில் புவியின்  நிலம் - நீர்  - காற்றும் அனைத்து உயிரிகளும் கட்டுண்டு போய்யுள்ளன.

21வது நூற்றாண்டு  உழுதுண்ட (சாகுபடி) வாழ்வு (cultivation life) என்ற நிலையிலிருந்து நுகர்வு வாழ்வு (consommation life) ஆக்கிவிட்டிருக்கிறது. இது புவியின் முழுமையான உலகமயமாகிய நிலையை எய்திருக்கிறது. இந்த உலக மயமாகிய உற்பத்தியும் (production - தயாரிப்பு) - விநியோகமும் (distribution) உலகக் காப்பிரேட் நிறுவனங்கள் வசமாகிவிட்டன.  இன்றைய பெரும்பான்மையான மக்கள் நுகர்வோராகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய உலகு சந்தைப்படுத்துவோர் – நுகர்வோர் எனவாகப் பிளவுண்டிருக்கிறது.

உலகம் தழுவிய பெருநிறுவனத் தயாரிப்புகளாகியுள்ள உணவு உற்பத்தி முறைமையும், தொழிற்துறையும், பெரும் வணிக வளாகச் சுற்றுகளுக்குள் நுகர்வோராக ஒருங்கிணைக்கும் நகரமாக்கிய – மாநகரமாக்கிய அடுக்கு மாடித் தொகுப்புகளிலும் அதனையொட்டிய சேரிகளிலும் குவிக்கும் அசைவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இது தேசங்கள் – பிரதேசங்கள் – பிராந்தியங்கள் கடந்த எல்லையற்ற புலப்பெயர்வுக்கு அகன்றுசெல்ல நிர்ப்பந்திக்கிறது. கல்வி – சுகாதாரம் – மருத்துவம் போன்ற அடிப்படைச் சேவைகளும் சந்தை மைய இலாபநோக்கிலான நிறுவனங்களாக்கப்படுகின்றன. புதியதாகக் கட்டமைக்கப்பட்ட அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர் நாள் என மனித உள்ளுணர்வு நிகழ்வுகள் கூட சந்தைகளால் வடிவமைக்கப்பட்ட நுகர்வுக் கலாச்சாரமயமாகியுள்ளது. ஆடம்பர கவர்ச்சியில் திருமண நிகழ்வுகளும் – இறப்பு நிகழ்வுகளும் அடக்கப்பட்டு விட்டன. பண்பாட்டு நிகழ்வுகளும் இத்தகைய சந்தைப்படுத்திய நிகழ்வுகளாகி இயந்திரத்தனமாகிவிட்டன.

வாழ்வுக்கான பணம் தேடி அலைபவர்களாகிவிட்ட மனிதர்கள் வெறும் நுகர்வும் - வாழ்வும் மட்டும் போதுமென்ற நிலையையுடைய உயிரிகள் அல்லவே ! தமது வாழ்தலுக்கான புலப்பெயர்வுகளால் தம் மனவெளியில் சிதையும் ஆழப்பதிந்த பண்பாட்டு அடையாளத் தகவமைப்பில் அலையுற்று கவனம் கொள்கிறார்கள். இது தம்மையொத்த கூட்டத்தினை ஒருங்கிணைத்து மகிழும் நிகழ்வுகளைத் தேடுகிறது.

ஒவ்வொரு தனி மனிதரும் தம்மை அடையாளப்படுத்தும் ‘தான் யார் ?’ என்பதைக் கொண்ட தேடல்களில் தன்னை அறியும் முனைப்புடனே பயணிக்கின்றனர். இதனை தமிழ்ச் சமூகம் உலகளாவிய பரம்பலில் நேரடியாக அனுபவித்து எதிர்கொள்கிறது. இன்றைய ஈழத் தமிழர்களது வாழ்வு ஐந்திணைக் கோட்பாடுகளைக் கடந்த புவியெங்கும் சிதறிப் பரவிய (diaspora) நிலையைப் பெற்றிருக்கிறது. இது புதியதான பண்பாட்டு அடையாள ஒன்றித்தல் முறைமையைத் தேடி உசாவுகிறது. இந்தத் தேடலின் பெறுபேறுகள் பூர்வீகப் பரப்பின் நகர - மாநகரக் குடியேற்றல்களில் பொருத்தப்பாடுடன் இணையக்கூடியதாக அமைகின்றன.

தான் வாழ்ந்த ஐந்திணை மண்ணோடு பல்லுயிரி வாழ்வுடன் இயைந்து வாழ்ந்த நம் மூதாதையினர் கண்டெடுத்த அரிசிப் பண்பாட்டு நிகழ்வு ‘பொங்கல்’ நிகழ்வு. இந்தப் பொங்கலுடனான கூட்டிணைதல் நமது அடையாள ஒருங்கிணைவுக்கான சிறப்புடையதென்பதை சென்ற ஆண்டு தமிழ்நாடு கண்ட ‘காளை எழுச்சி’ கட்டியமிட்டிருக்கிறது.

............................................................................................................................................................
காக்கைச் சிறகினிலே (சனவரி 2018) இதழில் வெளிவந்த ஆக்கம் இது. 
...........................................................................................................................................................................................


இந்தியாவின் தெற்கிலும் இலங்கையின் வட கிழக்கிலும் பூர்வீகமாகத் பல்லாயிரம் ஆண்டு தொடர் வாழ்வைக் கொண்டது தமிழர்களது இருப்பு. இந்த நீண்ட தொடர் பயணத்தில் ஐந்திணைத் தமிழ், சைவத் தமிழ், சமணத் தமிழ், பௌத்தத் தமிழ், இஸ்லாம் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இந்துத் தமிழ், பிரதேசத் தமிழ், நவீனத் தமிழ் என விரிவடையும் பன்முகத் தன்மையைக் கொண்டிருக்கிறது. இப்போது புவியெங்கும் பரவிய நீட்சியுடையதாகித் தொடர்கிறது. உலகத் தொடர்பாடல் கருவிகளில் பயன்படுத்தும் வாழும்  உலகமொழியாக ‘தமிழ்’ வழக்கிலுள்ளது.
« உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன. இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை. »  எனும் சென்ற நூற்றாண்டில் தமிழில் திறனாய்வுத்துறையை முன்னெடுத்த பேராசிரியர் க. கைலாசபதியின் கூற்றை நாம் கவனம் கொள்ளல் பொருத்தம்.

இங்கு நமக்குள்ளான அரசியல் மதம் சாதிய பிரதேச பிராந்திய தேச வேறுபாடுகளைத் தவிர்த்த ‘தமிழ்’ ஒன்றித்தலென்பதே இன்றைய - எதிர்காலத் தேவையாகும்.

மண்ணோடிணைந்த வாழ்வில் வீட்டு முற்றத்தில் தனித்த ‘தைப் பொங்கல்’ பொருத்தமாக இருந்தது. இன்றைய அடுக்குமாடி இருப்புகளில் நான்கு சுவர்களுக்குள் முற்றமில்லாத வெளியில் அடுப்படிப் பொங்கல் தைப்பொங்கலாகுமா ? மாற்றமொன்றே மாறாதது எனும் இயங்கியல் இயல்பைக் கொண்டதாக நகர – மாநகர வாழ்வைப் பெற்ற புதுமையான கூட்டுப் பொங்கலிடும் முறைமையைக் கண்டடையலாம். இத்தகைய கூட்டு ஒன்றித்தலில் நமக்கான தொன்மமும் தொடர்ச்சியுமான உணவு – உடை – கலை பண்பாட்டு அரங்குகளாக வடிவமைக்கலாம். இத்தகைய சங்கமித்தல்களில் பிற இனக்குழுமங்களை வரவழைத்து எமையும் எமது பண்பாட்டையும் புரியும் களமாக்கி மனித நேயப் புரிந்துணர்வை மேம்படுத்தலாம்.
*********


ஈழத்தமிழர்களாய் 1980களில் புலம்பெயர்ந்து நீட்சியுறும் எமது வாழ்வில், எம் அடுத்த தலைமுறையினர் புலம்பெயர் தமிழராய்- உலகத்தமிழர்களாய் புதிய சந்ததியினராகப் பரிணமிக்கத் தொடங்கியும் விட்டனர். பல்லின, பல்தேசிய மக்களுடன் வாழத் தலைப்பட்டுள்ள புலம்பெயர்வு வாழ்தலின் நீட்சியில் இந்தப் புதிய அடையாள ஒன்றிணைவு அவசியமாகிறது. இதனை மையமிடும் தைப்பொங்கல் பொது நிகழ்வரங்கம் - தமிழால் ஒருத்துவமாகி அரசியல், சாதி, மதம், பிரதேசம், தேசம் மற்றும் அரசியல்- வர்க்க பேதம் கடந்ததாகச் சங்கமிக்கிறது. இது எம்மைப் பற்றிய புரிதலை எம் சந்ததியினருக்கும், இங்கு வாழும் ஏனைய பல்தேசிய, பல்லின மக்களுக்கும் இதமான புரிதலுக்கு வழிசமைக்கிறது.

பிரான்சில் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடரப்படும் ‘பானை வைத்துப் பொங்கலிடும்’ பொது நிகழ்வரங்கத்தினூடாக, மனித வாழ்வுக்கான அறநூலாகிய திருக்குறளும் திருவள்ளுவரும் முன்னிறுத்தப்பட்டு, தைப்பொங்கல் தமிழர் திருநாளாக புலம்பெயர் திருநாளாக எமக்கான பண்பாட்டு அடையாள நிகழ்வாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது. இது எமக்கான பொதுப் பண்பாட்டுக் குறியீடாக, அரசியல், சாதி, மத, பிரதேச, தேசம் போன்ற பேதங்கள் கடந்த காட்சி அரங்காக நிகழ்த்தப்படுகிறது.

எமது தொன்மச் சமூகத்தினர் கண்டடைந்து தொடரும் இயற்கையுடன் இயைந்த மானிட வாழ்வைக் குறித்து - இயற்கைக்கு நன்றி பாராட்டி மகிழும் நன்னாள் பொங்கல் திருநாள்இன்று தேசங்கள் கடந்து -கண்டங்கள் கடந்து - நூற்றாண்டுகள் பல கடந்து தொடரும் சமூக பண்பாட்டு நிகழ்வுத் தொடராக எமையெல்லாம் ஒன்றிணைக்கிறது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334 - நிலையாமை)
"தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை - தொடர்ச்சியில் உள்ளது"
- இந்தத் தொடர்ச்சியில் தற்போதைய வாழ்வில் நமது பங்கு என்ன? 
- வாழும் தமிழ்தான் எமக்கான தொன்மையும் தொடர்ச்சியுமான தனித்துவ அடையாளம்!!
« யாதும் ஊரே யாவரும் கேளிர் »

'தை பிறந்தால் வழி பிறக்கும்!' என எம்மவர் வாழ்வில் முன்னோர்களால் விட்டுச் சென்ற முதுமொழியின் வழி எம்மவர் வாழ்வுத் தளத்தில் புதிய நம்பிக்கை வாழ்வாதாரம் கிட்டடும்!
நீண்டு செல்லும் தமிழர் வாழ்வில் இயற்கையின் சீற்றத்தாலும் மானிடக் கொடூரங்களாலும் கண்ட அழிவுகள் பலவாயினும் அவற்றையும் கடந்து எதிர்கொண்டு வாழும் நம்பிக்கையூட்டும் நன்னாள் பொங்கல் நாள் !
பழையன கழிந்து புதியன புகட்டும்!
எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்!!
இனிய தைப் பொங்கல் – தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!
தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்!!

000000

பாரீசில் இந்த ஆண்டு 12வது நிகழ்வரங்காக சிலம்புச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் 
புலம்பெயர் தமிழர் திருநாள் 2018

000000


-        க.முகுந்தன் (பிரான்சு சிலம்புச் சங்கத்தின் நிறுவனர்) ஐரோப்பியக் கண்டத்தில் பிரான்சில் முதல் தடவையாக பானை வைத்து கூட்டுப்பொங்கலிட்டு தைப்பொங்கலை ‘தமிழர் திருநாள்’ என முன்னெடுத்த சங்கம். இது 12வது நிகழ்வரங்கை பாரீசு பெருநகர மையத்தில் எதிர்வரும் 14.01.2018 அன்று நிகழ்த்துகிறது.
    


     தகவல் முகுந்தன் பாரீசு 14.01.2018